கிழக்கு மாகாணத்தில் இருதய நோயாளர்கள் என்ஜியோகிராம் பரிசோதனை மேற்கொள்ள ஒரு வைத்தியசாலையில் கூட அந்த வசதி இல்லை. யாழ்ப்பாண வைத்தியசாலைக்கே செல்லவேண்டி இருக்கின்றனர். அதனால் இது தொடர்பில் கவனம் செலுத்தி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இந்த வசதியை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்,
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (6) இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
கிழக்கு மாகாணத்தில் இருதய நோயாளர்கள் அதிகமாக இருக்கின்றனர். ஆனால் அவர்கள் அதுதொடர்பான பரிசோதனை செய்வதற்கு கிழக்கு மாகாணத்தில் அரச வைத்தியசாலைகள் எதிலும் அந்த வசதிகள் இல்லை. கிழக்கில் இருக்கும் மிகப்பெரிய வைத்தியசாலையான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கூட அந்த வசதி இல்லை. கிழக்கு மாகாணத்தில் இருக்கும் இருதய நோயாளர்கள் இந்த பரிசோதனையை மேற்கொள்ள யாழ்ப்பாண வைத்தியசாலைக்கே அனுப்பப்படுகின்றனர். இதனால் யாழ்ப்பாண வைத்தியசாலை ஒட்டுமொத்த வடக்கு கிழக்கு இருதய நோயாளர்களுக்கும் இந்த பரிசோதனையை மேற்கொள்ள இருப்பதால் ஒரு மாதத்துக்கு 8 பேருக்கே அவர்கள் பரிசோதனைக்கு அனுமதி வழங்குகிறார்கள்.
இதன்காரணமாக ஆயிரக்கணக்கான நோயாளர்கள் ஒன்றரை அல்லது இரண்டுவருடங்கள் வரை காத்திருக்க வேண்டி இருக்கின்றனர். அதற்கிடையில் நூக்கணக்கான நோயாளர்கள் மரணித்து விடுகின்றனர். அதனால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் என்ஜியோகிராம் பரிசோதனையை மேற்கொள்ள முடியுமான வசதியை செய்துகொடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
0 comments :
Post a Comment