சம்மாந்துறையில் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!ஐ.எல்.எம் நாஸிம்-
ம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்திற்கு புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ளவரின் நியமனத்தை இரத்துச் செய்து ஏற்கனவே கடமையாற்றிக் கொண்டிருக்கின்றவரை தொடர்ந்தும் பணியாற்றும் வகையில் நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரியும் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலத்திற்கு முன்னால் அமைதிப் போராட்டமொன்று இன்று (3) காலை (8.30 மணிமுதல் 9.45 மணிவரை) நடைபெற்றது.
இவ்வாறு அமைதிப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜெயலத் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் மேற்படி போராட்டம் பொதுப் போக்குவரத்து மற்றும் வலயக் கல்வி அலுவலக அதிகாரிகளின் வருகைக்கு தடையாக அமையும் என்பதால் போராட்டத்திற்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறு தாக்கல் செய்த மனுவுக்கு அமைவாக நீதிவானின் தடையுத்தரவு வாசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதனிடையே இன்று முற்பகல் 11மணியளவில் புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதே வேளை, புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனத்திற்கு எதிராக சம்மாந்துறை நகர் பிரதேசத்தில் கடைகளை அடைத்து எதிர்ப்பு தெரிவிக்குமாறு நேற்று இரவு துண்டு பிரசுரமொன்றின் மூலமாக கோரப்பட்டது.
இன்று காலை முதல் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்பாக பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இப்போராட்டம் குறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.மன்சூர், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.எல்.மாஹீர், சம்மாந்துறை சூறா சபையின் தவிசாளர் டொக்டர் ஏ.எம்.ஏ.றஸீட் ஆகியோர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
இதன் போது, நாங்கள் தமிழ் அதிகாரி நியமனம் செய்தமையை எதிர்க்கவில்லை. சம்மாந்துறையில் நீர்ப்பாசன திணைக்களம், தொழில்நுட்பக் கல்லூரி, மல்வத்தை கமநல மத்திய நிலையம் ஆகியவற்றில் பொறுப்பதிகாரிகளாக தமிழ், சிங்கள அதிகாரிகள் உள்ளனர்.
ஆனால், இவரை எதிர்ப்பதற்கு காரணம், இவர் திறமையற்றவர். இவரை அவரது பிரதேச மக்களே திறமையற்றவர் என்று வேண்டாமென்று தெரிவித்த நிலையில் சம்மாந்துறைக்கு நியமனம் செய்தமையை ஏற்றுக் கொள்ள முடியாது.
மேலும், கிழக்கு மாகாணத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனங்கள், அந்த வலயங்களில் உள்ள பெரும்பான்மையினத்திற்கு அமைவாகவே இதுவரை நடைபெற்று வந்துள்ளது. தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள வலயங்களுக்கு தமிழ் அதிகாரியும், சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ள வலயங்களில் சிங்கள அதிகாரிகளும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற வலயங்களில் முஸ்லிம் அதிகாரிகளும் கல்விப் பணிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்த நடைமுறை சம்மாந்துறையிலும் பின்பற்றப்பட வேண்டும். சம்மாந்துறை வலயக் கல்வி பிரதேசம் 90 வீதம் முஸ்லிம்களை கொண்டதாகும்.
இதே வேளை, கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிரான கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது, சுலோகங்களும் காணப்பட்டன.
கிழக்கு மாகாண ஆளுநர் பாரபட்சமாக நடந்து கொண்டிருக்கின்றார். அவர் கிழக்கு மாகாணத்தில் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார். அதனால் ஜனாதிபதி அவரை ஆளுநர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென்றும் தெரிவித்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :