இலங்கையின் சுகாதார சேவைகளின் வரலாறும், கிழக்குக் கரையின் சுகாதாரமும் .- டாக்டர் கியாஸ் சம்சுடீன்



தொடர் 08

மருத்துவ கட்டமைப்பு அதன் வரலாறு மற்றும் வளர்ச்சி

ஒப்பீட்டளவில் குறைந்த தனிநபர் வருமானம் கொண்ட அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாக இருந்தாலும், எமது தேசம் ஆசிய பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளில் ஆரோக்கியமான வாழ்க்கைத்தரத்தை மக்களுக்கு வழங்கி வருவதில் அண்மைக்காலம் வரை வெற்றியும் கண்டது.
இது அரசு இலவச கல்வி மற்றும் இலவச சுகாதார சேவைகளை வழங்குவதில் ஏற்படுத்திய நன்மையான தாக்கமாக கருத்தப்படுகிறது.

உயர்ந்த ஆயுட்கால எதிர்பார்ப்பு, குறைந்த தாய் சேய் இறப்பு விகிதம், போன்ற நிலையான நல்வாழ்வின் குறியீடுகளால் அளவிடப்படும் இலங்கை மக்களின் சுகாதார நிலை, சில வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் சாதகமாக உள்ளது.
எமது தாய் நாட்டின் மருத்துவ கட்டமைப்பு மற்றும் அதன் வரலாறு, பல தசாப்த கால மக்களின் தேவைகள், அரசியல் கோரிக்கைகள் மற்றும் ஒரு வரலாற்று மரபு ஆகியவற்றின் விளைவாகும்.

இக் கட்டமைப்பு பல நூற்றாண்டுகளாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவ முறைமைகள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

அவற்றில் சில நாட்டிற்கே உரிய தனித்துவமான "தேஷிய சிக்கித்சா" என்று அழைக்கப்படும் உள்நாட்டு மருத்துவ முறை மற்றும் வட இந்தியாவின் ஆயுர்வேதம், தென்னிந்தியாவின் சித்த வைத்தியம் அதேபோல அரபு யுனானி முறைமை

இது தவிரவும் அந்நியர் ஆட்சியின் பயனாக வந்த ஆங்கில (அலோபதி) மருத்துவம் என பல்வேறு வைத்திய முறையின் ஒரு கலவையாகும்.

இலங்கையின் சுகாதார முறைமை மேற்கத்திய அலோபதி மற்றும் பிற பாரம்பரிய முறைகளை உள்ளடக்கியுள்ள போதிலும் மேற்கத்திய அலோபதி மருத்துவ முறைமையே பெரும்பான்மையான மக்களுக்கு சேவையாற்றுவதுடன் அதுவே பெரும்பான்மை மக்களின் தெரிவாக இருக்கின்றது.
மேற்கத்திய மருத்துவ முறையும், எமது பாரம்பரிய மருத்துவ முறையும் ஒன்றிலிருந்து மற்றோன்று அமைப்பு, நிர்வாகம், நிறுவனங்கள், மருத்துவக் கல்வி மற்றும் பயிற்சி, மருந்தியல், பணியாளர்கள் போன்றவை அனைத்தும் வேறுபட்டவை என்பதினால் முன்னர் இவை தனித்தனியான அமைச்சுக்கள் மூலம் நிர்வாகிக்கப்பட்ட போதும் மக்களிடையே சுதேச வைத்திய முறையை மீண்டும் பிரபல்யப் படுத்தும் நோக்குடன் தற்போது ஒரே அமைசின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தப்பட்ட
சிறந்த சுகாதார சேவைகளை இலவசமாக மக்களுக்கு வழங்குதல் போன்ற பொறுப்பை மன்னர்கள் காலத்திலிருந்து இன்றுவரை , அரசுக்களே ஏற்றுக்கொண்டன என்ற ரீதியில் இந்த மகத்தான பொறுப்பை நிறைவேற்ற ஆண்டாண்டு காலமாக எல்லா அரசுகளும் தங்களை அர்ப்பணித்து வந்திருக்கின்றன.

மருத்துவ வரலாறு.

இலங்கையின் மருத்துவ வரலாற்றை அதன் ஆட்சியாளர்களின் முக்கிய வரலாற்று காலகட்டங்களுடன் பிரித்து நோக்கலாம். வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் மருத்துவத்தின் நிலை,

பண்டைய மருத்துவ நடைமுறைகள், இலங்கை மன்னர்களின் கீழ் மருத்துவம், போர்த்துக்கேய, டச் மற்றும் ஆங்கிலேயர் காலம், சுதந்திரத்திற்கு பிந்திய காலம் என பல்வேறு காலகட்டங்களாக வகைப்படுத்த முடியும் .

நோய் மனிதகுலத்தைப் போலவே பழமையானது என்ற வகையில், இலங்கையில் வரலாற்றுக்கு முந்தைய மனிதன் நோய்க்கான தனது சொந்த அணுகுமுறையை உருவாக்கியிருக்கக் கூடும். இங்கு வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் மருத்துவத்தின் நிலை குறித்து எந்த தகவலும் இல்லை.

இலங்கை அதன் எழுதப்பட்ட பண்டைய வரலாற்றின் தொடக்கத்திலிருந்து 1815 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் கண்டி இராச்சியத்தை கைப்பற்றும் வரை சில கரையோர பிரதேசங்களை தவிர அதன் சொந்த மன்னர்களால் ஆளப்பட்டது.

எமது மன்னர்கள் மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதற்கான பொறுப்பை அவர்களே ஏற்றுக்கொண்டதாகவும், அதற்கான மருத்துவ முறையின் கட்டமைப்பு மற்றும் வைத்தியசாலைகள் பற்றிய கணிசமான தகவல்கள் இலக்கிய மற்றும் தொல்பொருள் ஆதாரங்களில் இருந்து கிடைப்பதாகவும் மேலத்தேய வைத்தியர் டாக்டர் சி.ஜி. ஊரகொட கூறுகிறார்.
போர்த்துக்கேயர்கள் முதன்முதலில் 1505 இல் கொழும்புக்கு வந்தனர். அந்த நேரத்தில் போர்த்துக்கேயர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட மருத்துவம் முற்றிலும் மேற்கத்தியமானது அல்ல, ஏனெனில் அது கிழக்கத்தேய பாணியையும்கொண்டிருந்தது. அவர்களின் ஒரு பகுதி மருத்துவ அறிவு ஸ்பெயினின் முஸ்லிம்களிடமிருந்து பெறப்பட்டது என டாக்டர் சி.ஜி. ஊரகொட மேலும் தெரிவிக்கிறார். ஆனாலும் அதை மேற்கத்தைய பாணி மருத்துவமுறை என பொதுவாக கருதலாம்.

போர்த்துக்கேயர் காலத்தை போலவே டச்சு காரர்களின் காலத்திலும் அந்த வைத்திய முறையே பின்பற்றப்பட்டது. டச்சுக்காரர்கள் 1656 இல் கொழும்பின் நீண்ட முற்றுகையைத் தோற்கடித்து கரையோர மாகாணங்களைக் கைப்பற்றினர்.
டச்சுக்காரர்கள் உள்ளுர் மருத்துவத்தில் ஏற்படுத்திய தாக்கம் போர்த்துக்கேயர்களைவிட ஒரு படி மேல் எனலாம். அவர்கள் போர்த்துக்கேயர்களைவிட அதிகமான மருத்துவமனைகளை நிறுவினார்கள். அது தங்கள் படைகள் கப்பல் பணியாளர்கள் மற்றும் நாட்டில் உள்ள ஏனைய டச்சுக்காரர்களுக்கு சேவை வழங்குவதை நோக்காகக் கொண்டிருந்தது.

மருத்துவமனைகள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களிலும் துறைமுக நகரங்களிலும் நிறுவப்பட்டன.

ஆங்கிலேயர்கள் 1796 இல் டச்சுக்காரர்களிடமிருந்து கரையோர மாகாணங்களைக் கைப்பற்றியதுடன் 1815 இல் கண்டி இராச்சியத்தையும் இணைத்து 1948 இல் நாடு சுதந்திரம் அடையும் வரை ஆட்சி செய்தனர்.

19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போதும் , ​​அரசாங்கம் நவீன மருத்துவ சேவைகளையே ஆதரித்தது.

போர்த்துகீசியர்கள் மற்றும் டச்சுக்காரர்கள் போலவே ஆங்கிலேயர்களும் முக்கியமாக தங்கள் இராணுவ பிரிவுகளுக்கும் காலனித்துவ ஊழியர்களுக்கும் சேவைகளை வழங்கினர். முக்கியமாக நிர்வாக உயரடுக்கினரதும், வெளிநாட்டு இராணுவத்தினரதும் ,இந்திய புலம்பெயர்ந்த தோட்டத் தொழிலாளர்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், பெரும்பாலும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களிலும், பெருந்தோட்ட மாவட்டங்களிலும் சுகாதார நிறுவனங்கள் நிறுவப்பட்டன. ஆனால் உள்நாட்டு மருத்துவத்தில் தங்கியிருந்த கிராமப்புற மக்களை பெரும்பாலும் புறக்கணித்தனர்.
அதனால் பிரித்தானியரின் ஆங்கில அலோபதி மருத்துவத்தின் ஆரம்ப கட்டம் இராணுவத்திற்கு சொந்தமானதாக இருந்தது. 1858 ஆம் ஆண்டில் ஒரு சிவில் மருத்துவத் துறை உருவாக்கப்பட்டதன் மூலம் அரசாங்க சுகாதார சேவைகள் தொடங்கப்பட்டன. இதன் மூலம் இராணுவக் கட்டுப்பாடற்ற ஒரு துறையால் பொதுமக்களுக்கு மருத்துவ வசதிகள் வழங்கப்பட்ட ஒரு புதிய காலகட்டம் பிறந்தது.

1858 ஆம் ஆண்டில் ஒரு சிவில் மருத்துவத் துறை தொடங்கப்பட்டு 1859 ஆம் ஆண்டில் முதன்மையாக நோயுற்றவர்களைக் கவனிப்பதற்காகவும் குறிப்பாக பெரியம்மை போன்ற தொற்று நோய்களை கட்டுப்படுத்துவதற் காகவும் தொடங்கப்பட்டது.

மேலும் 1913 ஆம் ஆண்டில் ஒரு சுகாதார பிரிவு உருவாக்கப்பட்டதன் மூலம் தற்போதைய சுகாதாரப் பாதுகாப்பு முறையின் அடித்தளம் பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் அமைக்கப்பட்டது.

தொடரும்......
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :