இலங்கையின் சுகாதார சேவைகளின் வரலாறும், கிழக்குக் கரையின் சுகாதாரமும் .- டாக்டர் கியாஸ் சம்சுடீன்



தொடர் 17

இலங்கையின் பழமையான கொழும்பு மருத்துவக் கல்லூரியின் வரலாற்றுப் பார்வை



1835 இல் மேற்கு வங்கத்தில் அமையப்பெற்ற தெற்காசியாவின் மிகப் பழமையான மருத்துவப் கல்லூரியான கல்கத்தா மருத்துவ கல்லூரிக்கு அடுத்து இரண்டாவது பழமையான மருத்துவக் கல்லூரியாக 1870 இல் அமைக்கப்பட்ட எமது கொழும்பு மருத்துவ கல்லூரி இந்நாட்டின் பல்கலைக்கழகக் கல்வியின் முன்னோடியாகவும் திகழ்கிறது .

ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலமாக தீவின் ஒரே மருத்துவக் கல்லூரியாக இருந்த இக் கல்லூரி இந்நாட்டின் சுகாதார சேவைகள் வழங்குவத்தில் , முதுகெலும்பாக திகழ்ந்து பாரிய பங்களிப்பை செய்திருக்கிறது.

சிலோனில் மருத்துவக் கல்லூரி அமைக்கும் யோசனை கவர்னர் சேர் ஜார்ஜ் ஆண்டர்சனுடையது (1852) எனினும் அது வெறும் யோசனையாகவே இருந்தது. பின்னர் வந்த கவர்னர் சேர் ஹென்றி வார்ட் இந்த யோசனையையும் முன்னாள் ஒப்சேவர் பத்திரிகை தலைவரும் 1858 ம் ஆண்டின் முதன்மை சிவில் மருத்துவ அதிகாரியுமான டாக்டர் சி எலியாட்டின் பரிந்துரையையும் கணக்கிலெடுக்கவில்லை.

1867 இல் காலனித்துவ அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஜேம்ஸ் லூஸ் வன்னியின் மக்கள்தொகைப் திடீரென குறைவடைந்தது பற்றித் ஆய்வுசெய்யும்படி ஆளுநர் சேர் ஹெர்குலிஸ் ரொபின்சன் அவர்களின் உத்தரவுக்கமைய முதன்மை சிவில் மருத்துவ அதிகாரி (PCMO) டாக்டர் டபிள்யூ.பி சார்ஸ்லியினால் கோரப்பட்டார். அக்காலப்பகுதியில் வன்னி பிரதேசத்தில் நிகழ்ந்த பெருந்தொற்று காரணமாக அதிகரித்த இறப்புவிகிதத்திற்கு போதிய வைத்திய வசதிகள் இல்லாததுதான் காரணம் என கண்டறியப்பட்டதால் நாடளாவிய ரீதியில் மருத்துவ வசதிகள் இருக்க வேண்டும் என்றும், இதற்காக அரச மருத்துவப் பள்ளி திறக்கப்பட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

லூஸின் பரிந்துரைகளில் ஒன்றான மருத்துவக் கல்லூரி திட்டத்தை ஏற்றுக்கொண்ட ஆளுநர் சேர் ஹெர்குலஸ் ராபின்சன் கொழும்பு மருத்துவப் பள்ளியை அன்றைய பொது மருத்துவமனையின் பெண் அறுவை சிகிச்சை பிரிவில் ஜூன் 1, 1870 அன்று திறந்து வைத்தார்.

டாக்டர் ஜேம்ஸ் லூஸ் அதன் முதல் அதிபராக நியமிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார் இந்த மரியாதை கடின உழைப்புக்கு கிடைத்த வெகுமதியாகும்.

1875 இல் மத்திய மாகாணத்தின் காலனித்துவ அறுவை சிகிச்சை நிபுணராக நியமிக்கப்படும் வரைக்கும் இந்த பதிவியை அவர் வகித்தார். மேலும் டாக்டர் லூஸ் நோயியலுக்கான தங்கப் பதக்கம் மூலம் இன்றுவரை நினைவுகூரப்படுகிறார்.

1870 இல் தொடங்கப்பட்டதிலிருந்து 1942 வரை பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெறும் வரை, கல்லூரி ஒரு அரசாங்கத் துறையாக இருந்தது.

மேலும் கேற் முதலியார், திரு. ஜே திரு சி.எச்.டி சொய்சா அவர்கள் டீ சொய்சா மருத்துவ மனையை உருவாக்கி 1870 ஆம் ஆண்டு அரசாங்கத்திடம் சமர்ப்பித்தார், அங்கு மாணவர்கள் மகப்பேற்றியல் போதனைகளைப் பெற்றனர். 1870 ஆம் ஆண்டில், திரு சுசேவ் டி சொய்சா காலனித்துவ மருத்துவ நூலகம், நோயியல் அருங்காட்சியகம் மற்றும் உயிரியல் ஆய்வுக்கூடம் ஆகியவற்றைக் கொண்ட கல்லூரிக்குரிய கட்டிடத் தொகுதி ஒன்றை நன்கொடையாக வழங்கினார்.

 

1875 ஆம் ஆண்டு வாசல்(கேற்) முதலியார் சாம்சன் ராஜபக்ஷ அவர்கள் தற்போதைய பீடம் அமைந்துள்ள நிலத்தை அன்பளிப்பாக வழங்கினார்.

1899 ஆம் ஆண்டு திரு ஜே.டபிள்யூ. சார்ள்ஸ் டி சொய்சா அவர்களின் பெருந்தன்மையால் பாக்டீரியாவியல் நிறுவனம் கட்டப்பட்டது. கல்லூரியின் ஆரம்ப காலத்து கட்டிடங்கள் இப்போது இல்லை. கல்லூரியின் இரண்டாவது முதல்வரான டாக்டர் எட்வின் லாசன் கோச்சின் நினைவை நிலைநிறுத்துவதற்காக 1881 இல் அமைக்கப்பட்ட கோச் நினைவு மணிக்கூண்டு கோபுரம் மட்டுமே ஆரம்பகால அடையாளங்களில் எஞ்சியிருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, டாக்டர் கோச் இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருந்தார், மேலும் 1877 இல் தனது 40 வயதில் பிரேத பரிசோதனை செய்யும் போது ஏற்பட்ட காயத்தின் விளைவுகளால் இறந்தார்.

மருத்துவ பீடத்தைக் கொண்ட தற்போதைய கட்டிடங்களில், உடற்கூறியல் தொகுதி முக்கியமாக 1913 இல் கட்டப்பட்டது; உடலியல் தொகுதி 1930 இல் நிறைவடைந்தது; 1941 இல் நோய்க்குறியியல் தொகுதி மற்றும் 1954 இல் நிர்வாகத் தொகுதியும் கட்டப்பட்டது.

டாக்டர் எல் கோச் இறந்த பிறகு டாக்டர் ஜே.எல். வாண்டர்ஸ்ட்ரேட்டன் 1878 இல் அதிபராக நியமிக்கப்பட்டு சுமார் 21 ஆண்டுகள் அந்தப் பதவியில் பணியாற்றினார்.
மூன்று ஆசிரியர்கள் மற்றும் 25 மாணவர்களையும் கொண்டு 1870 இல் "தொடக்கப் பள்ளியாக"( Ceylon Medical School) தொடங்கப்பட்ட நிறுவனம் அக்கால அமெரிக்க ஐரோப்பிய பல்கலைக்கழகங்களை போலவே மூன்று வருட கால டிப்ளமோ படிப்பை வழங்கியது, 1873 இல் பாடநெறி நான்கு ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, முதன்மை சிவில் மருத்துவ அதிகாரி மற்றும் மருத்துவமனைகளின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் டாக்டர் வில்லியம் ரேமண்ட் கின்சியின் பரிந்துரையின் பேரில் 1880 ஆம் ஆண்டில் மருத்துவப் பள்ளி செயல் ஆளுநர் சர் ஜான் டக்ளஸால் "கல்லூரி" (Ceylon Medical College) என்ற கௌரவத்திற்கு உயர்த்தப்பட்டு 1884 ஆம் ஆண்டில் பாடநெறி 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது.1942 இல் பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படும் வரை கொழும்பு மருத்துவ கல்லூரி வழங்கிய LMS(Cey) (Licentiate Medicine and Surgery) டிப்ளோமா

ஒரு மதிப்புமிக்க ஒன்றாகவே இருந்தது. அவர்களின் மருத்துவ அறிவின் தரம் கிரேட் பிரிட்டனின் மாகாண மருத்துவக் கல்லூரிகளை போலவே உயர்ந்ததாகக் கருதப்பட்டது. 1888 ஆம் ஆண்டு முதல், கல்லூரியின் உரிமதாரர்கள் தங்கள் பெயர்களுடன் LMS (Licentiate Medicine and Surgery) என்ற மூன்றெழுத்துகளை இணைக்க உரிமை பெற்றனர்.

1885 ஆம் ஆண்டில், மருத்துவப் பள்ளியின் போதனா மருத்துவமனையாக இருந்த கொழும்பு பொது மருத்துவமனை, 22 வார்டுகள், ஒரு வீட்டு மருத்துவர் மற்றும் ஒரு வீட்டு அறுவை சிகிச்சை நிபுணரால் வழிநடத்தப்பட்டது. 1892 இல் முதன்முறையாக பெண்கள் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர். முதல் பெண் உரிமம் பெற்றவர், 1893 இல் பள்ளியில் சேர்ந்த மிஸ் ஏ டி போயர் ஆவார்.

1924 இல், இலங்கை மருத்துவக் கல்லூரியின் கட்டுப்பாடு இலங்கை மருத்துவக் கல்லூரி கவுன்சில் என்ற சிறப்புக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

1942 ஆம் ஆண்டு கொழும்பு மருத்துவக் கல்லூரி பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெற்றது ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஆண்டில், இலங்கைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடமாக இணைக்கப்பட்டது. இந்த பெருமை சர் ஐவர் ஜென்னிங்ஸை சாரும். பல்கலைக்கழகத்தின் சுயாட்சியையும், அரசுத் துறையாக அல்லாமல் பல்கலைக்கழகமாக வளர்ச்சியடையும் சுதந்திரத்தையும் அவர் உறுதி செய்தார். LMS என்பது MBBS பட்டமாக மாற்றப்பட்டது.
இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கொழும்பு மருத்துவக் கல்லூரி இணைக்கப்பட்டதன் மூலம் அதன் "முதன்மை நிர்வாக அதிகாரி மற்றும் கல்வி அதிகாரி" பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரானார். எவ்வாறாயினும், மருத்துவ பீடத்தின் டீன் தான் கற்பித்தலை ஒழுங்கமைத்து, பீடத்தின் இயந்திரங்களை இயக்கினார்.

இம் மருத்துவ பீடத்தின் முதல் பீடாதிபதியாக (1942-1945) பேராசிரியர் WAE கருணாரத்ன இருந்தார். இரண்டாவது பீடாதிபதியான சேர் நிக்கோலஸ் ஆட்டிகல கொழும்பு மருத்துவ பீடத்தில் பல முன்னேற்றங்களுக்கு காரணமாக இருந்தார். அவர் டீனாக இருந்த காலத்தில்தான் முதன்முதலில் MD, MS மற்றும் MOG முதுகலை தேர்வுகள் நடத்தப்பட்டன. மேலும், அவர் துணைவேந்தராக இருந்த காலத்தில் குழந்தை மருத்துவம், பாக்டீரியாவியல், உயிர்வேதியியல், மருந்தியல் மற்றும் ஒட்டுண்ணியியல் துறைகளுக்கு தனித் துறைகள் உருவாக்கப்பட்டன. பேராசிரியர் OER அபயரத்ன கொழும்பு மருத்துவ பீடத்தின் மூன்றாவது பீடாதிபதியாக இருந்தார். அவர் 1954 முதல் 1967 வரை ஐந்து தொடர்ச்சியான மூன்று ஆண்டுகளுக்கு டீனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இலங்கையின் மருத்துவ தேவைகளை நிவர்த்தி செய்யுமுகமாக காலணித்துவ அரசால் இலங்கையின் சுகாதார துறைக்குரிய ஆளனி உருவாக்கும் நோக்கத்தை கொண்டு 1870 இல் ஆரம்பிக்கப்பட்ட "Ceylon Medical College" கல்லூரியில் மருத்துவத் துறை, மற்றும் மருந்தகங்கள் துறை என இரு துறைகள் இருந்தன.

தொடரும்...........
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :