இலங்கையின் சுகாதார சேவைகளின் வரலாறும், கிழக்குக் கரையின் சுகாதாரமும்.-டாக்டர் கியாஸ் சம்சுடீன்தொடர் 04
யுனானி மருத்துவ முறையின் வரலாற்று பரிணாமம்

ரேபிய, பாரசீக, துருக்கிய, இந்துஸ்தானிய மொழிகளில் யுனான் என அறியப்பட்ட பண்டைய கிரேக்கத்தில் உருவான யுனானி மருத்துவ முறை கிரேக்கர்களினால் எகிப்துக்கும் அதன் சகோதர நாகரிகமான மெசபடோமியாவிற்கும் எடுத்துச்செல்லப்பட்டு அரேபியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இது மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் மேலும் செழுமைப்படுத்தப்பட்டு பெரிதும் மேம்படுத்தப்பட்டது.

இந்த வைத்திய முறை அரேபியர்களைனால் உலகெங்கும் எடுத்துச்செல்லப் பட்டதால் 'அரபு மருத்துவம்' என்றும் அழைக்கப்படுகிறது.

யுனானி சிகிச்சையின் மூலிகை அடிப்படை பண்டைய எகிப்தில் அதன் ஆரம்பகால தோற்றுவிப்பாளர்களிடம் இருந்து அறியப்படுகிறது. மூலிகை சிகிச்சைக்கு மேலதிகமாக சிகிச்சையின் ஒரு முறையாக அறுவை சிகிச்சையைப் பயன்படுத்தவும் பண்டைய எகிப்தியர்கள் தொடங்கினர்.

பொதுவாக இதன் ஆரம்பம் 6ம் நூ ற்றாண்டு என சொல்லப்பட்டாலும் இது ஹிப்போகிரட்டீஸின் காலத்துக்குரியது.

"மருத்துவத்தின் தந்தை" என்று இன்றும் போற்றப்படும் போஹரத் (ஹிப்போகிரட்டீஸ் 460-360 BC) இந்த மருத்துவமுறையில் ஆதிக்கம் செலுத்தியவர்.
சிறந்த தத்துவஞானி அராஸ்து (அரிஸ்டாட்டில் 384-322 B.C) யுனானி மருத்துவத்தில் அடுத்த முக்கிய நபராக இருந்தார்.

'மருத்துவர்களின் இளவரசர்' என அழைக்கப்படும் ஜாலினூஸ் (கேலன் 131-210 கி.மு.) தனது உடற்கூறியல் அறிவை அரேபியர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

கிரேக்க-ரோமானிய நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, ஐரோப்பாவின் இருண்ட இடைக்காலத்தில் பரந்த அரபு மொழி பேசும் உலகம் அதன் அறிவியல் மற்றும் மருத்துவ சாதனைகளால் மனிதகுலத்திற்கு பெரும் சேவைகளை வழங்கியதாக வரலாறு எமக்கு சொல்லித்தருகிறது .

அந்தவகையில் நவீன மருத்துவ அபிவிருத்திக்கு பெரும் பங்காற்றிய

"நவீன மருத்துவத்தின் தந்தை" என கருத்தப்படும் இப்னு சினா (அவிசென்னா 937-1037) யுனானி மருத்துவ முறையில் மிகவும் பிரபலமான மருத்துவர் ஆவார். மருத்துவத்திற்கான அவரது பங்களிப்பில் "மருத்துவ நியதி" எனும் மருத்துவ பாடப்புத்தகம் ஒரு சிறந்த கலைக்களஞ்சியமாகும்.

இப்னு சினா போலவே அபு அல்-ஹசன் அலி இப்னு ரப்பான் தபரி, முஹம்மது இப்னு ஜகாரியா ராஸி(கி.பி. 865-925)(அம்மை நோயிலிருந்து பெரியம்மையை முதலில் வேறுபடுத்தியவர்), அபு சஹ்ல் மஸீஹி ஆகியோர் அந்தக் காலத்தின் மிகச் சிறந்த மருத்துவர்களாகும் . அலி இப்னு ஈசாவின் பணி கண் மருத்துவத் துறையில் ஒரு மைல்கல்.

அரேபியர்கள் மெட்டீரியா மருத்துவத் துறையில் (Materia Medica) மகத்தான பங்களிப்பை வழங்கினர், மேலும் 1,400 மருந்துகளை உள்ளடக்கிய கிதாப் அல்-ஜாமி'லி முஃப்ரதாத் அல்-அத்வியா வ-அல்-அக்தியா என பெயரிடப்பட்ட இபின் பைதாரின் படைப்புகளில் இதைத் தெளிவாகக் காணலாம். இந்த காலகட்டத்தின் சில நன்கு அறியப்பட்ட மருந்தியல் வல்லுநர்கள் இப்னு வாஃபித், இபின் ஜுல்ஜுல், அல்-காஃபிகி போன்றோராகும். இதே காலகட்டத்தில் மருந்து வேதியியல் அறிவியலின் தனித் துறையாக உருவாக்கம் பெற்று முதல் முறையாக மருந்தியலுடன் இணைக்கப்பட்டது. இந்த விடயத்தில் கெபர் (ஜாபிர் இப்னு ஹய்யான்) பெயர் குறிப்பிடத் தக்கது.

1 ஆம் நூற்றாண்டின் போது அரேபிய வணிகர்கள் இந்த முறையை இலங்கைக்கு கொண்டு வந்தனர். அரேபியர்களை தொடர்ந்து துருக்கியர்களும் இந்நாட்டில் யுனானி மருத்துவ முறையை இலங்கைக்கு அறிமுகம் செய்துவைத்தனர். நாடுகாண் பயணியான ஒட்டமான் பேரரசின்(உஸ்மானிய பேரரசு) சுல்தான் அலாவுத்தீனின் மகன் ஜாலாலுத்தீன் கிபி 880 அளவில் இலங்கைக்கு வந்து பர்பரீன் என்று அறியப்பட்ட பேருவளையில் குடியேறியதாக அறியப்படுகிறார். இவர் ஒரு ஒரு யுனானி வைத்தியர் என்பதால் ஒரு யுனானி வைத்தியசாலை ஒன்றையும் அங்கு நிறுவியதாக வரலாறு கூறுகிறது.

இலங்கையின் வரலாறு அரேபியர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட நோய்களுக்கான யுனானி சிகிச்சையின் வடிவத்தின் தாக்கத்தினாலும் கீர்த்தியினாலும் நிரம்பியுள்ளது.

பல சிங்கள அரசர்கள் காணிகளை அன்பளிப்பாக வழங்கி அரச வைத்தியர்களாக பல முஸ்லிம் மருத்துவர்களை வைத்திருந்தனர்.அதேபோல பாரசீக முஸ்லீம் மருத்துவர்கள் கிர்த்தி ஸ்ரீ ராஜசிங்க மன்னருக்கு சிங்கக் கொடியை பரிசாகவும் அளித்துமிருந்தனர்.

அரேபிய மருத்துவர்கள் எமது நாட்டின் பல்வேறு பண்டைய ராஜ்ஜியங்களின் அரசர்களுக்கு குடும்ப ஆலோசகர்களாக இருந்தனர் என்ற உண்மையை வரலாற்றாசிரியர் திருமதி லோர்னா தேவராஜன் தனது "த முஸ்லீம் ஒப் ஸ்ரீலங்கா" The Muslims of Srilanka என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

"கண்டிய யுகத்திலும் அதற்கு முந்திய காலப்பகுதிகளிலும் மருத்துவக் கலையில் சிறப்புற்று விளங்கியதோடு, வரலாற்று ரீதியாகவே பாராட்டும் பெற்றவர்கள் கோபாலச் சோனகர் எனப்படும் முஸ்லிம்களாவர்.

கோபாலச் சோனகர்கள் மொகலாயப் பட்டாணி என்னும் இனத்தைச்சார்ந்தவர்களாகக் கொள்ளப்படுகின்றனர்.பேராசிரியர் திருமதி லோர்னா தேவராஜன் குறிப்பின்படி 1236 இல் இலங்கையை ஆண்ட 2ம் பராக்கிரமபாகு மன்னன் தனது தனிப்பட்ட வைத்தியர்களாக யுனானி வைத்தியர்களை அனுப்பிவைக்குமாறு டெல்லி சுல்தானை வேண்டிக்கொண்டதற்கு இணங்க அன்றைய சிந்து பிரதேச 'கோப்' எனும் இடத்திலிருந்து வந்த இரு வைத்தியர்கள் கோப்பல வைத்தியர்கள் என அழைக்கப்பட்டது பற்றியும் அவர்களின் சந்ததியினரே கோபாலச் சோனகர்கள் எனவும் அறிய முடிகிறது.

இவர்கள் கண்டிய அரசர்களுடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தார்கள். ஏனைய கருமங்களில் விசேட திறமையைக் காட்டியது போலவே , சிங்கள மன்னர்களுக்கு வைத்திய பணி புரிந்து, கௌரவ நாமங்களையும், காணிகளையும் நன்கொடையாகப் பெற்றுக் கொண்டார்கள். அந்த இடங்களில் இன்றும், அவர்களது பரம்பரையினர் அப்பட்டப்பெயர்களைத் தமது பெயர்களுடன் இணைத்து, மன்னர் காலத்தில் பெற்ற மதிப்பைப் பறைசாற்றி வருகின்றனர்.
இதை உறுதிப்படுத்துமுகமாக , யட்டிநுவர தெஹியங்க என்னும் கிராமத்தில் ராஜகருண வைத்திய திலக கோபால முதியன்சேலாகே சேகு அப்துல் காதர் உடையார் என்பவரது பரம்பரையினர் வாழ்வதை குறிப்பிடலாம்.

கண்டிய இராச்சியத்திலே குருநாகலைப் பிரதேசத்தில் இவ்வைத்தியத்துறை முஸ்லிம்கள் அதிகமாக குடியேறியிருந்தனர். இன்றும் மிரிஹம்பிட்டியா என்ற ஊரில் கோபாலச் சோனகரது குடியேற்றங்கள் அதிகமாக உள்ளன. இவர்கள் கோபல முதியன்சே என்ற பரம்பரைப் பெயரைத் தமது பெயருடன் பயன்படுத்துகின்றார்கள். இவர்கள் தமது மூதாதையர் வாழ்ந்த வீட்டை கோபல கெதர என்னும் பெயர் சொல்லி அழைக்கின்றார்கள்.

குருநாகலைப் பிரதேசத்தில் கொப்பல்லாவ என்னும் கிராமம், கோபால சோனகருக்கு கொடையாக வழங்கப்பட்டதாலேயே அப்பெயர் பெற்றதாக செவிவழிக் கதையொன்று உள்ளது.
இப்பிரதேசத்தில் இப்பாகமுவ என்ற ஊரில் வாழ்ந்த இக்பால் என்பவருக்கு கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்க மன்னனின் ஆட்சிக் காலத்தில், அரசாங்க மருந்துக் களஞ்சியத்தில் முகந்திரம் பதவி வழங்கி வைத்திய திலக ராஜகருண ராஜபக்ஸ கோபால முதியன்சே என்ற விசேட விருதும் வழங்கப் பட்டுள்ளது. சப்ரகமுவை முஸ்லிம்கள் வைத்தியத் துறையில் சிறந்து விளங்கியமைக்கான பல சான்றுகள் உள்ளன. ஹெம்மாதகமை என்ற கிராமத்தில் விக்ரம ராஜகருண வாஸல வைத்திய திலக முதியன்ஸே ராலஹாமிலாகே சேகு அஹமது உடையார் சேகு முஹம்மது உடையார் (1876 -1967) என்பவர் ஒரு பரம்பரை வைத்தியராக வாழ்ந்து வந்தவராவார். இவரது மூதாதையர் கண்டிய மன்னனின் அரண்மனை வைத்தியராக பணியாற்றியமையால் வாஸல வைத்திய திலக என்னும் பட்டப் பெயரால் அழைக்கப்பட்டார்கள். இங்கு 'வாஸல' என்பது “ரஜவாஸல" அல்லது "மஹவாஸல" என மன்னனின் மாளிகையைக் குறிப்பிடும் பதமாகும்.

மேலும் ஜானப் ஏ. எம். நஜிமுதீன் அவர்களால் எழுதப்பெற்ற "கண்டி இராச்சிய முஸ்லிம்களின் சிங்கள வம்சாவளிப் பெயர்கள்" என்ற நூலில் புராதன கண்டி இராச்சியத்தில் வாழ்ந்த முஸ்லிம்களின் சிங்கள வம்சாவளிப் பெயர்கள் பற்றியும் அரசர்களால் முஸ்லீம் வைத்தியர்களுக்கு வாசல வைத்திய முதியன்சே என்ற நாமஞ் சூட்டி கௌரவிக்கப்பட்டவை பற்றியும்

அவர்களுக்கு அரசன் நிந்தகமாக காணிகளையும் வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது பற்றியும் விரிவாக குறிப்பிட்டுள்ளார்.

"வைத்திய திலக்க ராஜகருணா" என்பது கண்டிய மன்னனால் முஸ்லிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பட்டமாகும். மன்னனது அரச வைத்திய பணியை மேற்கொண்டவர்கள் பேத்கே

நிலமே என்ற பதவியையும் முஸ்லிம்கள் வகித்துள்ளார்கள். இவர்களது பரம்பரையைச் சேர்ந்த வழித்தோன்றல்கள், மூதாதையரது வைத்தியக் கலையை தொடர்ந்து மேற்கொண்டும் வந்துள்ளார்கள். அத்துடன் தமது முன்னோருக்குக் கிடைத்த கெளரவப் பட்டங்கள் அடங்கிய வம்சாவளிப் பெயர்களையும் தமது பெயர்களோடு சேர்த்துக் கொண்டார்கள் என்றும் நஜிமுதீன் மேலும் குறிப்பிடுகிறார்.

மேலும் 1872 இற்கு முன் கெக்கிரி கொடை என்னும் கிராமத்தில் வாழ்ந்த "வைத்திய ரத்ன முதலியார் அஹமது லெப்பை ஹபீபு லெப்பை", குருநாகலை பிரதேசத்தில் 'ரம்புக்கத்தன' கிராம வாசியான உமர் லெப்பை வெத குருனனேஹே என்னும் வைத்திய பிரதானி பட்டத்தைச் சேர்த்திருந்தது பற்றியும் குறிப்பிடுகிறார்.
முஸ்லிம்கள் மிகுந்து வாழும் கலகெதர என்னும் ஊரில் கலுகல்ல வெதராலலாகே கெதர எனும் வம்சாவளிப் பெயரை தமது பெயருடனும்,யட்டிநுவர மெதபலாத்தை தெஹியங்கை என்னும் ஊரிலும் 'வெதராலலாகே கெதர' என்னும் பரம்பரைப் பெயரைக் கொண்டவர்கள் உள்ளதையும்

நாவலப்பிட்டிக்கு அருகில் உள்ள பலன்தொட்டை என்னும் சிற்றூரில் வெதராலலாகே சேகு அபூபக்கர் ஆராச்சி என்னும் பெயர்ப் பரம்பரை இன்றும் வழக்கில் உள்ளதாகவும்,

பேத்கே வளவ்வே என்னும் வம்சாவளிப் பெயருடன் அழைக்கப்படும் அவ்வூர் முஸ்லிம்கள் பற்றியும், உடுநுவரை வட்டதெனியாவில் வாழ்ந்த கீரப்பனை லிந்தைக் கொட்டுவை ஆதம்லெப்பை வெதராளை என்பவர் பரவணி காணிகள் பெற்று சிறப்புற்று வாழ்ந்தது பற்றியும் இவை போன்ற பல சுவாரஷ்யமான வரலாற்றுத் தகவல்களை குறிப்பிடுகிறார்.

தொடரும்.....
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :