அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட பிரதேசங்களை வழமை நிலைக்கு கொண்டு வரும் நோக்கில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம உள்ளிட்ட குழுவினர் (20) அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம உள்ளிட்ட குழுவினருடன் அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எச்.பி.அனீஸ், ஜனாதிபதி செயலக உயர் மட்ட அதிகாரி ஆர். நிசாந்தன், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஹமட் ஷாபிர், மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.எச்.ஏ.அஹ்மத், அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ் மற்றும் உலக உணவுத்திட்டத்தின் உயர்மட்ட அதிகாரிகளான சந்த்ரதிலக்க வீரசிங்க, டப்ளியு.எஸ்.ஐ.பெனாண்டோ, ஜெ.ஹெட்டியாராச்சி, எம்.நிஹ்மத் ஆகியோருடன் இன்னும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த குழுவினர் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் மற்றும் பல்கலைக்கழக பொறியியலாளர் எம்.எஸ்.எம். பஸில் ஆகியோருடன் விரிவான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதுடன் பாதிக்கப்பட்ட இடங்களையும் பார்வையிட்டனர். இங்கு கருத்து தெரிவித்த உபவேந்தர் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை சுமூக நிலைக்கு கொண்டு வர பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அவசரமாக புனரமைக்கப்பட வேண்டும் என்றும் எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்களில் இருந்து பல்கலைக்கழகத்தை பாதுகாக்க விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம தனது கருத்தில் தங்களது மாவட்ட செயலக மட்டத்தில் முடியுமான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் உறுதியளித்தார்.
0 comments :
Post a Comment