நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை மக்களுக்கு பகிர்ந்தளிப்பதில் நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும் : மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஹரீஸ் போர்க்கொடி



மாளிகைக்காடு நிருபர்-
வுதி அரேபிய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் அக்கரைப்பற்று பிரதேச நுரைச்சோலையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டத்தை தேவையுடைய மக்களுக்கு பகிர்ந்தளிப்பதில் உள்ள இழுபறியில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை ஏற்று தேசிய இன விகிதாசாரப்படி அந்த வீட்டுத் திட்டத்தை கையளிக்க வேண்டும் என எழுத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்க முடியாது என இன்றைய அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் வாதபிரதிவாதங்கள் எழுந்தது.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ. டக்ளஸ் அவர்களின் நெறிப்படுத்தலில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான டவலியு.டி. வீரசிங்க ஆகியோரின் இணைத்தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள், அரச உயரதிகாரிகளின் பங்குபற்றலுடன் அம்பாறை மாவட்ட செயலகத்தில் (12) நடைபெற்ற அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் நுரைச்சோலை பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டத்தை நாட்டின் தேசிய இன விகிதாசாரப்படி வழங்க முன்வர வேண்டும் என்றும் அதுவே உச்சநீதிமன்ற தீர்ப்பாக உள்ளதாகவும் அந்த கூட்டத்தில் எழுத்து மூல கோரிக்கை முன்வைக்கப்பட்டு அந்த கோரிக்கைக்கு ஆதரவாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அந்த கூற்றை மறுதலித்து இந்த தீர்மானம் மனசாட்சிக்கு முரணானதென்றும் அந்த வீட்டுத்திட்டத்தை நாட்டின் தேசிய இன விகிதாசாரப்படி வழங்க முடியாதென்றும் அக்கரைப்பற்று பிரதேசத்தில் வாழும் மக்களின் இன விகிதாசாரப்படியே வழங்க வேண்டும் என்றும் வாதிட்டார். இந்த வீட்டுத்திட்டங்கள் அக்கரைப்பற்று பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சவூதி அரசாங்கம் வழங்கிய உதவி. இந்த வீட்டுத்திட்டத்தை மக்களுக்கு பகிர்ந்தளிப்பதில் உள்ள இழுபறியால் சவூதி- இலங்கை நட்புறவுக்கும் ஆபத்து ஏட்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த வீட்டுத்திட்ட விடயம் தொடர்பில் சவூதி மன்னர் அதிருப்தியில் உள்ளதாக இலங்கைக்கான சவூதி தூதுவர் எங்களிடம் பலமுறை கூறியுள்ளார். இந்த வீட்டுத்திட்டங்களை மனிதாபிமானமே இல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்காமல் எங்கோ இருக்கும் சம்பந்தமே இல்லாத மக்களுக்கு வீடுகளை கையளிக்க முனைவது ஏற்றுக்கொள்ள முடியென்றும் வாதிட்டார்.

இது உச்சநீதிமன்றத்துடன் தொடர்புபட்ட விடயமாக உள்ளதால் இந்த விடயத்தில் உள்ள நியாயங்களை எடுத்துரைக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டமா அதிபரை சந்தித்து பேச வேண்டும். அதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண ஆளுநரையும் அவர் இவ்வேளையில் கேட்டுக்கொண்டார்.
இது விடயமாக சட்டமா அதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட உயர்மட்டங்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து பேச தான் துரிதகதியில் ஏற்பாடுகளை செய்வதாக கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் இதன்போது உறுதியளித்தார்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் 4000க்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் இருக்கத்தக்கதாக கிழக்குக்கு வெளியே ஆசிரியர்களை நியமிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பிலும், கிழக்கில் ஆசிரிய ஆளணி வெற்றிடம் இருக்கத்தக்கதாக மாகாண கல்வி அமைச்சு அனுப்பியுள்ள கிழக்கு மாகாண ஆளணி தொடர்பிலான அறிக்கைகளை சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தனது கண்டனங்களை பதிவு செய்ததுடன் ஆசிரிய வெற்றிட்டங்களை நிரப்பி கிழக்கின் கல்வி மேம்பாட்டை உறுதிப்படுத்த கல்வியற் கல்லூரி ஆசிரியர்களை கிழக்கில் நியமனம் செய்ய தேவையான நடவடிக்கைகளை உரியவர்களிடம் பேசி எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இந்த மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஷை தவிர அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வேறு எந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :