கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற ஊழல் தொடர்பில் குற்றமிழைத்தவர்களை முறையாக விசாரணை செய்து குற்றத்தை நிரூபித்து அவர்களுக்கான உரிய தண்டனைகளை பெற்றுக்கொடுக்க கல்முனை மாநகர சபை தயாராக இருப்பதாகவும், அவற்றை கையாள உதவி ஆணையாளர், கணக்காளர், பொறியியலாளர், பிரதம இலிகிதர் அடங்கிய குழுவொன்றை அமைந்துள்ளதாகவும், சட்ட நடவடிக்கைகளுக்கான விடயங்கள் முனைப்புடன் இடம்பெறுவதாகவும் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தெரிவித்தார்.
கல்முனையான்ஸ் போரம் அமைப்பின் பிரதான ஒருங்கமைப்பாளர் முபாரிஸ் எம் ஹனிபா தலைமையிலான கல்முனையான்ஸ் போரம் அமைப்பினரும், கல்முனை பிரதேச சமூக செயற்பாட்டாளர்களும் இன்று காலை கல்முனை மாநகர ஆணையாளரை சந்தித்து கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் கேட்டறிந்து, மகஜரொன்றை கையளித்தனர். இந்த சந்திப்பின் போது கருத்து தெரிவித்த போதே ஆணையாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபையில் 78 லட்சம் அளவில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அந்த பெறுமதி 1.9 கோடி அளவில் உள்ளது போன்ற அறிக்கைகள் கிடைத்துள்ளதாவும் தெரிவித்த ஆணையாளர் அந்த பெறுமதி கணனி தரவு உட்புகுத்துகையின் போது ஏற்பட்ட வலுத்தொகையா அல்லது ஊழலா என்பது பற்றி விசாரணைகளை மேற்கொள்ள உயர்மட்ட அதிகாரிகளின் உதவியை நாடியுள்ளோம். இந்த விடயம் தொடர்பில் கணனி தொழிநுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழுவொன்றை விசாரணைக்கு நியமிக்குமாறு உள்ளுராட்சி திணைக்களத்தை கோரியுள்ளோம். கல்முனை பொலிஸில் கடந்த 20ம் திகதியும், அம்பாறை விசேட குற்றத்தடுப்பு பிரிவில் 25ம் திகதியும் முறைப்பாடு செய்துள்ளோம்.
இதுவரை சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டமை குறித்து மக்கள் பொலிஸாரிடம் தான் கேட்கவேண்டும். சட்டநடவடிக்கைக்கு தேவையான சகல ஆவணங்களையும் பொலிஸார் கோரினால் வழங்க எப்போதும் தயாராக உள்ளோம். முகவர்கள் மற்றும் போலியான நபர்களிடம் பொதுமக்கள் பணத்தை செலுத்த வேண்டாம் என்றும் நேரடியாக சபைக்கு வந்து காசாளரிடம் தமது கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளுமாறும், வரி சேகரிக்க வரும் கல்முனை மாநகர சபை ஊழியர்களிடம் தமது நிலுவைகளை கேட்டறிந்து கொள்ளுமாறும் மக்களை கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பில் மேலதிக விடயங்களை கேட்டறிந்து கொள்ள கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். றம்ஸின் பக்கீரை சந்தித்த கல்முனையன்ஸ் போரம் அமைப்பினர் இதுவரை எடுத்துள்ள சட்டநடவடிக்கைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர். அரச நிதி மோசடி இடம்பெற்றுள்ளதால் இது தொடர்பில் விசாரிக்க எங்களை விட அதிகாரம் கூடிய விசேட குற்றத்தடுப்பு பிரிவு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், சந்தேகநபர்கள் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முடியாதவகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். றம்ஸின் பக்கீர் தெரிவித்தார்.
சந்திப்புக்களின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட கல்முனையன்ஸ் போரம் பிரதான ஒருங்கமைப்பாளர் முபாரிஸ் எம் ஹனிபா, இந்த ஊழல் தொடர்பில் தாமும் கல்முனை மக்களும் விழிப்பாக இருப்பதாகவும் ஊழல்களை இல்லாதொழிக்க கல்முனை மக்கள் முன்வர வேண்டும் என்றும், விரியிருப்பார்கள் தமது வரி தொடர்பிலான விடயங்களை கல்முனை மாநகர சபைக்கு நேரடியாக சென்று அறிந்து கொள்ளுமாறும் , தேவையானர்களுக்கு தேவையான உதவிகளை கல்முனையான்ஸ் போரம் வழங்க தயாராக இருப்பதாவும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment