அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று அம்பாரை மாவட்ட மக்கள் மனங்களில் ஆழப்பதிந்துள்ளது. அதனாலே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி அம்பாரை மாவட்டத்தில் அதிகமான சபைகளை கைப்பற்றும் என்கின்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது என வேட்பாளர் எஸ்.எல்.முனாஸ் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை அறபா வட்டாரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது போது உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்...
அம்பாரை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வளர்ச்சியினை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் அந்தக்கட்சி அரிசி கொடுப்பதாக போலிப்பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர். இவ்வாறு போலிப் பிரச்சாரங்களைச் செய்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வளர்ச்சியினை கட்டுப்படுத்தலாம் என அவர்கள் நினைக்கின்றனர்.
நாம் வீடு வீடாகச்சென்று மக்களைச் சந்திக்கின்ற போது எமக்கு அமோக வரவேற்பும் ஆதரவும் கிடைக்கின்றது. இதனை சகித்துக்கொள்ள முடியாதவர்கள் சமூக ஊடகங்களில் எமக்கெதிரான கருத்துக்களை விதைக்கின்றனர். இவ்வாறு போலிப் பிரச்சாரங்களை செய்து மக்கள் காங்கிஸின் வளர்ச்சியினை இல்லாமல் செய்யலாம் என பகல் கனவு காண்கின்றனர். இது தொடர்பில் அம்பாரை மாவட்ட மக்கள் விழிப்பாகவுள்ளனர்.
போலிப் பிரச்சாரங்களை செய்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வெற்றி நிச்சயிக்கப்பட்டது. இதனை அறிந்துதான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்கள் அந்தக்கட்சியில் போட்டியிடுவதற்கு முன்வரவில்லை.
அதனால் அக்கட்சியினர் வேறு வட்டாரங்களில் உள்ளவர்களையும் மக்கள் அங்கீகாரம் இல்லாதவர்களையும் இத்தேர்தலில் நிறுத்தியுள்ளனர். குறிப்பாக வட்டார மக்களுக்கு பரீட்சியம் இல்லாதவர்களையும் மொட்டுக்கட்சியில் இருந்தவர்களுமே அவர்களுக்கு கைகொடுத்துள்ளனர்.
சுயேற்சைக் குழுக்களிலும் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட ஏனைய கட்சிகளில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து அதிருப்தியடைந்தவர்களே. இது அக்கட்சியின் வங்குரோத்து நிலையினை வெளிப்படுத்துகின்றது என்றார்.
0 comments :
Post a Comment