காரைதீவு மண்ணில் இதுவரை இடம்பெற்றிராதவகையில் பிரமாண்டமான முறையில் கல்விச் சாதனையாளர் கௌரவிப்பு விழா நேற்று முன்தினம் இடம் பெற்றது.
Tracks & Asco அமைப்பினர் இணைந்து காரைதீவு மண்ணில் உயர்தர பரீட்சையில் சித்தி பெற்று 2023 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட 27 மாணவர்களை கௌரவிக்கும் விழா, அமைப்பின் தலைவர் அ.விவேகானந்தராஜா தலைமையில் காரைதீவு விபுலானந்த கலாசார மண்டபத்தில் நேற்று முன்தினம் கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவில் முதன்மை அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக கல்வித்துறை ஓய்வு நிலை பேராசிரியர் கலாநிதி செ.அருள்மொழி கலந்து சிறப்பித்தார்.
கனடாவில் வாழும் காரைதீவைச் சேர்ந்த மண்பற்றாளர் வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி டாக்டர் அருளானந்தம் வரதராசா தலைமையிலான TRAKS ,ASCO & SEDAK அமைப்பினர் வருடாந்தம் நடாத்திவரும் இவ் ஊக்குவிப்பு செயற்பாட்டை முதன் முறையாக அரங்க விழாவாக ஏற்பாடு செய்திருந்தனர்.
அமைப்பின் செயலாளர் எஸ்.நந்தகுமார் வரவேற்புரை வழங்க, விழா நிகழ்ச்சிகளை உதவி கல்வி பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா நெறிப்படுத்தி தொகுத்தளித்தார்.
காரைதீவில் உயர்தர பரீட்சையில் மூன்று பாடங்களிலும் 3A சித்தி பெற்றமாணவிகளான லோகநாதன் புவித்ரா(மருத்துவம்), சகாதேவராஜா டிவானுஜா(மருத்துவம்) தங்கவடிவேல் டயானு(மருத்துவம்)
ரஜிநாதன் துர்க்கா (பொறியியல்) ஆகிய மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் வழங்கப்பட்டது.
மேலும்,ஒவ்வொரு துறையிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு 50 000/= ரூபாவும் அத்துடன் ,அகில இலங்கையில் உயிரியல் பிரிவில் முதலாம் இடம் பெற்ற காரைதீவைச் சேர்ந்த தமிழ்வண்ணன் துவாரகேஸ் அவர்களுக்கு இரண்டேகால் லட்சம் ரூபாய் பெறுமதியான தங்கப்பதக்கம் வழங்கி கௌரவப்படுத்தினர். நிதி அனுசரணையை அஸ்கோ அமைப்பும் ,காரைதீவிலிருந்து புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் பரோபகாரிகளும் வழங்கி இருந்தனர்.
நட்சத்திர அதிதிகளாக கிழக்கு மாகாண மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன், காரைதீவு பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன், கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்ப துறை பீடாதிபதி கலாநிதி
த.மதிவேந்தன், பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி டாக்டர் நடேசன் பகிரதன், பொது சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி டாக்டர் நடேசன் அகிலன்,வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.சாளினி, வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சகானுஜா, எந்திரி இ.துசாந்த் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
வித்திய அதிதியாக உதவி கல்வி பணிப்பாளர் ஆ.பார்த்தீபன்,
விஞ்சைமிகு அதிதிகளாக ஆசிரியர்களான ரி.தெய்வீகன், எஸ்.தேவகுமார், கே.ருத்திரமூர்த்தி,எஸ்.லிசிகரன்,எஸ்.உதயராஜா ஆகியோர் கலந்து
சிறப்பித்தனர். அமைப்பின் பொருளாளர் எம்.சுந்தரராஜன் உறுப்பினர் எஸ்.புவனேந்திரராஜா ஆகியோர் அமைப்பின் செயற்பாடுகள் பற்றி கூறினர்.
சாதனை மாணவர்களின் பெற்றோர்கள் உயர்தர மாணவர்கள் ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
0 comments :
Post a Comment