கல்முனை மாநகர சபை எல்லை நிர்ணயத்தில் சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை பிரதேசத்திற்கான எல்லை நிர்ணயத்தின் போது கல்முனை மாநகர முஸ்லிம் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அநீதிகள் தொடர்பிலும், அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் முஸ்லிங்களுக்கான முறையான எல்லை நிர்ணயம் ஒன்றை அமைக்கவேண்டியதும், வட்டார பிரிப்புகளின் ஒழுங்கமைந்த தேவைகள் தொடர்பிலும் கடந்த வெள்ளிக்கிழமை அம்பாறை அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தேசிய எல்லைநிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கும் விளக்கிய பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம். எம். ஹரீஸ் எல்லைநிர்ணய அறிக்கையில் மாற்றம் ஏற்படுத்த கோரிக்கை விடுத்திருந்தார்.
இதுவிடயமாக ஒரு வாரத்தில் இறுதியறிக்கை சமர்ப்பிக்கும் நோக்கில் திட்ட வரைபை வழங்கியிருந்தவர்களுடனான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 10ம் திகதி அம்பாறை அரசாங்க அதிபர் காரியாலயத்தில் அரசாங்க அதிபரின் தலைமையில் இடம்பெற உள்ளது. இது தொடர்பில் மேலதிக விடயங்களை ஆராந்து ஒழுங்கமைந்த வட்டார பிரிப்பை உருவாக்குவது தொடர்பிலும், சாய்ந்தமருது பிரதேச ஏனைய விடயங்கள் தொடர்பிலுமான கலந்துரையாடலொன்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் பங்கெடுப்புடன் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலின் போது சாய்ந்தமருது பிரதேச எல்லை நிர்ணயத்தில் மாவட்ட எல்லை நிர்ணய குழுவினர் மேற்கொண்டுள்ள பாராமுகமான செயற்பாடுகள் தொடர்பில் ஆழமாக கலந்துரையாடப்பட்டதுடன் அரசாங்க அதிபர் காரியாலயத்தில் நடைபெறவுள்ள எல்லை நிர்ணயம் சம்பந்தமான கூட்டத்தில் வலியுறுத்தவேண்டிய விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக், நிருவாக உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பளீல், நிர்வாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.நளீர், கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் ஏ.ஏ. பஷீர், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எப். நஸ்ரின் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். இன்று இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது சாய்ந்தமருது பொலிவாரியன் கிராமத்திற்கு தனியான கிராம நிலதாரி பிரிவை உருவாக்க பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் எடுத்த முயற்சிக்கு பிரதேச செயலாளர் மற்றும் செயலக அதிகாரிகள் நன்றி தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment