திருக்கோவில் பிரதேசம் மீண்டும் ஆபத்தில் !ம்பாறை மாவட்டத்தில் தனித் தமிழர் வாழும் பெரிய நிலப்பரப்புடன் கூடிய திருக்கோவில் கடலோரப் பிரதேசம் இல்மனைட் அகழ்வால் மீண்டும் ஆபத்தில் சிக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வு வேலைக்கு என்று கடந்த ஏழு வருடங்களாக ஒரு குறிப்பிட்ட பாரிய நிறுவனம் ( தம்சிலா நிறுவனம்) பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

இதன் போது அப்பகுதி மக்கள் பாரிய எதிர்ப்பலைகளை வெளியிட்டு ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதன் காரணமாக அவை நிறுத்தப்பட்டிருந்தது.

ஆனால் ,இன்று இலங்கையின் சமகால பொருளாதார நெருக்கடியை மையமாக வைத்து அரசாங்கத்துக்கு வருவாய் சேர்க்கும் நோக்குடன் மீண்டும் அகழ்வு பணி ஆரம்பிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆரம்பத்தில் தம்பட்டை தொடக்கம் உமிரி வரைக்கும் இந்த நிகழ்வு வேலைகள் ஆரம்பிக்கப்பட இருப்பதாக இருந்தது.

இருந்தாலும், சனச்செறிவு கூடிய பிரதேசங்களான தம்பட்டை தொடக்கம் விநாயகபுரம் போன்ற பகுதிகளில் இல்மனைட் அகழ்வு மேற்கொள்ள முடியாது என்று கூறப்பட்ட காரணத்தினால், தற்போது விநாயகபுரம் கோரைக்களப்பு தொடக்கம் உமிரி வரைக்குமான சுமார் 4 கிலோ மீட்டர் தூர கடலோர பகுதி இல்மனைட் அகழ்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிய வருகிறது.

எனினும் அந்த பிரதேச மக்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்த வண்ணமே இருக்கின்றார்கள் .

அரசஅதிகாரிகளும் அதற்கான பதில்களை தெரிவித்தவண்ணம் இருக்கின்றார்கள்.
இதனை ஆய்வு செய்த சுற்றுச்சூழல் அதிகார சபையும், கடலோர வளங்கள் பாதுகாப்பு திணைக்களமும் அகழ்விற்கு ஓரளவு சாதகமான பதிலை வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது .

ஆனால் ,இந்த அறிக்கையில் மக்களுக்கு எள்ளளவும் நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றது . அரசு சார்ந்து இந்த அறிக்கை வந்திருப்பதாக அவர்கள் கூறுகின்றார்கள்.
இன்னும் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் இதற்கு எந்த அங்கீகாரத்தையும் வழங்கவில்லை.
இதன் காரணமாக நடவடிக்கை தடைப்பட்டு வருகின்றது .அவர்களது ஒப்பமும் பெறப்பட்டால் மறுகணமே இவ் அகழ்வு ஆரம்பிக்கப்படலாம் என்று தெரியவருகிறது.
ஆஸ்திரேலியா நிதியுதவியுடன் தம்சிலா என்கின்ற பாரிய நிறுவனமே இதனை பாரிய முதலீட்டுடன் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் அலுவலகம் தாண்டியடி எனுமிடத்தில் இயங்கி வருவதாகவும் ,சில மக்களுக்கு உதவி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏலவே ,மக்களின் கருத்துக்கணிப்புகளை திருக்கோவில் பிரதேச செயலாளர் த. கஜேந்திரன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்திருந்ததால் அது நிறுத்தப்பட்டிருந்தது.

அதுமட்டுமல்ல, திருக்கோவில் பிரதேச சபையானது தவிசாளர். இ.வி.கமலராஜன் தலைமையில் நடைபெற்ற சபை அமர்வில் இந்த இல்மனைட் அகழ்வு இடம்பெறக்கூடாது என்று தீர்மானம் மேற்கொண்டிருந்தது.

அது மாத்திரமல்ல ,இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாட்டை மக்கள் சார்பாக முன்வைத்தது. அங்கு பலரும் அழைக்கப்பட்டு பிராந்திய ஆணையாளர் அசீஸினால் விசாரணை செய்யப்பட்டது .
அதன் பொழுது எடுக்கப்பட்ட தீர்மானமாக இந்த சுற்றுச்சூழல் அதிகார சபையின் அறிக்கை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அது அரசியல் சார்ந்து செய்யப்படுகிறது. எனவே சுதந்திரமான சுயாதீனஅறிக்கை தேவை. ஆகவே கிழக்கு பல்கலைக்கழகம் அல்லது தென்கிழக்கு பல்கலைக்கழகம் அல்லது யாழ்ப்பாண பல்கலைக்கழகம் சேர்ந்த புவியியல் ஆய்வாளர்கள் ஆய்வை மேற்கொண்டு ஒரு சுதந்திரமான அறிக்கையை பெற்றுக் கொள்ள வேண்டும் .அதன் பின்பு இந்த அகழ்வு தொடர்பாக தீர்மானம் எடுக்கலாம் என்று அங்கு கூறப்பட்டது .இதன் காரணமாகவும் இது தடைபட்டது.

உண்மையிலேயே ,இவ் அகழ்வு இடம்பெற்றால் கோரைக்களப்பு, விநாயகபுரம், பாலக்குடா ,உமிரி, சங்கமன்கிராமம், தாண்டியடி, கோமாரி ,மணல்சேனை, செல்வபுரம் ஆகிய தனித்தமிழ் ஏழைக் கிராமங்களின் 5000 குடும்பங்களுக்கு மேல் இந்த இல்மனைட் அகழ்வால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகின்றது.
இலங்கையின் பிரதான வளமாக கூறப்படுகின்ற கடல் ஆமை முட்டையிடுகின்ற பிரதேசமும் இதுதான். இப் பிரதேசத்தில் கடல் ஆமை முட்டைகள் கூடுதலாக இடப்படுகிறது .மேலும் இந்த பிரதேசத்தில் மரக்கறி செய்கை களப்பு நன்னீர் மீன்பிடி போன்றவை சிறப்பாக இடம் பெற்று வருகின்ற ஒரு கிராமிய பிரதேசமாகும்.

மேலும் ,வங்காள விரிகுடா கடலில் கற்பாறைகள் மிகவும் கூடுதலாக இருக்கிற பிரதேசமாக இப் பகுதி விளங்குகிறது. இப்போதும் 21 கப்பல்கள் இங்கு அமிழ்ந்து கிடப்பதாக சொல்லப்படுகிறது.

இவை எல்லாம் மொத்தமாக சூறையாடப்படுகின்ற ஒரு சம்பவமாக இதனை மக்கள் பார்க்கிறார்கள்.

இது இவ்வாறு இருக்க நூற்றுக்கு நூறு வீதம் தமிழ் மக்கள் வாழ்கின்ற தனித்தமிழ் பிரதேசம் எதற்காக தேர்வு செய்யப்பட்டது? என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
உண்மையில் இல்மனைட் அகழவேண்டுமானால் உகந்தைக்கு அப்பால் கிரிந்த அம்மாந்தோட்டை வரையிலான சுமார் 300 கிலோ மீட்டர் தூரமான கடலோரப் பிரதேசம் பொருத்தமானது.
ஏனெனில் , ஜனசந்தடியற்ற காட்டுப்பகுதி அது. அதிலே இந்த இல்மனைட் அகழ்வை எவ்வித பாதிப்பும் இன்றி மேற்கொள்ளலாமே.
அதை விட்டுவிட்டு இங்கு வந்து மக்கள் வாழ்கின்ற இடத்திலே இந்த அநியாயத்தை ஏன் செய்ய வருகிறார்கள்? என்று அந்த மக்கள் கேள்வி எழுப்பினார்கள் .

இந்தப் பிரதேசம் கடலும் களப்பும் அருகருகே உள்ள பிரதேசமாகும். இடையிலுள்ள மண்பரப்பை அகழ் ஒன்றாக சேர்ந்து இந்த கிராமங்கள் கடலுக்குள் வாங்கப்பட அபாயமும் இருக்கின்றது இதைவிட இங்கே அகழப்படும் அத்தனையும் ஒலுவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தரம் பிரிக்கப்பட்டு இந்த மண்ணை வெளிநாட்டுக்கு அனுப்ப இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன . எஞ்சிய மண்ணை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யஏற்பாடு நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் விரைவில் பாரிய வெகுஜன போராட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவிருப்பதாக மக்கள் நல செயற்பட்டாளர் ராதா தெரிவித்தார்.

எனினும், தற்பொழுது அரச ஸ்திரமற்ற நிலையில் அழுத்தங்கள் கூடி வருகின்ற காரணத்தினால் இல்மனைட் அகழ்வு இடம்பெற்றுவிடுமோ என்று மக்கள் அச்சத்தில் காணப்படுகின்றார்கள்.

அந்த பிரதேசத்திற்கு என்ன நடக்கப் போகின்றது என்பதை பார்ப்போம்.

இல்மனைட் ஆலையில் இருந்து வெளியேறும் இரும்பு குளோரைடு மற்றும் அமிலக் கழிவுகள் சுற்றியுள்ள நிலத்தையும், நிலத்தடி நீரையும் பாழ்படுத்த வாய்ப்பிருக்கிறது. ஆலையில் பிரித்தெடுக்கப்படும் ஜிர்க்கான் கனிமம் கதிரியக்கத் தன்மையைக் கொண்டிருப்பதால் ஆலையை சுற்றி 20 கிலோ மீட்டர் தூரத்திற்குள் வாழும் மக்களுக்கும், உயிரினங்களுக்கும் மரபணு நோய்களும், பல்வேறு வகைப் புற்றுநோய்களும் (தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணவாளக்குறிச்சியைச் சுற்றி வாழும் மக்களைப் போல) உருவாக வாய்ப்பிருக்கிறது.

திருக்கோவில், தம்பிலுவில், வினாயகபுரம், உமிரி பகுதியில் வானுயர வளர்ந்துள்ள தென்னை கள் அனைத்தும் படிப்படியாக அழிந்துவிடும். பல ஆயிரக்கணக்கான மக்களின் மீன்பிடி வாழ்வாதாரம் அழியப்போகின்றது.

டைட்டானியம், டைட்டானியம் ஆக்சைடு என்ற அதன் ஆக்சைடு வடிவத்தில் இரும்பு மற்றும் யுரேனியம், தோரியம் போன்ற கதிரியக்கத் கனிமங்களுடன் கிடைக்கிறது.
இயற்கையான அமைப்பை நாம் தொந்தரவு செய்யாத வரையில் கதிரியக்கத் கனிமங்களின்நிலைத்தன்மை பாதிக்கப்படாதவரையில் அவை அபாயகரமான கதிரியக்கத்தை வெளிப்படுத்துவதில்லை. தோண்டி எடுத்து அவற்றைப் பிரித்தெடுத்துச் சுத்தம் செய்யும் போது, அவை கதிரியக்கத்தை வெளிப்படுத்துகின்றன. அதன் காரணமாகத் தொழிலாளர்களும் அருகாமையில் உள்ள மக்களும் புற்று நோய் மற்றும் குறையுள்ள குழந்தைப்பிறப்புகளுக்கு ஆளாகிறார்கள்.

நிர்வாணமாகும் பூமி
இல்மனைட் வழக்கமாக 'நிர்வாணச் சுரங்க முறை'யில் எடுக்கப்படுகிறது. அதாவது புவிப் பரப்பின்மீதுள்ள அனைத்துத் தாவரங்களும் அழித்தொழிக்கப்பட்டு, பூமியை நிர்வாணமாக்கி, தாதுக்களைத் தோண்டியெடுக்கிறார்கள். மேல் மண்ணை அகற்றி வைத்துவிடுவார்கள். தாதுப்பொருள் அடங்கிய கீழ் மண் எவ்வளவு ஆழம்வரை கிடைக்கிறதோ அதனை எடுத்து முதல் கட்டச் சுத்திகரிப்புக்கு அனுப்புவார்கள்.

இதுவரை கிடைத்த செய்திகளின் படி 6 மீட்டர் முதல் 20 மீட்டர் ஆழம் வரை தோண்டப்படும் என தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆழமாகத் தோண்டுவது நிலத்தடி நீர்வளத்தைப் பாதிக்காது என்றாலும், நிலத்தடியை ஒட்டிய ஆழக்குறைவான நீர்வளமும் ஓடைகளும் வடிகால்களும் குளங்களும் மறைந்துபோக நீர்வளம் குறைய ஆரம்பிக்கும்.
நிலத்தின் மீதுள்ள தாவரங்கள் அகற்றப்படும்போது, வெப்பம் நேரடியாகப் பூமியைத்தாக்கும். அருகாமைக் கடலிலிருந்து வரும் குளிர்ந்த காற்று வெப்பமடையும். இதன் காரணமாக உள்ளூர் மழையின் அளவும் தன்மையும் முறையும் மாற்றமடையும்.
அனைத்தையும்விட மிக முக்கியமானது, கடல் அருகாமையில் இருப்பதால் நிலத்தடியில் கடல் நீர் புகுவதே. இதனால் குடிப்பதற்கும் வாழ்வதற்குமான நீர் அரிய பொருளாகிவிடும். நண்டு இனம் முற்றாக அழிக்கப்படும் ,வினாயகபுரம் பகுதியில் கண்டல் தாவரங்கள் அழிவடையும். இதனால் இறால் வளம் முற்றாக அழியும் , இதனை நம்பி தொழிலில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழப்பர்.
உலகில் பாதுகாக்கப்பட வேண்டிய இனமாக அறிவிக்கப்பட்ட கடலாமைகள் முட்டையிட்டு இனம்பெருக்கும் அழகிய திருக்கோவில் கடற்கரை அழியப்போகின்றது.
இல்மனைட் உற்பத்தி முறையில் வெளியேறும் மற்ற முக்கியப் பொருள்கள்: டைட்டானியம் டை ஆக்சைடு உற்பத்தியில் வெளியாகும் கழிவுகளில் அலுமினியம், ஆண்டிமணி, ஈயம், மோலிப்டனும் போன்றவை மிகக்குறைந்த அளவில் இருக்கும். இந்த உலோகங்கள் காற்றில் மிதக்கும் தூசுக்களிலும் இருக்கும். இந்த மிகக்குறைந்த அளவே போதுமான அபாயத்தை விளைவிக்கும். இவை நுரையீரலில் மிகக்குறைந்த அளவு நுழைந்தால்கூட, நீண்ட காலப்போக்கில், சரிசெய்ய முடியாத இழப்புகளை ஏற்படுத்தக்கூடியவை.
சல்பர் டை ஆக்சைடு உள்ளூர் அளவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். அது அந்தப் பகுதியில் அமில மழையை ஏற்படுத்தும். வெளியேறும் திண்மக்கழிவுகள் நிலத்தையும் நீரையும் கடலையும் நஞ்சாக்கும்.
இந்த முறையில் இரும்பு குளோரைடும் உற்பத்தியாகும். இதனை முறையாகப் பாதுகாத்து வைக்கவில்லை என்றால், அது சுற்றுச்சூழலில் கலந்துவிடும்.

இல்மனைட் உற்பத்தியின் ஆபத்தும் எதிர்ப்புப் போராட்டங்களும்
வழக்கமான ஆலை மாசுபாடுகளுக்கு அப்பால் அபாயகரமான கழிவுகளின் தாக்குதலுக்கும் மக்கள் ஆட்பட வேண்டியிருக்கும். டைட்டானியம் டெட்ரா குளோரைடு ஒரு பிரச்சினைக்குரிய வாயுவாகும். அது நீருடன் கடுமையான வினையாற்றி ஹைட்ரஜன் குளோரைடு வாயுவை உருவாக்கும். ஹைட்ரஜன் குளோரைடு தரையைத் தழுவியபடியே பயணித்துப் பெரிய பகுதிக்குப் பரவும். அது பரவும் இடம் முழுவதும் மரணம் பரவும்.
எத்தனை சிறப்பாகப் பராமரிக்கப்படும் ஆலையிலும் விபத்து ஏற்படுவது இயற்கை என்பதால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாது என்று 100 சதம் உத்தரவாதம் தர முடியாது.

2006 ஆகஸ்ட்டில் சீனாவின் ஜிங்சூ மாகாணத்தில் இல்மனைட் ஆலை நானி ஆற்றில் 3000 டன் சுத்தி கரிக்கப்படாத கழிவை வெளியேற்றிய குற்றத்திற்காக மூடப்பட்டது.
அந்தக் கழிவு ஆற்றைக் கொன்று போட்டது. ஆற்றங்கரையில் உள்ள ஊர்மக்கள் அனை வரும் பாதிக்கப்பட்டனர்.

1999இல் இங்கிலாந்தின் இல்மனைட் உற்பத்தி ஆலை ஒன்றில் விபத்து ஏற்பட்டது. குழாய் உடைந்ததால் 8 ஆயிரம் டன் திரவக் கழிவு வெளியேறியது. அதில் 37 டன் அடர்த்தியான ஹைடிரோ குளோரிக் அமிலமும் அடக்கம். விளைவாக 17 ஏக்கர் நிலம்பயனற்றுப்போனது.

அமெரிக்காவின் தெற்கு ஜார்ஜியாவில் பழங்குடியினர் பகுதியில் டூபாண்ட் நிறுவனம் இல்மனைட் தோண்டியெடுக்க 1999இல் முயற்சி செய்தது. ஆனால், பழங்குடி மக்களின் போராட்டத்தின் காரணமாக விரட்டியடிக்கப்பட்டது.

நிலத்தடி நீர் கெட்டுப்போனது மற்றும் குறைந்துபோனது என்று காரணம் காட்டி மத்திய வியட்னாமின் கிராம மக்கள் 2006இல் இல்மனைட் தோண்டியெடுப்பதை வலுக்கட்டாயமாகத் தடுத்து நிறுத்தினர்.

கென்யாவின் கடற்கரைப் பகுதியான க்வாலேவில் பழங்குடியினர் டைட்டானிய உற்பத்தியின் பாகசுரக் கம்பெனியான டியோமினுடன் (Tiomin) விடாப்பிடியான யுத்தம் நடத்திவருகின்றனர்.

தங்களது மூதாதையர் நிலத்தைத் தோண்டவிடமாட்டோம் என்று
அவர்கள் போராடுகின்றனர். அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்த டைட்டானியத் தொழிற்சாலை பற்றிய முக்கிய விவரங்களைப் பார்க்கத் தவறுகின்றன.

மக்கள் குரல் எடுபடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :