மட்டக்களப்பு - ஏறாவூர் நகர சபையின் சுகாதார ஊழியர்கள் இன்றிலிருந்து ஏறாவூர் பகுதியில் கழிவகற்றல் பணியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர்.
தமக்கான எரிபொருள் வழங்க கோரி ஏறாவூர் நகர சபை சுகாதார ஊழியர்கள் இன்று காலை 08 மணி தொடக்கம் ஆர்ப்பாட்டமொன்றை முன்னொட்டு தந்திருந்தனர்.
ஏறாவூர் மணிக்கூட்டு கோபுர சந்தி பிரதான வீதியில் இவர்கள் இவ் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.
தாம் கழிவு சேகரிக்கும் வாகனங்களை வீதியோரத்தில் நிறுத்தி கையில் பதாதைகளை ஏந்தியவாறும் கழிவுசேகரிப்பு வாகனத்தில் ஏறி நின்றவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 02 மணி நேரத்திற்கு அதிகமாக குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இதன்போது வாகனத்தில் இருந்த கழிவுகளை வீதியில் கொட்டுவதற்கு முற்பட்ட வேளை அவ்விடத்திற்கு வந்த ஏறாவூர் பொலிசார் அதைத் தடுத்தனர்.
மேலும் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுடன் கலந்துரையாட குறித்த ஆர்ப்பாட் இடத்திற்கு ஏறாவூர் பிரதேச செயலாளர், ஏறாவூர் நகர சபை தவிசாளர் மற்றும் செயலாளர், பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.
இதன் போது தமது கோரிக்கைகளை முன்வைத்த ஊழியர்களிடம் ஏறாவூர் பிரதேச செயலாளர் தாம் எரிபொருளை விரைவில் பெற்றுத்தர முயற்சிப்பதாகவும், ஏறாவூர் எரிபொருள் நிலையத்திற்கு வரும் எரிபொருளில் முன்னுரிமையடிப்படையில் வழங்குவதாகவும் தெரிவித்தார்.
இதே வேளை அதை ஏற்றுக்கொள்ளாத ஆர்ப்பாட்டக்காரர்கள் தாமக்கான எரிபொருள் கிடைக்கும் வரை ஏறாவூரில் தாம் கழிவகற்றல் பணியில் இருந்து இன்றுமுதல் விலகுவதாக தெரிவித்து , அங்கிருந்து கலைந்து சென்றனர்.

0 comments :
Post a Comment