மொட்டு அரசு இருபது நாட்களேயான குழந்தையினை எரியூட்டிய போது எமது உள்ளங்கள் எரிந்து சாம்பலானது. அப்போதே இவர்களின் அராஜக ஆட்சிக்கு அழிவுகாலம் நெருங்கி விட்டது என்பதனை நாம் உணர்ந்து கொண்டோம் என அக்கரைப்பற்று மாநகர சபையின் மாநகர பிதா அதாஉல்லா அகமட் ஸகி தெரிவித்தார்.
அக்கரைப்பற்று மாநகர சபையின் மாதாந்த பொதுச்சபை அமர்வு இன்று (05) மாநகர சபா மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போதே மாநகர முதல்வர் தனது விசேட உரையில் மேற்படி கருத்து தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்;
மொட்டு அரசின் பங்காளி கட்சியாய் இருந்த போதிலும் தேசிய காங்கிரஸும், அதன் தலைமையும் இவ்வரசின் பொறுப்பற்றதனத்தினை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் முகத்திற்கு நேரே சுட்டிக்காட்டி எதிர்ப்பினை பதிவு செய்ய தயங்கியதில்லை.
தேசிய காங்கிரசினையும், அதன் தலைமையையும் வீழ்த்த வேண்டும் என்று கடந்த பாராளுமன்ற தேர்தலில் மொட்டுசார் அரசியல்வாதிகள் மற்றும் எமது முஸ்லிம் அரசியல்வாதிகள், அவர்களின் அடிவருடிகள் மற்றும் இனவாதிகள் வரிந்து கட்டிக்கொண்டு செயற்பட்ட போதும் அல்லாஹ்வின் உதவியால் நாம் வெற்றியடைந்தோம். மொட்டு உட்பட இதர காங்கிரஸ் கட்சிகள் மற்றும் பலர் நாம் தோல்வியடைய வேண்டும் என இரவு பகலாய் செயற்பட்டனர்.
தேர்தலுக்கு முன்னரும், தேர்தலில் வென்று மொட்டு ஆட்சி அமைத்திட்ட போதிலும் அவர்களுடன் எமக்கு சுமூகமான உறவு இருக்கவில்லை. 20 க்கு வாக்களிக்க எமது தலைமை வேண்டிக் கொண்ட கோரிக்கை ,இந்த நாட்டில் அனைத்து மக்களுக்கும் சுபீட்சமான,நிம்மதியான ஒரு அரசியல் யாப்பினை உருவாக்க வழி சமையுங்கள் என்பதே ஆகும்.
தேசிய காங்கிரசின் தொடர்ச்சியான வேண்டுகோளும் இதுவாகவே இருந்தது.
கடந்த காலங்களில் மொட்டு ஹராம், மாவட்டத்தினை வெல்வோம்,கல்முனையை பாதுகாப்போம் என்று இனவாத பிரச்சாரம் செய்தவர்களே தற்போது மொட்டுக்கு சாமரம் வீசி அசடு வழிந்து நிற்கின்றனர். மொட்டினை விமர்சித்து வெற்றியடைந்த முஸ்லிம் உறுப்பினர்களை பஷில் திட்டமிட்டு அரவணைத்து தேசிய காங்கிரஸ் தலைமையினை பழி வாங்க நினைத்தார். ஆனால், இப்போது இவர்கள் எல்லோரும் கூட்டாக தீட்டிய சூழ்ச்சிகளால் மக்கள் முன் அவமானப்பட்டு நிற்கின்றனர்.
அப்பாவி மக்களை ஏமாற்றி,பொய்கள் சொல்லி நாம் வாக்குகளை சூறையாடவில்லை. அப்படி மக்களை அரசியல் பணயம் வைத்து வாக்கெடுக்கும் சந்தர்ப்பவாதிகளுக்கு அதாஉல்லாவின் பெயரினை உச்சரிக்காமல் இருக்க முடியாது.
உயர் மட்ட கூட்டத்தின் போதெல்லாம் நாட்டின் சமகால பிரச்சினைகள் குறித்து எமது தலைமை போர்க்கொடி தூக்கினார். ஆனால், மொட்டு ஹராம் என்று சொல்லி வாக்கெடுத்து தற்போது மொட்டு அரசின் சொகுசுகளை அனுபவித்து கொண்டிருப்பவர்கள் வாய் மூடி மௌனமாய் செயற்பட்டனர். மக்களின் வாக்குகளை பெற்று மக்களை வீதிக்கு இறக்கி அரசியல் இலாபம் அடையும் கபட அரசியலை தேசிய காங்கிரஸ் ஒரு போதும் முன்னெடுத்ததில்லை.
ஏழு மூளையார் என்று வர்ணிக்கப்படும் பஷில் ராஜபக்ஸ, தேசிய காங்கிரஸ் தலைமையின் அரசியலை ஓரம் கட்ட எண்ணி, தனது முஸ்லிம் சகாக்களுடன் இணைந்து மிகுந்த இடையூறுகளை எமக்கு ஏற்படுத்தினார். பல முஸ்லிம் அரசியல்வாதிகள் அதற்கு துணை போயினர். ஆனால், சதிகளை மிகைத்த சூழ்ச்சிகாரனுக்கெல்லாம் பெரும் சூழ்ச்சிக்காரனான இறைவன் இப்போது அவர்களது பெரும் கனவுகளை சுக்கு நூறாக்கி இருக்கின்றான். அல்ஹமதுலில்லாஹ்.
ஜனாதிபதி மற்றும் பஷிலின் பொருளாதார கொள்கையும்,நிதி விரயமும் நாட்டுக்கு நாசத்தினை ஏற்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் அரசியல் அத்திவாரத்திற்கும் சேதாரமாக மாறும் என்று தேசிய காங்கிரஸ் அவர்களின் முகத்தின் நேரே சுட்டிக் காட்டியது. ஆனால், அவர்கள் அதனை பொருட்படுத்தாமல் பங்காளி கட்சிகளை உதாசீனம் செய்தனர்.
தேசிய காங்கிரஸ் உட்பட இதர 11 கட்சிகளும் எப்போது இவ்வரசாங்கத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்க ஆரம்பித்தனரோ அப்போதே இவ்வரசு ஆட்டம் காண ஆரம்பித்து விட்டது. நிலைமை அப்படியிருக்க, இங்கிருக்கும் சில பேர் அதாஉல்லாவின் அரசியல் பாசறை என்று சொல்லிக் கொண்டு, அதாஉல்லாவின் அரசியலை குழி தோண்டி புதைக்க பஷிலிடம் டீ.சீ.சி.சேர்மன் பதவியை பெற்று வருவோம் என்றெல்லாம் கங்கணம் கட்டி பகல் கனவு கண்டது வேடிக்கையாய் இருக்கிறது. நாட்டு மக்கள் பெரும் பஞ்சத்தில் அல்லாடிக் கொண்டிருக்கும் போது இவர்கள் பதவிகளுக்காய் அலைந்தது கண்டு வெட்கமாய் இருக்கிறது.
மொட்டு அரசு இருபது நாள் சிசுவை எரியூட்டிய போது எமது உள்ளங்கள் எல்லாம் எரிந்து சாம்பலானது. ஜனாஸா எரிப்பு முஸ்லிம் சமூகத்தில் மிகுந்த துயரத்தினை ஏற்படுத்தியது.மொட்டு அரசின் இந்த அராஜகப் போக்கினை எதிர்க்கும் கண்டன பிரேரணையை முதன் முதலில் நிறைவேற்றிய உள்ளூராட்சி மன்றமாக அக்கரைப்பற்று மாநகர சபை செயற்பட்டதனை நீங்கள் மறந்திருக்க முடியாது.
இந்த ஆட்சி ஆரம்பித்ததில் இருந்து எமது தலைமைக்கும் அரச உயர் மட்டத்தினருக்கும் இடையில் பாரிய முரண்பாடுகள், விரிசல்கள் தோற்றம் பெற்றிருந்தன.
இவர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டுத்தான் எமக்கு அடுத்த வேலை என்று தேசிய காங்கிரஸ் தலைவர் கட்சியின் உயர் பீட கூட்டத்தின் போது பிரஸ்தாபித்த போதெல்லாம் சில நேரங்களில் நான் அந்த வார்த்தைகளை பொருட்டாக கருதவில்லை. ஆனால், தற்போது தலைமையின் தீர்க்க தரிசனமான அரசியல் பார்வையின் அனுபவம் கண்டு உண்மையில் நான் வியந்து போகிறேன்.
அல்ஹம்துலில்லாஹ், தலைமை அப்போது சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் இப்போது மெய்ப்பட்டிருக்கின்றன. அரசு இப்போது பெரும் திண்டாட்டத்தினை சந்தித்துள்ளது. அமைச்சரவை சிதறுண்டு போயிருக்கிறது.எமது எண்ணம் தூய்மையானது என்பதனை காலம் உணர்த்தி நிற்கிறது.அக்கரைப்பற்று மக்கள் நீதமான குணம் பொருந்திய மக்கள்.
அரசாங்கத்திற்குள் இருந்து அரசினை காத்திரமாய் எதிர்த்து வெளியேறிய நெஞ்சுரம் மிக்கவராய் எமது தலைவர் இருக்கிறார். எமது தலைமைக்கும், அதன் கொள்கை போராளிகளுக்கும் போராட்ட குணம் ஒன்றும் புதிதல்ல. எமது கட்சியின் கொள்கையை வெளிப்படையாகவே பேசி நாற்பதாயிரம் மக்கள் எமக்கு வாக்களித்திருந்தனர். அவர்களுக்கு நாங்கள் துரோகம் இழைக்கவில்லை. அரசியல் அதிகாரம் என்பது அல்லாஹ்வின் நாட்டம். இருப்பினும் அரசியல் புரிதலற்ற மக்களை சரியான அரசியல் பாதையில் வழி நடாத்த வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.
நாட்டில் தற்போது பாரிய பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையில் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நாம் செயற்பட்டு வருகின்றோம். நாம் என்றென்றும் மக்களின் உணர்வுகளை மதிக்கின்றவர்கள் எனும் அடிப்படையில், ஒரு உள்ளூராட்சி மன்றமாய் எமது மக்களுக்கு சுமைகளை ஏற்படுத்த முனையவில்லை. மனச் சாட்சியும்,அறிவு ஞானமும் உள்ள அக்கரைப்பற்று மக்கள் அதனை நன்கு அறிவார்கள் என்றார்.
0 comments :
Post a Comment