சம்மாந்துறை பிரதேசத்தவர்கள் தங்களுக்கு சமையல் எரிவாயு வழங்கப்பட வேண்டுமென்று சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று (26)ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சமையல் எரிவாயு ஏற்றிய லொறி வருமென்ற எதிர்பார்ப்பில் பொது மக்கள் சிலிண்டர்களுடன் கடந்த மூன்று நாட்களாக நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருந்தனர். இன்றும் தமக்கு சமையல் எரிவாயு கிடைக்காது என்ற காரணத்தினால் விரக்தியடைந்த பொது மக்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலைய அம்பாறை வீதியை மறித்து சமையல் எரிவாயு தருமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த நான்கு நாட்களாக சமையல் எரிவாயு பெற்றுக் கொள்வதற்காக இந்த இடத்தில் (சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகில்) காத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆயினும், எங்களுக்கு சமையல் எரிவாயு தரப்படவில்லை. எந்தவொரு அதிகாரியும் எமக்கு எந்தவொரு உத்தரவாத்தையும் தரவில்லை. அதனால், சமையல் எரிவாயு தருமாறு வீதி மறியல் போராட்டத்தை மேற்கொள்கிறோம் என்று தெரிவித்தார்கள்.
இந்நிலையில் சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றவர்களை அங்கிருந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். வீதிப் போக்குவாரத்துக்கு தடையாக இருக்க வேண்டாமென்று கேட்டுக் கொண்டனர்.
பொலிஸாரின் தலையீட்டை அடுத்து பொது மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே பலத்த வாக்குவாதம் எற்பட்டது.
இவ்வாறு பொது மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் ஐக்கிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் எம்.ஏ.ஹஸன்அலியும் மக்கள் மறியல் போராட்டத்தில் இணைந்து கொண்டார்.
இதன் போது பொலிஸாருக்கும் அவருக்குமிடையே பலத்த வாக்குவாதங்கள் ஏற்பட்டன.
எவ்வாறாயினும் இன்று இவ்விடத்தில் சமையல் எரிவாயு வராது என்று பொலிஸார் தெரிவித்தமையை அடுத்து சிலர்; அங்கிருந்து அகன்று சென்ற போதிலும், பலர் சமையல் எரிவாயு வருமென்ற நம்பிக்கையில் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள்.
0 comments :
Post a Comment