பலாங்கொட பிரதேசத்திலுள்ள ஜெய்லானி பள்ளி விவகாரம் தொடர்பில் நெல்லிகல வத்துகும்புரே தம்மரதன தேரர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையுடன் பேசிய போது ஜெய்லானி பள்ளிவாசல் எமக்குரியதல்ல என்று ஜம்இய்யா தெரிவித்ததாக சகோதரர் ரியாஸ் சாலி அவர்களை மேற்கோள் காட்டி அண்மையில் ஊடகங்களில் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதனை ஜம்இய்யா மிக வன்மையாகக் கண்டிப்பதோடு அதனை முற்று முழுதாக மறுக்கின்றது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா என்பது இந்நாட்டு ஆலிம்களினதும் முஸ்லிம்களினதும் சொத்தாகும். இதன் பிரதான நோக்கம் இஸ்லாத்தை பாதுகாப்பதும் ஆலிம்களையும் முஸ்லிம் சமூகத்தையும் தூய இஸ்லாமிய கொள்கையின் அடிப்படையில் வாழ்வதற்கு வழிகாட்டுவதுமாகும். ஆதலால், பொய்யான வதந்திகளைப் பரப்பி ஜம்இய்யாவை அவமதிப்பதை அனைவரும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
ஜெய்லானி மஸ்ஜித் விடயமாக ஜம்இய்யாவுடன் கதைப்பதற்காக நெல்லிகல வத்துகும்புரே தம்மரதன தேரர் வந்திருந்தார். எனினும், மஸ்ஜித் விடயங்கள் இலங்கை வக்ப் சபையுடன் சம்பந்தப்பட்டிருப்பதனால் இவ்விடயத்தை வக்ப் சபைக்கு அறிவித்து அவர்களுடன் இது விடயமாக கலந்துரையாடுவது சிறந்ததென்ற வழிகாட்டல் ஜம்இய்யாவினால் குறித்த தேரருக்கு வழங்கப்பட்டது. அதற்கான எழுத்து மூல ஆதாரமும் எம்மிடம் காணப்படுகின்றது.
ஒரு செய்தி வந்தால் அதனை தீர விசாரிக்குமாறு இஸ்லாம் எங்களுக்கு போதிக்கின்றது.
'يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ جَآءَكُمْ فَاسِقٌ ۢ بِنَبَاٍ فَتَبَيَّنُوْۤا اَنْ تُصِيْبُوْا قَوْمًا ۢ بِجَهَالَةٍ فَتُصْبِحُوْا عَلٰى مَا فَعَلْتُمْ نٰدِمِيْنَ'.மின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்;. பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப்படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆகுவீர்கள். (49:6)
எனவே, தவறிழைத்தவர்கள் இவ்விடயத்தில் தனது தவறை திருத்திக் கொள்ளுமாறும் மேலதிக தெளிவுகள் தேவையெனில் ஜம்இய்யாவை சந்திக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
0 comments :
Post a Comment