நாட்டின் கடன்களை அடைக்கவும், அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யவும் அரசாங்கம் கையாளவுள்ள பொறிமுறை என்ன? ஹர்ஷ டி சில்வா!



ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் -
நாட்டின் பொருளாதார கொள்கையை வகுப்பதில் அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஒரு பொதுவான நிலைப்பாட்டுக்கு வரவேண்டும். எமது தரப்பிடமிருந்து அதற்கான ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளோம். தீர்மானம் எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கையிலேயே உள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின், கொழும்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தை நாடி வெளிநாட்டு கையிருப்பை அதிகரிக்க முடியும். ஆனால் நாட்டின் கடனை அடைக்கவும், அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யவும் அரசாங்கத்திடம் உள்ள மாற்று வழிதான் என்னவென கேள்வி யெழுப்பினார்.
நாட்டின் நிதி நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை கையாள்வது குறித்து ஆராய்ந்து வருகின்ற நிலையில் சர்வ கட்சி மாநாட்டை கூட்டி சகல அரசியல் தரப்பினரின் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்ள அரசாங்கம் தயாராவதாக தெரியவருகின்றது. இந்நிலையில் எதிர்க்கட்சியின் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவிக்கையில்:-
பொருளாதார மறுசீரமைப்பு ஒன்றினை முன்னெடுக்காது போனால் எம்மால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது. இன்று நாம் கடன் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளோம். இப்போது எதிர்கொள்ளும் பாரிய சவாலை எதிர்கொள்ள தற்காலிக வேலைத்திட்டங்களை கையாள்வதுடன் அடுத்த கட்டமாக நீண்ட கால வேலைத்திட்டத்தையும் முன்னெடுத்தாக வேண்டும். வெறுமனே குறுகிய கால வேலைத்திட்டத்தை மாத்திரம் கையாண்டால் நாடு மீண்டும் நெருக்கடிக்குள் விழும் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சர்வதேச சந்தையில் எம்மால் கடனை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமைக்கே நாடு சென்றுள்ளது, சர்வதேச சந்தையில் இன்று கதவுகள் மூடப்பட்டுள்ளன. எனவே எம்மால் இனியும் வெளிநாட்டிடமிருந்து கடன்களை நம்ப முடியாது. ஏனென்றால் இலங்கை மீதான நம்பிக்கை முழுமையாக இழக்கப்பட்டுள்ளது. December மற்றும் January மாதத்தில் பிணைகள் மற்றும் வெளிநாட்டு கடன்களாக $1.33 Billion செலுத்த வேண்டியுள்ளது. இதையும் தாண்டி இலங்கையிலுள்ள வங்கிகள் பெற்ற கடன்கள், வர்த்தக கடன்கள், நாட்டின் எரிபொருளுக்கான பணம் என இன்னும் அதிகமான கடன்களையும் செலுத்த வேண்டியுள்ளது. ஆகவே இவற்றை கையாள எந்த மாற்று வழியை கையாளப்போகிறோம் என்பது குறித்து இப்போது தீர்மானிக்க வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது நாட்டின் அபிவிருத்திக்கு கடன்களை பெற்றுக் கொள்ளவோ, அல்லது அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளவோ அல்ல. சர்வதேச பிணைகள் மூலமாக கடன்களை பெற்றுக்கொண்டால் அரச செலவுகளை கையாள முடியும். ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் மூலமாக பெறப்படும் கடன்களின் மூலமாக வெளிநாட்டு கையிருப்பை தக்கவைக்க மட்டுமே முடியும். வெளிநாட்டு கையிருப்பை அதிகரிக்க மட்டுமே சர்வதேச நாணய நிதியத்தால் ஒத்துழைப்புகள் வழங்கப்படும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.தற்காலிக தீர்வுகளை எம்மால் கையாள முடியும், ஆனால் நீண்டகால வர்த்தக உடன்படிக்கைகளை கையாள வேண்டும்.
வெறுமனே சுற்றுலாத்துறையை மாத்திரம் நம்பி நாம் முன் நகர முடியாது. ஆகவே எமது பக்கம் ஆலோசனைகளை முன் வைத்துள்ளோம். தீர்மானம் எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கையிலேயே உள்ளது. நாமாக உருவாக்கிக் கொண்டுள்ள பிரச்சினைகளை முதலில் நாமே தீர்க்க வேண்டும். தவறான தீர்மானங்களை கைவிட வேண்டும். இவற்றையெல்லாம் வெகு விரைவில் தீர்க்க வேண்டும். முகாமைத்துவத்தில் அரசாங்கம் தொடர்ச்சியாக தவறிழைத்து வருகின்றது. அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதன் மூலமாக பொதுவான வேலைத்திட்டமொன்றை உருவாக்க வேண்டும். அதுவே எம் அனைவரதும் தேவையாகும் என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :