பிறக்கும் புத்தாண்டு இலங்கை மக்களுக்கு சம உரிமையையும் சம அந்தஸ்தையும் வழங்கி நாட்டு மக்கள் அனைவருக்கும் சிறந்த வாழ்க்கை சூழலை ஏற்படுத்தும் ஆண்டாக அமைய வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஸ்வரன் விடுத்துள்ள புது வருட வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
புதுவருட பிறப்பை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
கொவிட் 19 கொரோனா தொற்று இந்த உலகிலிருந்து முற்றாக ஒழிய நாம் பிரார்த்தனைகளை மேற்கொள்வோம். பஞ்சம்,பசி,பட்டினி என்பவற்றிற்கு விடிவு தேடி புதிய வாழ்வின் ஏக்கங்களை கண்களில் சுமந்து இலங்கை வந்து குடியேறிய இந்திய வம்சாவழி தமிழ் மக்கள் உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு வாழ்வின் இருள் நீக்கி ஒளி பெற்ற ஒரு பெரும் சமுதாயமாக, வரலாற்று மாற்றத்துடன் வாழ்ந்து வருகின்றார்கள். இந்நாட்டின் சகல முன்னேற்றத்திற்கும் இந்திய வம்சாவளி மக்கள் தமது பங்களிப்பினை பெருமளவிலே செலுத்தியிருக்கின்றார்கள். உழைக்கும் வர்க்கமாகிய தோட்ட தொழிலாளர்கள் இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெழும்பாக இருந்து வருகின்றார்கள். எந்தவொரு காலகட்டத்திலும் இந்நாட்டுக்கு உழைப்பாளிகளாக இருந்திருக்கின்றார்களே தவிர இந்த நாட்டுக்கு எந்தவிதமான பாதகத்தையும் ஏற்படுத்தியதில்லை. இவர்கள் இதுவரையிலும் அனைத்து உரிமைகளையும் பேரம் பேசும் சக்திகளினால்தான் பெற்றிருக்கின்றார்கள்;. எனவே இந்த புதிய வருடத்தில் சகல உரிமைகளுடன் வாழ்வதற்கும் அதேபோல மக்கள் வாழ்க்கையில் இவர்களின் நியாயமான கோரிக்கைகளை அனைவரும் நிறைவேற்றுவதற்கு ஒன்றிணைந்து உழைப்போம். நமது பலம், ஒற்றுமை என்பவற்றை நிலைநிறுத்தி நாம் தலைநிமிர்ந்து ஏனையோருக்கு நிகராக வீறுநடைபோடவும் பிறக்கும் புத்தாண்டில் உறுதி கொள்வோம். இன்றைய சூழ்நிலையில் கொவிட் 19 கொரோனா தொற்றிலிருந்து எம்மையும் எமது உறவினர்களையும் நண்பர்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக நாம் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அந்த வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment