சதிகளை முறியடித்து மக்களின் தேவைகளை, உரிமைகளை அரசிடமிருந்து பெற்றுக்கொடுப்போம் என்கிறார் !
நூருல் ஹுதா உமர்-கல்முனை நகர மண்டபம் 70 வருடங்கள் பழமையானது. கூரைகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் உயிராபத்து ஏற்படும் நிலை உள்ளது. அதற்காகவே புதிய கட்டிடத்தை வேண்டி நிற்கிறோம். அதே போன்று 1000 பேரளவில் தினமும் வர்த்தகத்தில் ஈடுபடும் மாநகர பொதுச்சந்தை கட்டிடமும் மிகவும் சேதமாகியுள்ளது. அது தொடர்பில் பொறியியலாளர்கள் அறிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளார்கள். அந்த பாரியளவிலான சந்தை கட்டிடத்தையும் கட்டித்தருவதனூடாக பல உயிர்சேதங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம் என்பதுடன் அந்த பிராந்திய பொருளாதார மீட்சியையும் ஏற்படுத்தலாம். அதனை செய்யும் ஆளுமை பிரதமருக்கும், வீடமைப்பு நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருக்கும் இருக்கிறது. மக்களின் நீண்டநாள் துயரை துடைக்க பொறுப்பான நீங்கள் முன் வருவீர்கள் என நம்புகிறேன் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (06) இடம்பெற்ற வீடமைப்பு நகர அபிவிருத்தி அமைச்சின் வரவு-செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர், கடந்த அரசாங்கத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக வீடுகளை கட்டிக்கொடுக்கின்றோம் என்ற போர்வையில் அம்பாறை மாவட்டத்தில் சில குடும்பங்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்கின்ற போது கடனடிப்படையிலான திட்டத்தைத்தான் அவர்கள் முன்னெடுத்திருந்தனர். கடந்த 02 ஆண்டுகளாக கோவிட் சூழ்நிலையினால் அந்த ஏழை மக்கள் கடனை திருப்பிச்செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதட்கு வட்டியும் கட்டவேண்டிய நிலை உள்ளது.
சபையில் வீற்றிருக்கும் வீடமைப்பு நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அவர்களே, கடந்த காலங்களில் இருந்த வீடமைப்பு அமைச்சர் நாடுபூராகவும் இந்த செயற்திட்டத்தை பெரியளவிலான விளம்பரங்களை செய்து கொண்டு தன்னால் வரிய மக்களுக்கு வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படுகிறது என்ற பிரச்சாரத்தினூடாக மக்களை கடன்காரர்களாக்கிய செயலாக அவரின் நடவடிக்கைகளை பார்க்கிறோம். இன்று கடன்காரர்களாகிய மாறி செய்வதறியாது திணறிக்கொண்டிருக்கும் மக்கள் இலவசமாக அரசினால் வீடு வழங்கப்போகிறார்கள் என்று எண்ணி விண்ணப்பங்களை செய்ததாக கூறிக்கொண்டு எங்களை நாடி உதவி கேட்கிறார்கள். அந்த மக்களின் பிரதிநிதியாக இந்த அரசின் வரவுசெலவுத்திட்டத்தில் கடந்த அரசாங்கத்தினால் விட்ட பிழைகளை திருத்தி அந்த கடனை ரத்துசெய்யும் திருத்தத்தை கொண்டுவருமாறு முன்மொழிவை முன்வைக்கிறேன்.
குறித்த அமைச்சின் அமைச்சராக இருக்கும் பிரதமர் மஹிந்தவை அரைநூற்றாண்டு கால அரசியல் அனுபவம் கொண்ட ஏழைகளின் துயரறிந்தவராக சமூக நல்லிணக்கத்தை விரும்பும் ஒருவராக மக்கள் பார்க்கின்றனர். இன, மத, பிரதேச கட்சி பேதங்களுக்கு அப்பால் நாட்டில் அவருக்கு நல்ல மரியாதை இருக்கிறது. அப்படியான ஒருவர் கடந்த காலத்தில் இருந்த வீடமைப்பு அமைச்சர் விட்ட தவறை திருத்த முன்வரவேண்டும். கல்முனை பிராந்தியத்தில் வீடமைப்பு அதிகாரசபையின் காரியாலயம் இருக்கிறது. அது மிகப்பெரிய கட்டிடம் அந்த கட்டிடத்தின் கூரைகள் சேதமாகியுள்ளது. இதனால் அங்கிருக்கும் காரியாலயங்களில் நீரொழுக்கு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பில் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவும் கடந்த சபை அமர்வுகளில் சுட்டிக்காட்டியிருந்தார். சில தினங்களுக்கு முன்னர் நாங்கள் அங்கு சென்று அவசரமாக கூரையை திருத்துவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளேன். இந்த விடயம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் உடனடியாக நகர அபிவிருத்தி அதிகாரசபை தவிசாளருக்கு பணிப்புரை விடுத்து உடனடியாக பூரணமாக திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் என்னுடைய வேண்டுகோளின் பிரகாரம் கல்முனை பேரூந்து நிலைய அபிவிருத்திக்காக நிதியொதுக்கீடு செய்திருந்தார் அதற்காக என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
கல்முனையில் நகர மண்டபமொன்றை அமைக்க நகர அபிவிருத்தி அதிகாரசபை தவிசாளர் மற்றும் பிரதம அதிகாரிகளுக்கு நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரினால் உத்தரவிடப்பட்டிருந்தது. அதனடிப்படையில் படவரைபுகள், அளவை நிர்ணயங்கள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. பிரதமரினால் அதற்கான வேலைத்திட்டத்தை அடுத்த மாதமளவில் அல்லது பெப்ரவரியில் ஆரம்பிக்க வேண்டும். கிழக்கு மாகாண மக்கள் போர் நிலைகள் காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தோம். கடந்த நல்லாட்சியில் இப்படியான அபிவிருத்திகளை செய்யுமாறு பிரதமர், அமைச்சர்களிடம் கேட்டிருந்தும் அவர்கள் அதனை செய்ய முன்வரவில்லை. அது தொடர்பில் வெட்கப்படுகிறோம். கிழக்கு மக்களின் கோரிக்கைகளை ஏற்று இந்த அரசாங்கம் இவ்வாறான அபிவிருத்திகளை செய்ய முன்வரவேண்டும். தலைநகரில் இடம்பெறும் பிரமாண்டமான அபிவிருத்திகளை எமது மக்கள் பார்த்த பின்னர் மக்கள் பிரதிநிதியான எங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள்.
எங்களின் மக்களின் அங்கீகாரத்துடன் இந்த அரசுக்கு சார்பாக சில விடயங்களுக்கு ஆதரவாக வாக்களிக்கும் போது வெளியிலிருக்கும் சிலர் எங்களை நோக்கி கூச்சலிடுகின்றனர். எதர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரும் எங்களின் பாராளுமன்ற உறுப்புரிமையை பறிக்க கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நான் குறிவைக்கும் விடயம் என்னவெனில் வெறுமணமே கோஷமிடுவதன் மூலமும் கூச்சலிடுவதன் மூலமும் எங்களின் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கமுடியாது. உரிமைகளை பாதுகாக்க முடியாது. இந்த பாராளுமன்ற உறுப்புரிமையை நாங்கள் பெற்றிருப்பது மக்களின் நலனுக்காகவே. உங்களின் தேவைகளை நிபர்த்தி செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்களாக நாங்கள் ஒருபோதும் இருக்கப் போவதில்லை. மக்களின் தேவைகளை அரசிடம் மன்றாடியாவது பெற்றுக்கொடுப்போம் எனும் செய்தியை கூறிவைக்க விரும்புகிறேன் என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரிஸின் உரையை தொடர்ந்து வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக குணவர்தன மற்றும் நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாலக கொடகே ஆகியோர்கள் கல்முனை அபிவிருத்தி தொடர்பில் பாராளுமன்றத்தில் விளக்கமளித்தனர்.
0 comments :
Post a Comment