அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளர் காணொளியில் பேசியிருக்கும் விடயங்கள் அபத்தமான, பொய்யான சித்தரிப்பு. தலைவரின் கைது தொடர்பிலும் பேசி, தலைவர் விடுதலையாகி விடக்கூடாது என்பதற்காக சதி செய்ததாகவும், நடித்ததாகவும், காட்டிக்கொடுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அதனை இறைவனிடம் நான் பொறுப்பு சாட்டுகிறேன். ஒவ்வொரு ஊருக்கும் சென்று இது தொடர்பில் பேசப்போவதாக அவர் அறிவித்துள்ளார். அவர் ஊரூராக வந்து எந்த அடிப்படையில் எந்த ஆதாரங்களை கொண்டு இதனை அவர் தெரிவித்துள்ளார் என்று மக்களுக்கு கூற வேண்டும். அவருக்கு சவாலாக இதனை விடுக்கிறேன். மக்கள் தலைவரையும், கட்சியையும் நேசிக்கிறார்கள். எல்லோருக்குள்ளும் குழப்பநிலையை உருவாக்கி எல்லோரது மனதிலும் எங்களுக்கு எதிரான மனோநிலையை உருவாக்கி தலைமைக்கு எதிரானவர் போன்ற தோற்றப்பாட்டை வரவுசெலவுத்திட்டம் வரமுன்னரே அவர் உருவாக்கிவிட்டார். எந்த நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அவர் இப்படி கூறுகிறார் என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது என திகாமடுல்ல மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் முதுனபின் தெரிவித்தார்.
தொலைக்காட்சி ஊடக கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் புதன்கிழமை கலந்துகொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர், எங்களுக்கு எதிராக பேசும் தவிசாளர் ஆதாரங்களை முன்னிலைப்படுத்தி மக்களுக்கு உண்மைகளை ஊடகங்களின் வாயிலாகவாவது வெளிப்படுத்த வேண்டும். கட்சிக்கும், தலைமைக்கும் நான் எப்போதும் விசுவாசமானவன். இந்த பயணத்தில் தொடர்ந்தும் விசுவாசத்துடன் பயணிக்கும் நோக்கம் கொண்டவன் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. நான் அரசியல் பீடத்தின் முடிவை மீறியுள்ளேனா? அல்லது தலைவரின் முடிவை மீறியுள்ளேனா? என்பதை இங்கு அவதானிக்க வேண்டும். தேர்தல் மேடை முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் வெளிப்படையாகவே என்னுடைய நிலைப்பாட்டை அறிவித்துள்ளேன். நாங்கள் அரசியல் செய்வது மக்களுக்காகவே. அவரது மாவட்டத்தில் இருக்கும் பிரதேச செயலக மற்றும் காணிப்பிரச்சினைகளின் அகல, நீளத்தையும் உரிமைசார் பிரச்சினைகளையும் எங்கள் தவிசாளர் புரிந்து கொண்டிருந்தால் அதனை அவர் தீர்க்க முனைந்திருந்தால் ஏன் இந்த முடிவை நான் எடுத்தேன் என்பது அவருக்கு விளங்கியிருக்கும்.
அடுத்த தேர்தல் என்னுடைய இலக்கல்ல. நான் ஊடகத் துறையிலும், சட்டத்துறையிலும் இருந்தவன் என்ற அடிப்படையில் மக்களின் பிரச்சினைகள் நிறையவற்றை நான் கண்டுள்ளேன். என்னிடம் உதவி கேட்டுவரும் மக்களுக்கு நான் எவ்வகையிலாவது உதவி செய்ய தயாராக உள்ளேன். இல்லாது போனால் அது மனதை உறுத்திக்கொண்டே இருக்கும். நான் ஊடகத்திலிருந்து கேட்ட கேள்விகளுக்கான பதிலை இப்போது நான் தேடிக்கொண்டிருக்கிறேன்- என்றார்.
0 comments :
Post a Comment