அந்த டிசம்பர் 26, உலகை உலுக்கிய ஞாயிற்றுக்கிழமை : இன்று சுனாமியின் 17ஆண்டு நினைவு தினம்!



நூருல் ஹுதா உமர்
மாளிகைக்காடு-

டலோர மக்களுக்கு அலைகளும், அலையின் இசையும் புதிதல்ல. கடலும், காதலும், வாசமும் விசுவாசமாக பழகிப்போன இசையும் இசைந்துபோன வாழ்வும் அது. சந்தேகமில்லா உறவு கடலுக்கும் அந்த கரையோர மக்களுக்கும் அந்த டிசம்பர் 26 வரை இருந்தே வந்தது. அன்று வந்த சுனாமி அலையையும் அதனாலயே சாதாரணமாகவே நினைத்தனர். ஆனால், ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்து பல ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வை தலைகீழாக புரட்டிப்போடும் என்று யாரும் கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
2004 ஆம் ஆண்டு கிறிஸ்மஸின் மறுதினத்தை உலகம் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டாது. அந்த ஞாயிற்றுக் கிழமை எழும்பிய ஆழிப்பேரலையின் ஓலத்தின் ஓசை 17 ஆண்டுகள் கடந்தும் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இப்போதுவரை அந்த கொடூர சீற்றத்திலிருந்து மீளமுடியாமல் உலககின் சில பகுதிகள் உழன்று கொண்டிருக்கின்றது. உலகில் ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கைப் பேரழிவுகளில் சுனாமியே முதன்மையானது. 2020 இல் அமோசன் காடுகளை எரித்துக்கொண்டு ஆரம்பித்து, கொரோனா அலை உலகை ஆட்டிப்படைத்து உலகின் வல்லரசுகளை ஆட்டம் காணச்செய்து, வறுமை ருத்ரதாண்டவம் ஆடி பல்வேறு அனர்த்தங்களை உலகம் கண்டிருந்தாலும் இன்றுவரை ஆரம்ப சூடு தணியாமல் சுனாமியின் தாக்கம் வருடங்கள் பதினேழு கடந்தும் தொடர்ந்து வருவது வேறுகதை.

2004-ம் ஆண்டு இந்தோனேஷியாவின் சுமத்ரா எனும் தீவில் உள்ள கடல்பகுதியில் அதிகாலை வேளையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 9.1 முதல் 9.3 ரிக்டர் அளவிற்குப் பதிவானது. இதன் காரணமாக ஏற்பட்ட சுனாமியால் சுமார் 14 நாடுகளுக்கு மேல் பாதிக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். உலக பொருளாதாரம் பல கோடி டாலர்கள் கடலில் மிதந்து அழிந்து போனது. கோடிகளில் மிதந்த பண அரசர்கள் பலரும் நடுத்தெருவுக்கு வந்தனர்.
சுனாமியலையின் பாதிப்பின் அகோரமுகத்தை இலங்கையின் கடலோர மாவட்டங்கள் எல்லாம் மிகவும் மோசமாகச் சந்தித்தது. இன்று வரை டிசம்பர் 26-ம் தேதி மறக்கமுடியாத நாளாக அனைவரின் உள்ளத்திலும் அதனாலயே இந்த நாள் அழியாமல் உள்ளது. கடலோர பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு கடல் அலைகள் புதிதல்ல. அன்று வந்த அலையையும் சாதாரணமாகவே நினைத்தனர். 2004 ஆம் ஆண்டு 25 ஆம் திகதி நத்தார் பண்டிகையை கொண்டாடிய சந்தோசத்தில் திளைத்திருந்த மக்களை, துயரத்தின் எல்லைக்கு அடுத்தே நாளே கொண்டு செல்லும் நிலையில் அந்த கோர சம்பவம் நடந்தேறியது. இந்து சமுத்திரத்தின் அருகில் உள்ள இந்தோனேசியாவின் தீவுக் கூட்டங்களில் ஒன்றான சுமாத்திரா தீவின் வடக்கே கடலுக்கு அடியில் காலை 07 மணியளவில் 9.0 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கமானது சுனாமியைத் தோற்றுவித்தது.

சுனாமி பேரலைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து, அந்தமான் தீவுகள் என உலகின் 14 நாடுகளைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து 50 ஆயிரத்து 676 உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் வீடுகள், கட்டிடங்கள், வாகனங்கள், உயிரினங்கள் என கண்ணிமைக்கும் நொடியில் அனைத்தும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதில் இந்தோனேசியாவில் ஒரு இலட்சத்து 84 ஆயிரம் உயிர்களும் இலங்கையில் 35 ஆயிரத்து 322 பேரும் பலியானதாக அன்றைய ஆரம்ப அறிக்கை கூறியது.
சுனாமியின் தாக்கத்தால் அதிகளவான அழிவுகளை எதிர்கொண்ட இரண்டாவது நாடு இலங்கை என்பது வேதனையான உண்மை. எமது நாட்டில் சுமார் 35,322 பேரின் உயிர்கள் பறிபோகின. சுமார் ஐந்தரை இலட்சம் பேர் வரை இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன் லட்சக்கணக்கான கட்டிடங்கள் முற்றாக தரைமட்டமாகியது. வடக்கு-கிழக்கு மாகாண கடற்கரையோரப் பிரதேசங்களே அதிகளவான சுனாமி அழிவுகளை சந்தித்தது.

இலங்கையின் கிழக்கு கல்முனைப் பகுதியை தாக்கிய சுனாமி அலையினால் முற்றாக அழிந்துபோன அக்பர் கிராமம் முதல் பொத்துவில் வரையுள்ள நீண்ட கடற்கரைப் பகுதிகளே பெருமளவு பாதிப்பை கண்டுள்ளன. மட்டுமில்லாமல் திருக்கோவில் தம்பட்டை கிராமங்கள் முழுமையாக அழிந்துள்ளன. 2004இல் ஏற்பட்ட ஆழிப்பேரலையினால் இலங்கையின் பாரிய மனித உயிர்சேதம் அம்பாறை மாவட்டத்திலேயே இடம்பெற்றிருக்கின்றது. இங்கு சுமார் 9 ஆயிரத்திற்கும் அதிக மக்களை கடல் காவுகொண்டுள்ளது. இதற்கு அடுத்ததாக சுமார் 4500 பேர் ஹம்பாந்தோட்டையிலும். சுமார் 3774 பேர் காலியிலும், மட்டக்களப்பில் 2975 பேரும், முல்லைத்தீவில் 2902 பேரும் பலியானதாக ஆரம்ப அறிக்கை கூறியபோதிலும் பின்னர் இவை மாற்றம் ஏற்பட்டது. அதேசமயம் கொழும்பிலிருந்து ஹம்பாந்தோட்டை சென்ற ரயில், அதாவது மிகுந்த சனநெரிசல் மிக்க பயணிகள் ரயில் கடலலையின் சீரற்றத்திற்கு இரையானது. இதில் மிக மகிழ்வுடன் வீடு நோக்கிப் பயணித்தவர்களில் 1700 இற்கும் மேற்பட்ட மக்கள் நிரந்தரமாக உலகை விட்டு விடைபெற்று போனார்கள். இது ஆசியாவின் ரயில் விபத்துக்களில் முக்கியமானதாகவும் உள்ளது. என்பதுதான் மறக்க முடியாத சோக நிகழ்வாகும்.
இந்த சுனாமியின் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 14 நாடுகளில் ஒட்டுமொத்தமாக சுமார் 2,29,866 பேர் உயிரிழந்தனர். மேலும் 1,25,000 பேருக்கு மேல் காயமடைந்தனர். 43,786 காணாமல் போயினர். மேலும் 17 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் வாழ்விடத்தை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர். அதிகம் பாதிக்கப்பட்ட நாடான இந்தோனேசியாவில் மட்டும் 1,67,736 உயிரிழந்துள்ளனர். 37,063 பேர் காணாமல் போயினர்.நேரடியாகப் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்த பல நாட்டு சுற்றுலாப்பயணிகளும் இந்தப் பாதிப்பில் சிக்கி இறந்தது மிகவும் சோகமான விஷயம். மீனவர்கள் சுனாமியில் சிக்கி உயிரிழந்ததால் அவர்களையே நம்பியிருந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்றுவரை அந்தத் துயரத்திலிருந்து மீண்டுவரமுடியாமல் தவித்து வருகின்றனர். சுனாமி பாதிப்பின் நினைவாக ஆங்காங்கே சுனாமி நினைவுப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. சுனாமி பாதிப்பு ஏற்பட்டு இன்றுடன் 17-வது ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் உயிர்களை பறிகொடுத்த பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், மீனவர்கள், பொதுமக்கள் எனப் பலர் ஒவ்வொரு ஆண்டும் அவர்களை நினைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த பொழுதில் இலங்கை மண்ணை காவுகொண்ட சுனாமி அலை அம்பாறையை வெகுவாக பாதித்த போது இல்லிடம் கொடுத்து, உன்ன உணவும் கொடுத்து அடைக்கலம் காத்த சம்மாந்துறை மண்ணின் மனதையும், மறைந்த அமைச்சர் அன்வர் இஸ்மாயிலின் அன்றைய நாட்களையும் பாராட்டாமல் விட முடியாது. நாட்கள் கடந்து மாதங்கள் தாண்டி வருடக்கணக்கில் அடைக்கலம் கொடுத்தது மட்டுமின்றி சுனாமியில் மரணித்த உடல்களையும் சம்மாந்துறை மண் தனது மடியில் தாங்கி கொண்டது இங்கு நன்றியுடன் நினைவு கூறப்பட வேண்டியதே.

இப்படியான கொடூர துயரத்தை தன் மடியில் சுமந்த மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் உலகின் மூலை முடுக்குகள் எல்லாவற்றிலிருந்தும் இலங்கை தேசத்தை வந்தடைந்தது. கொடூர சுனாமியை பின்னாட்களில் சிலர் தங்கச்சுனாமி என்றழைக்கும் நிலைக்கும் சில சம்பவங்கள் நடந்தேறியதை வரலாறு பதிந்துகொள்ள தவறவில்லை. அதிகமான ஆபத்தையும், சேதங்களையும் சந்தித்த மக்களுக்கு இன,மத, பிரதேசவாதங்கள் கடந்து வெளியூர்களை சேர்ந்த சிங்கள சகோதரர்கள் வீடுகளை சுத்தப்படுத்த களமிறங்கி மிகப்பெரும் சேவையொன்றை செய்து முடித்தார்கள். மனிதர்கள், விலங்குகள், பறவைகள் உட்பட பல்வேறு உயிரினங்களின் இறப்பினால் வெளிவந்துகொண்டிருந்த தூர்நாற்றங்களையெல்லாம் கடந்து மனிதாபிமானம் அந்த நாட்களில் தழைத்தோங்கி நின்றது. விடுதலைப்புலிகளும், இலங்கை இராணுவமும், பொலிஸாரும், சிவில் அமைப்புக்களும், வெளிநாட்டு நிறுவனங்களும் பகைமை மறந்து களமாடிய நாளின் தொடக்கப் புள்ளியாக சுனாமி அன்றைய நாள் அமைந்திருந்தது வரலாற்று பொக்கிஷமான நினைவுகள்.
அகதி வாழ்க்கை, நிவாரண தொடர்கள், தரைமட்டமாகிய பொருளாதாரம், வரிசைகளில் உணவுக்காக காத்திருப்பு, வீடு கேட்டு, நிவாரணம் கேட்டு போராட்டங்கள், என புதிய அனுபவங்களை கோடிகளில் மிதந்தவர்களுக்கும் சுனாமி பாடம் கற்பித்திருந்தது. இப்படியான போராட்டங்களின் வெளிப்பாடாக உருவாக்கப்பட்ட நுரைச்சோலை வீட்டுத்திட்டம், மருதமுனை மேட்டுவட்டை வீட்டுத்திட்டம் போன்ற வீட்டுத்திட்டங்கள் பல இன்றும் மக்களிடம் கையளிக்கப்படாத அவலம் தொடர்வதையும் இந்த இடத்தில் நினைப்படுத்தாமல் விட முடியாது.

உயிர்களையும், பல கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் இழக்கச்செய்து பல நூற்றுக்கணக்கானவர்களையும் காணாமல் ஆக்கி அம்பாறை மாவட்ட மக்களுக்கு அகதி வாழ்வின் அத்தனை அத்தியாயங்களையும் கற்பித்தது. இந்த அகதி வாழ்விலிருந்து விடுபட பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அதில் முக்கிய தேவையாக இருந்த இல்லிடம் எனும் பிரச்சினையை தீர்க்க நாட்டின் பல பகுதிகளிலும் பல்வேறு வீட்டுத்திட்டங்கள் உருவானது. அதில் முக்கியமான ஒரு வீட்டுத்திட்டம் தான் நுரைச்சோலை வீட்டுத்திட்டம், மருதமுனை மேட்டுவட்டை வீட்டுத்திட்டம் போன்ற வீட்டுத்திட்டங்கள்.
சுனாமியால் வாழ்விடங்களை இழந்தவர்களுக்காக நுரைச்சோலைப் பிரதேசத்தில் சவூதி அரேபியாவினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் 2010 ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்பட்டது. இந்த வீட்டுத் திட்டத்தை இந்த கட்டுரை வாசிக்கும் நிமிடம் வரை உரிய பயனாளிகளுக்குப் பகிர்ந்தளிக்க முடியாமல் போனமைக்குப் பின்னால், வறட்டு கௌரவத்துடன் கூடிய ஓர் இனவாதச் சிந்தனை, அதிகாரிகளின் அசமந்த போக்கு, சிலரின் சுயநலம் என்பன இருந்தது என்பதைப் புறந்தள்ளி விட முடியாது. சம்பந்தமே இல்லாத காரணங்களை முன்வைத்து தொடுக்கப்பட்ட ஒரு வழக்கின் காரணமாக எப்போதோ பகிர்ந்தளிக்கப்பட்டிருக்க வேண்டிய நுரைச்சோலை வீட்டுத்திட்டமானது, தற்போது சிதைந்து, பழுதடைந்து, காடுகள் வளர்ந்து மனித இனம் பயன்படுத்த முடியாத நிலையில் கொடிய விலங்குகளின் சரணாலயமாக காணப்படுகிறது என்பதுதான் கவலையான விடயம்.

முஸ்லிம் நாடுகளின் நன்மதிப்பை பெற்ற மஹிந்த அரசில் கட்டப்பட்ட இந்த வீட்டுத்திட்டத்தை ராஜபக்ஸக்களின் ஆட்சியில் மக்களுக்கு வழங்க வேண்டும். கடந்த காலங்களில் நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு தேடும் விதமாக அரசின் அச்சாணியாக இருக்கும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ, நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஸ போன்றோருடன் ஏனைய ஆளும்தரப்பு எம்.பிக்களும், எதிர்தரப்பு எம்.பிக்களும் ஒன்றிணைந்து இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும். தேர்தல் மேடைகளில் முஸ்லிம் தலைமைகள் கொடுத்த வஹ்தா நிறைவேற்றப்பட வேண்டும். என்பதை சுனாமி தினமன்ற இன்றும் நினைவுபடுத்துகிறேன். இது போன்றே மருதமுனை வீட்டுத்திட்டமும் உரியவர்கள் அல்லது தகுதியானவர்களுக்கு வழங்க அன்றைய ஜனாதிபதி மைத்திரி கட்டளை விடுத்தும் வீட்டுத்திட்ட இடங்களை பார்வையிட்ட அமைச்சர் நாமல் அதிகாரிகளுக்கு இந்த வீடுகளை வழங்க ஆலோசனை வழங்கியும் இந்த நிமிடம் வரை அதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருப்பதில் பலமில்லியன் ரகசியங்கள் புதைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

மரணித்துப்போன உயிர்களை நினைத்து ஆலயங்களில் இன்று பூஜைகளும், விகாரைகளில் போதனைகளும், தேவாலயங்களில் ஆராதனைகளும், பள்ளிவாசல்களில் துஆ பிரார்த்தனைகளும் நடைபெறுகிறது. இனவாதம் கடந்து போன மதவாதம் மாண்டுபோன சுனாமி அன்று நாங்கள் இருந்த ஒற்றுமை தொடர்ந்தால் நல்லவைகள் நாலு நடந்திருக்கும் நமது நாட்டில். அன்னதானங்கள் பல இடங்களில் இன்று நடைபெறுகிறது. கல்லறைகள், கப்ருகள் கண்ணீரால் நனைகிறது. அனைத்து ஆத்மாக்களும் சாந்தியடைய பிராத்தனைகள்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :