2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் செயற்படுத்தப்படும் "கிராமத்துடன் உரையாடல்" வேலைத்திட்டம் ஆரம்பம் !



மாளிகைக்காடு நிருபர்-
ரவுசெலவுத்திட்டம் 2022 இற்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் அபிவிருத்தியின் பயன்கள் விரைவாக மக்களுக்கு சென்றடையும் வகையில் கிராம மட்ட பிராந்திய அபிவிருத்திகளுக்கு முன்னுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் செயற்படுத்தப்படுகின்ற "கிராமத்துடன் உரையாடல்" கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி கருத்திட்ட முன்மொழிவுகளை செயற்படுத்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் என்பற்றைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களினூடாக முழு வேலைத்திட்டத்தையும் முன்னுரிமை வேலைத்திட்டமாக செயற்படுத்துவதற்கான இறக்காமம் பிரதேச செயலக பிரிவுக்கான ஆரம்பகட்ட கூட்டம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி) யின் தலைமையில் திங்கட்கிழமை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

"கிராமத்துடன் உரையாடல்" கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்விற்கு பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் திலக் ராஜபக்க்ஷ கலந்து கொண்டதோடு இவ்வேலைத்திட்டம் தொடர்பிலான சிறப்புரையாற்றினார். மேலும் விஷேட அதிதியாக வனவிலங்கு பாதுகாப்பு, வனவளஜீவன அபிவிருத்தி மற்றும் யானை வேலிகள் அமைத்தல் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவின் பிரத்யோக செயலளார் அஞ்சன திஸாநாயக்கவும், சிறப்பு அதிதியாக அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம். சப்றாஸ் ஆகியோரை கலந்துகொண்டதோடு இவ்வேலைத்திட்டம் பற்றிய விளக்க உரையும் வழங்கப்பட்டது.

பிரதேச செயலக மட்டத்தில் கிராமிய அபிவிருத்தி கருத்திட்ட முன்மொழிவுகளை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் பற்றிய விளக்கம் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்ஸாரினால் வழங்கப்பட்டது. தற்போதைய கோவிட்-19 தொற்றுநோய் நிலையினால் ஏற்படுத்தப்பட்டுள்ள குறுகிய கால சவால்களுக்கு கவனம் செலுத்துவதன் மூலம் கிராமிய மக்களின் சிதைக்கப்பட்டுள்ள வாழ்வாதாரங்களை புத்துயிர் அளித்து கிராமிய உற்பத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதனூடாகத் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே இவ்வேலைத்திட்டத்தின் முதன்மையான தேவையாகும்.
மேலும் கிராமிய மட்ட உட்கட்டமைப்பு வசதிகள், வீதிகள் என்பவற்றை உடனடியாக சீரமைத்து பிராந்திய ரீதியிலான புத்தெழுச்சியை கட்டியெழுப்புவதும் இதன் முதன்மை நோக்கமாகும். இவ்வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி கருத்திட்டங்கள் வாழ்வாதார அபிவிருத்தி - 40%,பொது உட்கட்டமைப்பு அபிவிருத்தி - 40%, சுற்றாடல் மற்றும் நிலையான அபிவிருத்தி - 10%, சமூக நலன் மற்றும் சமூக அபிவிருத்தி - 10% போன்ற பிரிவுகளின் கீழ் செயற்படுத்தப்படவுள்ளது.

அதன் பிரகாரம் இவ்வேலைத் திட்டங்கள் மற்றும் கிராமிய அபிவிருத்திகளுக்கான நிதி ஒதுக்கீடானது கிராம அபிவிருத்தி கருத்திட்டங்கள் (கிராம அலுவலகர் பிரிவு ஒன்றுக்கு ரூபா 3 மில்லியன்) - ரூபா 42,063 மில்லியன், உள்ளூராட்சி பிரிவுகளின் அபிவிருத்தி (பிரிவுக்கு ரூபா 4 மில்லியன்) - ரூபா 19,668 மில்லியன், கிராமிய வாழ்வாதார அபிவிருத்தி (மேற்குறிப்பிட்டவற்றுக்கு மேலதிகமாக) - ரூபா 19,894 மில்லியன், பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்டம் (நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ரூபா 15 மில்லியன்) - ரூபா 3,375 மில்லியன், என்ற நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் "கிராமத்துடனான உரையாடல்" ஆரம்ப கட்ட கலந்துரையாடல் மூலம் கருத்திட்டங்கள் பெறப்பட்டு 2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளது.

இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஜே.கே.ரஹ்மான், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக கணக்காளர் றிம்ஷியா அர்சாட், சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் எம்.சி.எம்.தஸ்லீம், கிராம நிலதாரி நிருவாக உத்தியோகத்தர் எச்.பி. இந்திரஸ்ரீயசரட்ன, சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல். ஆஹிர் உட்பட பிரதான கட்சிகளின் பிரதிநிதிகள், அதிபர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள், இளைஞர் கழக பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :