கிழக்கு மாகாணத்தில் தற்போது செயற்படும் அனைத்து பாலங்களின் தரம் குறித்து ஆராய விசேட குழுவொன்று அனுப்பி வைக்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.
பொலிஸ், மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியல் பிரிவு மற்றும் கடற்படையினரால் இந்தக் குழுவிற்குத் தலைமை தாங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்தின் போது காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரை பார்ப்பதற்காகக் இன்று (25) கிண்ணியா தளவைத்தியசாலைக்கு சென்ற போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர்:
"இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நாம் அனைவரும் உறுதி எடுக்க வேண்டும். ஒருவரையொருவர் நோக்கி விரல் நீட்டும் நேரம் இதுவல்ல. போருக்குப் பின்னர் இலங்கையில் அதிக எண்ணிக்கையிலான பாலங்கள் கிழக்கு மாகாணத்தில் கட்டப்பட்டன.
அது மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திலிருந்தே ஆரம்பமானது. இலங்கையின் மிக நீளமான பாலம் கிழக்கு மாகாணத்தில் உள்ளது. இந்த இடத்தில் பாலம் கட்டும் பணி கோவிட் தொற்றால் பாதித்ததால் தாமதமானது. மாற்று வழி இருந்தபோதிலும் மக்கள் அதை பயன்படுத்த விரும்பவில்லை.
இந்த சம்பவத்தை நாங்கள் இப்போது விசாரித்து வருகிறோம். இன்று(25) அறிக்கை பெறப்படும். அந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம். குற்றவாளிகள் இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம். பொறுப்பிலிருந்து யாரும் தப்ப முடியாது.
எனினும் தற்போது இவர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகள் கடற்படையினரால் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் இந்த பாலத்தின் பணிகளை விரைவில் முடிக்க அரசு கவனம் செலுத்தி வருகிறது'' என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment