இலங்கை இவ்வருடம் ஒக்டோபர் முதல் அடுத்த வருடம் செப்டம்பர் வரை $7. 726 Billion ( சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் ) வெளிநாட்டு கடனை மீள செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் தற்போது $2. 2 Billion ( சுமார் 50 ஆயிரம் கோடி ரூபா ) மாத்திரமே கையிருப்பில் உள்ளது. அதில் $1. 6 Billion ( சுமார் 36 ஆயிரத்து 250 கோடி ரூபா) மாத்திரமே பயன்படுத்தக்கூடிய நிதியாகும். இந்த நெருக்கடியை எதிர்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும். அவ்வாறில்லையெனில் வெளிநாட்டு கடன் தவனைகளை மீள்திட்டமிடலுக்கு உட்படுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ் டி சில்வா தெரிவித்தார்.
வெளிநாட்டு கடன்களுக்கு அப்பால் உள்நாட்டு வங்கிகளிடமிருந்து அரசாங்கம் $1.46 Billion ( சுமார் 33 ஆயிரம் கோடி ரூபா ) கடனையும் பெற்றுள்ளது. இதனை அரசாங்கம் மீள செலுத்தாவிட்டால் நாட்டின் வங்கிக் கட்டமைப்பே பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும் என்றும் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் தற்போது பணவீக்கம் வானளவிற்கு உயர்ந்துள்ளது.
பொருட்களின் விலைகளும் கண்மூடித்தனமான அதிகரிக்கப்படுகின்றன. இவற்றுக்கு டொலர் நெருக்கடியே காரணம் என்று அரசாங்கம் கூறிக்கொண்டிருக்கிறது.
டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு பரிந்துரைத்தாலும் அரசாங்கம் அதனை மறுக்கின்றது. இவ்வருடம் ஒக்டோபர் மாதம் முதல் அடுத்த வருடம் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் $7.726 Billion ( சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபா ) வெளிநாட்டு கடனை மீள செலுத்த வேண்டியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது $2.2 Billion ( சுமார் 50 ஆயிரம் கோடி ரூபா ) மாத்திரமே கையிருப்பில் உள்ளது. அதில் $1.6 Billion ( சுமார் 36 ஆயிரத்து 250 கோடி ரூபா) மாத்திரமே பயன்படுத்தக் கூடிய நிதியாகும். இம்மாத இறுதியில் இந் நிதி மேலும் குறைவடையும். இவ்வாறான நிலையில் ஒருபுறம் கடன் மீளச் செலுத்தல் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது. அதேபோன்று மறுபுறம் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது. தற்போது அரசாங்கம் இறக்குமதிகளை மட்டுப்படுத்தி டொலரை மீதப்படுத்தி வெளிநாட்டு கடனை செலுத்துவதில் அவதானம் செலுத்தியுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய சுமார் 1000 கொள்கலன் துறைமுகங்களில் தேங்கியுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்தியாவிடமிருந்து $1.5 Billion ( சுமார் 34 ஆயிரம் கோடி ரூபா ) பெறுவது தொடர்பில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர சீனா, ஓமான், கட்டார் ஆகிய நாடுகளிலிருந்தும் டொலர் கிடைக்கும் என்று கூறிக் கொண்ட போதிலும், அவ்வாறு கிடைப்பதற்கான எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை, அத்தோடு நாட்டின் சொத்துக்களை விற்று $6 Billion ( சுமார் ஒரு லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபா) பெறுவதற்கான முயற்சியாக அண்மையில் அரசாங்கம் பாரிய முதலீட்டு மாநாடொன்றையும் நடத்தியுள்ளது. யுகதனவி வேலைத்திட்டத்தின் ஊடாக $250 Million ( சுமார் 5,700 கோடி ரூபா ) பெற்றுக் கொண்டுள்ளது. எவ்வாறிருப்பினும் இது போன்ற செயற்பாடுகள் டொலர் நெருக்கடிக்கான தீர்வாக அமையாது. இதற்கான இரு மாற்று வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதாகும். 2வது தெரிவான மற்றையது வெளிநாட்டுக் கடன் தவணைகளை மீள் திட்டமிடலுக்கு உட்படுத்துவதாகும். செலுத்த வேண்டிய கடன் மற்றும் வட்டித் தொகையை அடுத்தடுத்த வருடத்துக்கு பிற்போட முடியும். எனவே இதன் மூலம் கையிருப்பிலுள்ள டொலர் குறைவடையாமல் பேண முடியும். அதே போன்று முதல் தெரிவான சர்வதேச நாணய நிதியத்தை நாடினால் வருடா வருடம் செலுத்த வேண்டிய கடன் தவனையை 10 ,15 அல்லது 20 வீதத்தினால் குறைத்துக் கொள்ள முடியும். அவ்வாறன்று இதே நிலைமை தொடருமாயின் பொருளாதார நெருக்கடிகள் எதிர்வரும் குறுகிய காலத்திற்குள் சமூக மற்றும் அரசியல் நெருக்கடியாக மாற்றமடையும்.
சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதன் ஊடாக கடன் பெற முடியாது. கடன் கோரினாலும் $1 Billion அல்லது $2 Billion மாத்திரமே பெற முடியும். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து அதிகூடிய தொகையாக $2.6 Billion மஹிந்த ராஜபக்சவே பெற்றுள்ளார். சர்வதேச நாணய நிதியம் சர்வதேசத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டதும் அங்கீகரிக்கப்பட்டதுமான அமைப்பாகும். இதனை நாடுவதன் மூலம் இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் மற்றும் இலங்கைக்கு இடையில் 3ம் தரப்பாக செயற்பட்டு எமக்கான கடன் மீள செலுத்தல் சலுகைகள் பெற்றுக் கொடுக்கப்படும். வெளிநாட்டு கடன்களுக்கு அப்பால் உள்நாட்டிலுள்ள வங்கிகளிடமிருந்தும் அரசாங்கம் $1.46 Billion ( சுமார் 33 ஆயிரம் கோடி ரூபா ) கடனைப் பெற்றுள்ளது. இதனை அரசாங்கம் மீள செலுத்தாவிட்டால் நாட்டிலுள்ள வங்கிக் கட்டமைப்பு பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும். இவ்வாறான நெருக்கடிகளை சமாளிப்பதற்கு குறைந்தது $4 Billion ( சுமார் 91 ஆயிரம் கோடி ரூபா ) கையிருப்பில் இருக்க வேண்டும். எனவே இதனை முகாமைத்துவம் செய்ய முடியவில்லை எனில், இயலாமையை ஏற்றுக் கொண்டு பதவி விலகிச் செல்லுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். சவால்களை நாங்கள் பொறுப்பேற்று பொருளாதாரத்தை மேம்படுத்துகின்றோம். சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்ல வேண்டுமாயின் விதிக்கப்படும் ஒரேயொரு நிபந்தனை அரச நிதிக் கொள்கையாகும். அதனை அரசாங்கம் முறையாகப் பேண வேண்டும். எனினும் அண்மையில் இலங்கைக்கு ஓமான் $3.5 Billion ( சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் ) தருவதாகவும், அதனை பெற்றுக் கொள்வதாயின் LNGயின் ஒரு பகுதியை வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தை நாடினால் இவ்வாறு எந்த நிபந்தனையும் விதிக்கப்படமாட்டாது என்றார்.
0 comments :
Post a Comment