கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களிலும் அரச கட்டுப்பாட்டு விலையில் சீனியினை விநியோகிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில், மாகாணத்திலுள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கங்களில் தற்போது ஒரு கிலோ சீனி 125 ரூபாவுக்கு வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமான ஏ.எல்.எம்.அஸ்மியின் முயற்சியின் பலனாகவும் கூட்டுறவு சேவைகள் சந்தைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆகியோரின் ஒத்துழைப்புடனும் முழுக்கிழக்கு மாகாணத்திலும் அரச நிர்ணய விலையில் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக சீனி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் ஆர்வத்துடன் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களுக்கு விஜயம் செய்து, சுகாதார வழிமுறைகளைப் பேணி சீனியினை கொள்வனவு செய்து வருகின்றனர்.
சீனி தட்டுப்பாடு நிலவுகின்ற இடர்காலத்தில் தற்காலிக தீர்வொன்றுக்காக விரைந்து செயற்பட்ட ஆணையாளர் அஸ்மி கிழக்கு மாகாண பல நோக்கு கூட்டுறவு சங்கங்களுக்கு 60 ஆயிரம் கிலோகிராம் சீனியை வழங்க நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்.
இதனடிப்படையில் திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை ஆகிய நான்கு பிரிவுகளிலும் உள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கங்களுக்கு தலா 15000 கிலோகிராம் சீனி பகிர்ந்தளிக்கப்பட்டு தற்போது விநியோகிக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய அசாதாரன சூழலில் பலநோக்கு கூட்டுறவு சங்கங்களினூடாக சீனியை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொண்ட கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமான ஏ.எல்.எம்.அஸ்மி, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர், பிரதம செயலாளர் ஆகியோருக்கு மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.

0 comments :
Post a Comment