அரசுக்கு நாட்டின் மீதும் மக்கள் மீதும் அக்கறை இருந்திருந்தால் கடந்த அரசின் எரிபொருள் விலைச் சூத்திரத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தி இருக்கும்நேர்காணல் சில்மியா யூசுப்.-

கேள்வி :
கொவிட்19 அதிகரிப்பின் காரணத்தால் நாடு மிக நீண்ட காலமாக முடக்கப்பட்டுள்ளதனால்
மக்கள் மிகவும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில் அரசு எரிபொருளின் விலையை அதிகரித்து உள்ளது இது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்:
இந்த அரசுக்கு நாட்டு நலன் குறித்தோ மக்களது பிரச்சினைகள் பற்றியோ அக்கறை கிடையாது. அப்படி இருந்திருந்தால் கடந்த அரசின் எரிபொருள் விலைச் சூத்திரத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தி இருக்கும். அவ்வாறு செய்திருந்தால் இன்று மக்கள் இவ்வாறு வாழ்க்கைச் செலவின அதிகரிப்பால் அல்லல்படும் நிலை வந்திருக்காது. இதை மக்கள் மிக நன்றாக உணர்ந்துள்ளார்கள். எனவே நான் விரிவாக விளக்க வேண்டிய அவசியமில்லை.
கேள்வி:
ரணில் விக்ரமசிங்க மற்றும் ஞானசர தேரோ ஆகியோர் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் எம்.பிகளாக சத்தியப் பிரமாணம் செய்ய இருக்கிறார்கள். ரணிலின் வருகையுடன் சஜித் பிரேமதாஸவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஆபத்து ஏற்படும் என பரவலாக பேசப்படுகிறது. உங்கள் கட்சியை சேர்ந்த சிலர் அவருடன் இணைய இருப்பதாக அறிய வருகிறது. இது பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?
பதில்:
ரணில் விக்ரமசிங்க அவர்களும் எனது தந்தையும் சமகாலத்தில் அரசியல் களம் கண்டவர்கள். எனக்கு அவர் மீது மிகுந்த மதிப்புள்ளது. ஆனால் கடந்த காலத்தில் அவரது தீர்மானங்கள் தான் இன்றைய எமது அரசியல் நிலைமைக்கு முக்கிய காரணம் எனபதை மறுக்க முடியாது. அவரது பாராளுமன்ற மீள் பிரவேசம் எமது தலைவர் சஜித் அவர்களின் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு ஆபத்தாக அமையும் என்ற கருத்துருவாக்கம் அரச தரப்பால் தான் செய்யப்பட்டு பரப்பப்படுகிறது. இதனால் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ளலாம். சஜித் அவர்கள் எதிரிக்கட்சி தலைவராக இருப்பது அரசுக்கு சவாலாக இருக்கின்றது. எனவே அவரை விட தமக்கு வசதியான ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக இருக்க வேண்டுமென அரசாங்க தரப்பு கனவு காண்கின்றது. ஆனால் அந்த கனவு பலிக்காது. ஒரு ஜனாநாயக கட்சி என்ற அடிப்படையில் முரண்பட்ட பல கருத்துப்போக்குகள் எமக்குள் இருந்தாலும் இந்த மக்கள்விரோத ஆட்சியை வீழ்த்தி மக்களுக்கு விமோசனம் தரும் ஆட்சியினை கொண்டுவர வேண்டுமென்ற பொதுவான இலக்கில் நாம் ஒற்றுமையாக வும் உறுதியாகவும் இருக்கின்றோம்.

கேள்வி:
ஞானசார தேரரின் பாராளுமன்ற பிரவேசம் முஸ்லிங்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தாதா?

பதில்:
ஞானசார தேரரதும் அவர் சார்ந்த கட்சியினதும் அரசியலுக்கு முழுமையான பொறுப்பு ஜனாதிபதி கோட்டாபய அவர்களையே சாரும். அவர் பாராளுமன்ற பிரவேசம் செய்வது இந்த நாட்டின் ஜனாநாயக உரிமையின் பாற்பட்டது. அது முஸ்லிம்களுக்கு பிரச்சினையா இல்லையா என்று பேசுவது பொருத்தமற்றது. ஆனால் இந்த நாட்டின் சட்டதிட்டங்களை மதிக்காத, இந்த நாட்டிலுள்ள காவியுடைக்கான சிறப்பு சலுகைகளை பயன்படுத்தி இனவாத பிரச்சனைகளை உருவாக்குகின்ற ஒருவரை போஷித்து, அரசியல் அங்கீகாரம் கொடுத்து , இந்த நாட்டு நீதித்துறை குற்றவாளி என தீர்ப்பளித்து சிறையில் தள்ளியவரை நிறைவேற்று அதிகாரத்தின் பொதுமன்னிப்பு போர்வையால் சுற்றவாளியாக்கி நாடாளுமன்றத்துக்கு வரக்கூடிய வகையில் வழிசெய்தமை முழு நாட்டுக்கும் மூவினத்துக்கும் ஆபத்தான ஒன்று என்பதே என் தனிப்பட்ட கருத்து.

கேள்வி:
தற்போது கொவிட் மரணங்களில் முஸ்லிம்களின் மரண வீதமே அதிகரித்து வருகின்றது. இதற்கான காரணம் என்னவாக இருக்கும்?

பதில்:
இந்த நாட்டில் ஆளும் தரப்பினாலும் அதற்கு அப்பாலுள்ள சில பேரினவாத சக்திகளாலும் முஸ்லிம் விரோத போக்கும் முஸ்லிம்களுக்கெதிரான சதி நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டமையும் படுகின்றமையும் மறுக்க முடியாத கசப்பான உண்மைகள் என்பதை நான் ஏற்றுக்கொள்வேன். ஜனாஸா எரிப்பும் அதைத் தொடர்ந்த பல நிகழ்வுகளும் இதற்கு போதுமான உதாரணங்கள். ஆனால் இந்த நாட்டில் 10 வீதமான முஸ்லிம்களில் இருந்து மொத்த கொவிட் மரணங்களில் 40 வீதத்துக்கும் அதிக மரணங்கள் இருப்பது அதிர்ச்சியானது.
இதற்கு காரணம் ஒன்றுக்கு மேற்பட்டதாக இருக்கலாம். ஆயினும் எம்மால் மிகத்தெளிவாக உணர முடிந்த முதற்காரணம் அல்லது ஒரே காரணம் எமது முஸ்லிம் மக்கள் கொவிட் தொற்றின் அறிகுறிகள் தெரிந்தாலும் கூட வைத்திய சாலையை நாடி உரிய சிகிட்சையை உடனடியாக எடுப்பதில்லை என்பது தான். கொவிட் குறித்த விழிப்புணர்வு ஆலோசனைகள் தினம்தினம் பல தரப்பாலும் மேற்கொள்ளப்பட்டபோதும் நமது மக்கள் அதில் அசமந்தமாக இருப்பது வேதனையைத் தருகிறது. நோயின் முதற் கட்டத்தில் நாட வேண்டிய வைத்திய சிகிச்சையை பெறுபவதற்கு மரணத்தை நெருங்கிய வேளையில் தான் நமது மக்கள் போகின்றார்கள்.
இந்த ஆபத்தான நிலை குறித்த பாரிய விழிப்புணர்வு பணி இந்த நிமிடத்தில் நம் சமூகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும். மாறாக இதற்கு இனவாதத்தையோ, இஸ்ரேலிய சதியையோ, இலுமினாட்டி களையோ அல்லது இன்னும் எதனையோ குறைகூறி காலம் தள்ளினால் நாம் இன்னும் கடுமையாக வருந்த வேண்டியிருக்கும்.


கேள்வி. முஸ்லிம் பெண்கள் மீதான புர்க்கா தடை குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: முகத்தை மூடி ஆடையணிவதை தனிப்பட்ட முறையில் நான் ஆதரிப்பவனல்ல. ஆயினும் அது இந்நாட்டு முஸ்லிம் பிரஜைகளில் ஒரு சாராரின் உரிமை என்பதில் என்னிடம் இரண்டாம் கருத்து இல்லை. அந்த ஆடையை குறிப்பிட்ட இவ்வாறான இடங்களில், இந்த சந்தர்ப்பங்களில் தவிர்க்க வேண்டும் என்று சட்டம் இருப்பதில் நியாயம் இருக்கிறது. உதாரணமாக வங்கிகள், பல்கலைக்கழகங்கள், காவல் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற வரையறுத்த இடங்களை கூறலாம். அதை முற்றாக கைவிட வேண்டுமென்று கோருவதில் நியாயமில்லை. உலகளவில் உருவான இஸ்லாம் மாபியாவை உள்நாட்டுக்குள் இறக்குமதி செய்த சக்திகளும், அந்த அரேபிய கலாசாரத்தை இஸ்லாமிய மார்க்கமாக வரிந்து கட்டி பின்பற்றிய முஸ்லிம் சமூகத்தரப்பும் இதற்கு பங்களிப்பு செய்துள்ளனர். சிலர் பெரும்பான்மை சமூகத்தை பிழையாக வழிநடத்தி இவ்வாறான சில்லறை விடயங்களை பூதாகரமாக்கி அரசியல் செய்ததும் இதற்கு பிரதான காரணம் எனலாம்.

கேள்வி: விரைவில் மாகாண சபை தேர்தல் நடக்கக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் சில பெரும்பான்மை சக்திகள் மாகாண சபை முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனவே...

பதில்: மாகாண சபை தேர்தலை நடத்தக் கூடாது என்றும் மாகாண சபை முறைமை இல்லாமலாக்கப்பட வேண்டுமென்றும் எழும் கோரிக்கைகளை அரசாங்கம் விரும்பினாலும் செயற்படுத்த முடியாது என்பதுதான் யதார்த்தம்.

மாகாண சபை முறைமை இந்த நாட்டில் ஒரு தனிநாடு உருவாகி விட கூடாது என்பதற்காக இந்தியாவால் திணிக்கப்பட்ட ஒன்று. எனவே இது தொடர வேண்டும் என்பது எம்மை விட இந்தியாவுக்கு அதி கரிசனைக்குரிய விடயம். மாகாண சபை முறையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் உள்ள ஒரே நன்மை இலங்கையில் பிரிவினை கோரிக்கைக்கு இருக்கின்ற நியாயத்தன்மையை மாகாண சபை நிர்வாகம் மூலம் இல்லாமல் செய்வதுதான். இந்த யதார்த்தம் புரியாமல் சில பெரும்பான்மை சக்திகள் மாகாண சபை முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றன. மாகாண சபை முறைமையை இப்போதைக்கு இல்லாமலாக்குவது சாத்தியமில்லை .
மாகாண சபை நிர்வாகம் மத்திய அரசின் செயற்பாட்டை இலகுபடுத்தி நாட்டின் அபிவிருத்தியை துரிதப்படுத்த வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாற்றமான நிலைமையை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக கல்வி மற்றும் சுகாதார துறைகளில் மாகாண சபை நிர்வாகத்தை விட்டு மத்திய அரசு நிர்வாகத்துக்குள் செல்ல வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கிண்ணியா வைத்தியசாலை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. அதேபோல் தேசிய பாடசாலைகளாக்க எழும் கோரிக்கைகள் இன்னொரு எடுத்துக்காட்டு.இவ்வாறான நிலைமைகளால் மாகாண சபை நாட்டுக்கு ஒரு பாரம் என்றும் அது மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் பொறிமுறை என்றும் விமர்சிக்கப்படுகிறது.
இந்த காரணங்களுக்காக மாகாண சபை முறைமை அவசியமில்லை என்றும் மாகாண சபை தேர்தலை நடாத்தக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்தால் அதில் ஒரு நியாயம் இருப்பதை ஏற்றுக் கொள்ளலாம். எனினும் மாகாண சபைத் தேர்தல்கள் விரைவில் நடைபெறும் என்பதே யதார்த்தம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :