தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு திமுக தலைமையிலான புதிய அரசு மதிப்பளிக்க வேண்டும் :-பாப்புலர் ஃப்ரண்ட் வெற்றி பெற்ற திமுக கூட்டணிக்கு வாழ்த்துக்கள்



சென்னை : தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயலாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் முகமது சேக் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், மகத்தான வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் அதன் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது. மேலும் பத்து வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்துள்ள திமுக தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தனது செயல்பாடுகளை அமைக்க வேண்டும் எனவும் புதிய அரசை கேட்டுக் கொள்கிறது.

திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள படி மக்கள் நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் தமிழர்களின் நீண்டநாள் கோரிக்கைகளான ஏழு தமிழர்கள் உள்ளிட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்வது, தமிழகத்தை பாதிக்கும் நாசகார திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது, குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் கருப்புச் சட்டங்களுக்கு எதிரான தீர்மானங்கள், தமிழ்நாட்டு உரிமைகளை பாதுகாப்பது, முஸ்லிம்களின் இடஒதுக்கீடு, முஸ்லிம்களின் சமூக மேம்பாடு உள்ளிட்ட விவகாரங்களில் புதிய அரசாங்கம் உரிய கவனத்தை செலுத்தி துரித நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் இத்தருணத்தில் கேட்டுக் கொள்கிறது.
அதிமுக கூட்டணியை தமிழக மக்கள் புறக்கணித்ததற்கான முக்கிய காரணம் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது தான். மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள் மீதான கோபமும் அதன் சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்ள மக்கள் விரும்பாததுமே அக்கட்சி இடம்பெற்ற அதிமுகவை மக்கள் தோற்கடித்துள்ளனர். 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழக மக்கள் இதனை தெளிவாக உணர்த்தியுள்ளனர். பாரதிய ஜனதா கட்சியை தமிழக மக்கள் புறக்கணித்துள்ளதை தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. எனவே அக்கட்சியுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ வருங்காலங்களில் திமுக நட்பு கொள்வதை சிந்தனை கூட செய்யக்கூடாது. அரசியல் தோல்வியுடன் சங்பரிவாரின் தோல்வி முழுமையடைந்து விடவில்லை என்பதை உணர்ந்து சித்தாந்த ரீதியாக தனது தொண்டர்களையும் மக்களையும் திமுக பயிற்றுவிக்க வேண்டும்.

மேலும் மக்கள் விரோத திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முயலும் மத்திய அரசின் எவ்வித அழுத்தங்களுக்கும் ஒரு போதும் செவிசாய்க்கக் கூடாது. மேலும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் எண்ணம் தனது கடைசி தொண்டனுக்குக் கூட வந்து விடக்கூடாது என்பதையும் திமுக உறுதிப்படுத்த வேண்டும்.
அதிமுக ஆட்சி மீது மக்களுக்கு விமர்சனங்களும் எதிர்ப்புகளும் இருந்தாலும், பாஜக உடனான அதன் கூட்டணியே இந்த சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணம் என்பதை அக்கட்சியின் தலைமை தற்போது உணர்ந்திருக்கும். தமிழகத்தில் பாஜக உடனான கூட்டணியை இனியும் காலம் தாழ்த்தாமல் முற்றிலுமாக அக்கட்சி துண்டித்துக் கொள்ள வேண்டும். பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிகள் அழிவையே சந்தித்துள்ளன என்பதை இத்தருணத்தில் அதிமுகவிற்கு மீண்டும் நினைவூட்ட விரும்புகிறோம்.

தமிழக மக்களுக்காவும், தமிழ் மண்ணிற்காகவும் போராடி வரும் தோழர் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் மமக கட்சி உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருப்பது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அதேவேளையில் தொடர்ச்சியாக மக்கள் நலனில் அக்கறை கொண்டு மக்கள் நலப் போராட்டங்களில் மும்முரமாக ஈடுபட்டு வரும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக சட்டமன்றத்திற்கு யாரும் தேர்ந்தெடுக்கப்படாதது மிகப் பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. போராட்ட அரசியலில் ஈடுபட்டுள்ள கட்சிகளுக்கு மக்கள் உரிய அங்கீகாரத்தை வழங்கவில்லை என்பதை இது காட்டுகிறது. மக்கள் நலத் திட்டங்கள் சிறப்பாக செயல்படுவதற்கும் மக்கள் விரோத திட்டங்கள் நடைமுறைக்கு வருவதை தடுப்பதற்கும் எஸ்.டி.பி.ஐ போன்ற கட்சிகளின் இருப்பு சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் அவசியம் என்பதை இனியேனும் மக்கள் உணர்ந்து வரும் காலங்களில் வாக்களிக்க வேண்டும்.
மற்றொரு புறம் குறைந்துவரும் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் முஸ்லிம் அரசியல் குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது. கூட்டணி அடையாளத்திற்காக சில இடங்களை மட்டும் பெற்றுக்கொண்டு திருப்தி கொள்ளும் போக்கை முஸ்லிம் அரசியல் கட்சிகள் இனியும் தொடரக்கூடாது. முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு முஸ்லிம் அரசியல் கட்சிகளால்தான் சரியான தீர்வை வழங்க முடியும் என்பதை உணர்ந்து நியாயமான உரிய இடங்களை கூட்டணியில் பெற வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது என தெரிவித்துள்ளார்.
 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :