கல்முனைப் பிரச்சினை! திரு சாணக்கியன் உட்பட தமிழ் பா உ க்களுக்கு!!வை எல் எஸ் ஹமீட்-
திர்வரும் 4ம் திகதி கல்முனை உப பிரதேச செயலகத் தரமுயர்த்தல் தொடர்பான கூட்டம் நடைபெற இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பிரஸ்தாபிக்கப்படுவதைக் காணமுடிகிறது. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக திரு சாணக்கியன் பா உ அவர்களும் இந்த விடயம் தொடர்பாக அதீத அக்கறை காட்டுவதை சமூக வலைத்தளங்களில் காணமுடிகிறது.
தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்றவகையில் உங்கள் அக்கறையில் யாரும் தவறுகாண முடியாது. அது உங்களது கடமையும்கூட. ஆனால் கல்முனையில் என்ன பிரச்சினை என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? என்பதுதான் எனது இந்த ஆக்கத்திற்கான அடிப்படையாகும்.

தாங்கள் கல்முனைத் தமிழ்த்தரப்பினரிடம் இது தொடர்பாக அடிக்கடி கலந்தாலோசனை நடாத்துகின்ற செய்திகளைக் காணமுடிகிறது. அதில் தவறில்லை. ஆனால், அக்கலந்துரையாடல்களில் அவர்கள் எதனைக் கூறுகின்றார்களோ அதுதான் கல்முனையின் பிரச்சினையாக நீங்களும் ( சக தமிழ் பா உ க்களும்) எண்ணியிருக்கிறீர்கள். இதனைக் கடந்தகால பல தமிழ் பா உ க்களின் பாராளுமன்ற உரைகளில் இருந்து அறியமுடிகின்றது.

திரு சாணக்கியன் அவர்களே!

அண்மைக்காலமாக, தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிலும் குறிப்பாக நீங்கள் முஸ்லிம்களுக்காக ஓங்கிக்குரல்கொடுத்து வருவதையிட்டு முஸ்லிம் சமூகம் நன்றிப்பூக்களை பல சந்தர்ப்பங்களில் சொரிந்திருக்கிறது. அதேநேரம், ஒரு கல்லில் இரு மாங்காய் என்பதுபோல் நீதி கோரும் உங்கள் சர்வதேசப் போராட்டத்திற்கு அது மேலும் வலுசேர்க்கப் பயன்பட்டிருக்கின்றது; என்ற உண்மையும் இருக்கின்றது. அது தொடர்பாக இங்கு எழுத விரும்பவில்லை. தேவைப்படின் பின்னர் தனியாக எழுதலாம்.

இருந்தாலும் இதற்காக, கல்முனை செயலகப் பிரச்சினையில் முஸ்லிம்களுக்காக சில விட்டுக்கொடுப்புகளைச் செய்யுங்கள்; என்று நிச்சயமாக நாம் உங்களைக் கேட்கவில்லை. கேட்கப்போவதுமில்லை. மட்டுமல்ல, தமிழர்களுக்காக நீங்கள் போராடுவதில் தவறேதுமில்லை. ஆனால் இதில் நியாயம் எது? என்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்களா? என்பதுதான் கேள்வியாகும்.

பாராளுமன்றத்தில் மிக நேர்த்தியாக பேசுகின்ற திரு சுமந்திரன், அதேபோன்று திரு கஜேந்திரன் பொன்னம்பலம் போன்றோர் முஸ்லிம்களுக்காகவும் ஓங்கிக்குரல் கொடுத்தவர்கள். கல்முனை விடயம் தொடர்பாக இவர்களது கடந்தகால ஒரு தலைப்பட்ச கருத்துக்களைப் பார்க்கும்போது இவர்கள் முஸ்லிம்களுக்கெதி்ரான எண்ணத்தில் அக்கருத்துக்களை முன்வைக்கவில்லை; மாறாக, அவர்கள் ஒரு தலைப்பட்சமாக அறிந்துகொண்ட விடயத்தை உண்மையென நம்பித்தான் அக்கருத்துக்களை முன்வைக்கிறார்கள்; என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

பிரதிநிதித்துவமற்ற கல்முனை
———————————————-

பாராளுமன்றில் நீங்களெல்லாம் தெளிவில்லாததன் காரணமாக ஒரு தலைப்பட்சமாக கருத்துக்களை முன்வைக்கும்போது அதன் மறுபக்கத்தை சொல்லத்தெரிந்த பிரதிநிதிகள் கல்முனை முஸ்லிம்களின் சார்பில் அங்கு அவையில் இல்லை; அதனால் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த நல்லாட்சி தொட்டு இன்றுவரை தமிழர் பக்கமே நியாயம் இருப்பதுபோல் ஓர் பிரேமையை ஏற்படுத்திவருகிறார்கள்.

திரு சாணக்கியன் அவர்களே! திரு சுமந்திரன் அவர்களே! திரு கஜேந்திரன் பொன்னம்பலம் அவர்களே! ஏனைய தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களே!!!

நீங்கள் கடந்த 30 வருடகாலமாக இயங்கிவரும் கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தத்தானே கேட்கிறீர்கள்! அதிலென்ன தவறு என்பது தங்கள் வாதம்.
அதில் தவறேதுமில்லை. மட்டுமல்ல, அதனை தரமுயர்த்த முஸ்லிம்கள் தடையுமில்லை; என்பது உங்களுக்குத் தெரியுமா? எதிர்வரும் நாலாம் திகதியே நீங்கள் அதனை தரமுயர்த்திக்கொள்ளலாம். தமிழருக்கு தனியாக ஒரு பிரதேச செயலகம் மட்டுமல்ல, தனியான உள்ளூராட்சி சபைக்கும் முஸ்லிம்கள் ஆதரவு.

எனவே, கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு முஸ்லிம்கள் தடை! என்று நீங்கள் கூறுவது பிழையான கருத்து என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

அவ்வாறாயின் கல்முனையில் என்ன பிரச்சினை?
==================================

இதுதான் நீங்களெல்லாம் தெளிவுகாணாத பிரச்சினை! இதுதான் தெளிவுபடுத்த எங்களிடம் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாததால் மூடிமறைக்கப்பட்டு, ஏதோ, உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த முஸ்லிம்கள்தடை என்று உண்மைக்குப் புறம்பான பிரச்சாரம் செய்யப்படுவதற்கு காரணமான பிரச்சினை!

நாங்கள் குரலற்ற ஓர் சமூகம் என்பதை ஜனாசா எரிப்பு விடயத்திலேயே நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். ஏன்? பட்டும் படாமலும் நீங்களே அதனைப் பேசியிருக்கிறீர்கள். அவ்வாறு பேசத்தெரியாத, பேசமுடியாதவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பும் ஓர் அபலை சமூகத்திற்கு உங்கள் பேச்சாற்றல்மூலம் ஓர் பாரிய அநியாயத்தை செய்துவிடவும் கூடாது; செய்ய முயற்சிக்கவும் கூடாது; அது தர்மமுமல்ல. அதனால்தான் இதனை எழுதுகின்றேன்.

இதுதான் கல்முனைப் பிரச்சினை
========================
தயவுசெய்து நன்கு புரிந்துகொள்ளுங்கள்


கல்முனை பட்டினம் என்பது 1897ம் ஆண்டு அன்றைய வெள்ளைக்கார அரசால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி ( Gazette No 5459-Feb/19, 1897) வடக்கு எல்லை நற்பத்துமுனை ( தற்போது நற்பிட்டிமுனை) இல் இருந்து கடல்வரையாகும். அந்த எல்லைதான் தாளவட்டுவான் என அழைக்கப்படுகிறது. அதாவது பாண்டிருப்பின் தென்புற எல்லை.

தெற்கு எல்லை- சாய்ந்தமருதுக் கிரமாமமாகவும், அதாவது தற்போதைய சாஹிறா கல்லூரி வீதி, மேற்கு எல்லை-நற்பிட்டிமுனை, கிழக்கு எல்லை- கடலுமாகும்.
எனவே, கல்முனை நகரமென்பது 123 வருட உத்தியோகபூர்வ எல்லையைக் கொண்டது. அவ்வாறாயின் இதற்கு மிக நீண்டகாலத்திற்கு முன் இருந்து இந்த எல்லை கல்முனையாக அடையாளம் காணப்பட்டு வந்திருக்க வேண்டும். அந்த கல்முனையாக மிக நீண்டகாலம் அடையாளம் காணப்பட்டுவந்த பகுதியைத்தான் 1897 ம் ஆண்டு வர்த்தமானியில் கல்முனையாக உத்தியோகபூர்வமாக அடையாளப்படுத்தியிருக்கிறார்கள்.

அதன்பின் இந்த எல்லைகளில் மாற்றம் செய்து எந்தவொரு வர்த்தமானியும் வெளியிடப்படவில்லை. இன்றுவரை அதுதான் கல்முனையின் உத்தியோகபூர்வ எல்லை.

பிரதேச செயலகப் பிரிவு
————————————

கல்முனைப் பிரதேச செயலகப் பிரிவு பின்வரும் பிரதேசங்களைக் கொண்டது. கல்முனை நகரத்துடன் பாண்டிருப்பு, சேனைக்குடியிருப்பு ஆகிய கிரமாங்களோடு மணற்சேனை, துரவந்திய மடு மற்றும் பெரிய நீலாவணையின் ஒரு பகுதி போன்ற மிகச்சிறிய கிராமங்களையும் உள்ளடக்கிய தமிழர் பகுதிகளையும் மருதமுனை, நற்பிட்டிமுனை, பெரிய நீலாவணை போன்ற முஸ்லிம் பகுதிகளையும் உள்ளடக்கியிருக்கிறது.

இங்குள்ள பிரச்சினை என்ன?
———————————————

மேலே வர்த்தமானியில் குறிப்பிடப்பட்ட கல்முனை நகரத்தை மையமாகக்கொண்ட ஒரு பிரதேச செயலகமும் ஒரு மாநகரசபையும் இருக்கிறது. சாய்ந்தமருதும் ஆரம்பத்தில் கல்முனை பிரதேச செயலகப் பிரிவிற்குள்ளே இருந்தது. ஆனாலும் அது கணிசமான சனத்தொகையைக்கொண்ட தனி ஊர். தனியான பிரதேச செயலகம் வேண்டினார்கள். வழங்கப்பட்டது.

அதேபோன்று பாண்டிருப்பு ஓர் தனியான ஊர். அதற்கு தனியான பிரதேச செயலகமில்லை. கல்முனை செயலகத்திற்கு கீழேயே வருகிறார்கள். சாய்ந்தமருதைப்போன்று அவர்கள் கல்முனையில் இருந்து விடுபட்டு தனியான பிரதேச செயலகம் பெற்றுக்கொள்வதில் எதுவித ஆட்சேபனையுமில்லை. அதனோடு மேலே குறிப்பிடப்பட்ட தமிழ்க்கிராமங்களையும் அதனோடு இணைத்துக்கொள்வதற்கும் எதுவித எதிர்ப்புமில்லை.

பிரச்சினை எங்கு எழுகின்றதென்றால், செயலகமில்லாத பாண்டிருப்பு, சேனைக்குடியிருப்பு போன்ற பிரதேசங்களுக்கு அமையவிருக்கும் பிரதேச செயலத்திற்கு, செயலகமும் மாநகரசபையும் இருக்கின்ற 1897ம் ஆண்டிலிருந்து உத்தியோகபூர்வமாக ஒரு நகரமாக இருக்கின்ற கல்முனை நகரைக் கூறுபோட்டு, 90% மேல் முஸ்லிம் வர்த்தக நிலையங்களைக்கொண்ட அந்த வர்த்தக மையப்பகுதியை பாண்டிருப்பு பிரதேச செயலகத்துடன் இணைக்க வேண்டுமென்று அவர்கள் கோருகின்றார்களே! அங்குதான். இது நியாமா? திரு சாணக்கியன் அவர்களே! திரு சுமந்திரன் அவர்களே! திரு கஜேந்திரன் அவர்களே!, ஏனைய தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களே!

கல்முனைத் தமிழ்த்தரப்பின் தந்திரங்கள்
———————————————————-

இந்த யதார்த்தத்தை மூடிமறைக்க அவர்கள் பல தந்திரங்களைக் கையாள்கின்றார்கள். அதில் ஒன்றுதான் இதனை பாண்டிருப்பு செயலகம் என அழைக்காமல் ‘கல்முனை வடக்கு செயலகம்’ என அழைக்கிறார்கள். கல்முனையில் ஒரு செயலகம் ஏற்கனவே இருக்கிறது. அப்படி இருக்கத்தக்கதாக எதற்காக கல்முனைக்கு இன்னுமொரு செயலகம்?

இங்குதான் இனவாத முகம் வெளிப்படுகிறது. கல்முனையில் சில தமிழர்கள் வாழ்கின்றார்கள். அண்ணளவாக கல்முனை நகர (பிரதேச செயலக எல்லை அல்ல) எல்லைக்குள் சுமார் 20,000 முஸ்லிம் வாக்குகளும் சுமார் 4,000 தமிழ் வாக்குகளும் இருக்கின்றன. இங்கு சுமார் 4,000 தமிழ் வாக்காளர்கள் வாழ்கின்றார்கள்; என்பதற்காக ஒரு வரலாற்று நகரத்தைக் கூறுபோட கேட்பது நியாயமா? அது நியாயமென்பதற்காகவா நீங்களும் அதனைக் கேட்கின்றீர்கள்?
ஒரு சிறிய தொகைத் தமிழர்கள் வாழ்கின்றார்கள்; என்பதற்காக ஒரு வரலாற்று நகரத்தையே கூறுபோட நீங்கள் கோருவதாயின் அதனை நியாயமென நீங்கள் கருதுவதாயின் வட கிழக்குமுழுவதும் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்துவாழும் நகரங்களையெல்லாம் நிர்வாக ரீதியில் கூறுபோடுவது நியாயமில்லை என்பீர்களா?

தமிழரின் நிலைப்பாட்டைத் தோற்கடிக்கும் தமிழரின் நிலைப்பாடு
————————————————————————

தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரு நிர்வாக அலகுக்குள் ஒரு நகரத்திலேயே வாழமுடியாது; என்பது ஓட்டுமொத்த தமிழ்க்கட்சிகளின் நிலைப்பாடென்றால் ( ஏனெனில் சகல தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்களும் கல்முனைத் தமிழரின் நியாயமற்ற இந்தக் கோரிக்கைக்காக குரல் கொடுக்கின்றீர்கள்) வடக்கும் கிழக்கும் இணைந்த ஒரு அலகுக்குக்குள் தமிழரும் முஸ்லிம்களும் வாழவேண்டுமென நீங்கள் நினைக்கின்றீர்களே! இது நியாயமா?

திரு சாணக்கியன் அவர்களே!

அண்மையில் இணைந்த வட கிழக்காயின் மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதாக கூறியிருந்தீர்கள். வட கிழக்கில் பிரதான இரு தமிழ்பேசும் சமூகங்கள்தான் தமிழரும் முஸ்லிம்களும். ஒரு நகரத்திலேயே தமிழரும் முஸ்லிம்களும் ஒரு சாதாரண நிர்வாக அலகுக்குள்ளேயே இணைந்துவாழ முடியாதென்றால் எவ்வாறு இணைந்த வட கிழக்கு நீர்வாகத்தின்கீழ் ஒன்றாக வாழமுடியும்?

இது தமிழரின் நிலைப்பாட்டைத் தோற்கடிக்கும் தமிழரின் நிலைப்பாடு இல்லையா? போதாக்குறைக்கு கிழக்கில் மாகாணசபைத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் இணைந்து போட்டியிடவேண்டுமென்றும் கூறுகிறீர்கள்.

ஒரு புறம் ஒற்றுமைக்கான குரல்; மறுபுறம் வேற்றுமைக்கான கோசம். இது ஒன்றிற்கொன்று முரணானதில்லையா?

திரு சுமந்திரன் அவர்களே!

வட கிழக்கு இணையவேண்டும்; தமிழர், முஸ்லிம் அனைவரும் அந்த நிர்வாக அலகுக்குள் வாழவேண்டும்; இது உங்கள் நிலைப்பாடா? இல்லையா? அவ்வாறாயின் கல்முனையில் ஏன் முஸ்லிம்களும் தமிழர்களும் ஒரு நிர்வாக எல்லைக்குள் வாழமுடியாது? அதற்கான பதில் என்ன?

திரு கஜேந்திரன் அவர்களே!

உங்களிடமும் இதே கேள்வியைத்தான் முன்வைக்கிறேன்; உங்கள் பதிலென்ன?

கல்முனைத் தமிழருக்காக 29 கிராம சேவகர் பிரிவு இருப்பதாக கூறுகின்றீர்கள். சுமார் 35% ஆன தமிழருக்கும் 29 கிராம சேவகர் பிரிவு, 65% வீதமான முஸ்லிம்களுக்கும் 29 கிராம சேவகர் பிரிவுதான் இருக்கின்றது; என்பது உங்களுக்குத் தெரியுமா?

இது எவ்வாறு சாத்தியமானது? அன்றைய ஆயுதக் கலாச்சார சூழலில் முஸ்லிம்கள் வாய்திறக்க முடியாத ஒரு நிலையில் தமக்கு வேண்டிய விதத்தில் ஏற்கனவே இருந்த கிராம சேவகர் பிரிவுகளைக் மேலும் கூறுபோட்டு புதிய கிராம சேவகர் பிரிவுகளை உருவாக்கித்தான் எண்ணிக்கையை அதிகரித்தார்கள்; என்பது உங்களுக்கு தெரியுமா? அதையே உங்கள் வாதத்திற்கு வலுசேர்க்க பயன்படுத்துவது சரியா?

சரி அவ்வாறு அதிகரித்துக் கொண்டார்கள்; என்பதற்காக கல்முனையைக் கூறுபோடவேண்டுமா? மேலே குறிப்பிட்டதுபோன்று ஏனைய ஊர்களுக்கு ஒரு செயலகத்தைப் பெற்றுக்கொண்டு இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரமுடியாமல் இருப்பதற்கான காரணமென்ன? இனவாதமா? முஸ்லிம் பெரும்பான்மை அலகொன்றிற்குள் தமிழர் வாழவே கூடாதென்பதற்காவா? சொல்லுங்கள்; உங்கள் நியாயத்தை முன்வையுங்கள்.

90 களில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக்கொண்ட நிந்தவூர் பிரதேச செயலகத்தின் நிர்வாகத்தின்கீழ் இருக்கவே கூடாது; என்பதனால் வரதராஜ பெருமாளின் நிர்வாக காலத்தில் காரைதீவை தனியாகப் பிரித்து உப பிரதேச செயலகம் உருவாக்கி, பின் செயலாகமாக மாற்றியபோது மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி என்ற இரு முஸ்லிம் கிராமங்களை ( தமிழர் 60% முஸ்லிம்கள் 40%) இணைத்தபோது முஸ்லிம்கள் ஆட்சேபிக்கவில்லையே!

நிந்தவூரைவிட காரைதீவு இன்னும் அருகாமையிலேயே இருக்கிறது; என ஆறுதல் கொண்டார்களேயொழிய தமிழ் பெரும்பான்மை அலகின்கீழ் வாழக்கூடாது; என இனவாத ரீதியில் சிந்திக்கவில்லையே! வட கிழக்கையே இணைக்கக்கோரும் தமிழர்கள் ஏன் இனவாத ரீதியாக சிந்திக்கிறார்கள்? அதற்கு நீங்கள் ஏன் ஆதரவளிக்கிறீர்கள்?

நாவிதன்வெளியில் 33% வீத முஸ்லிம்கள் இனவாதரீதியாக சிந்திக்காமல் தமிழ்ப்பெரும்பான்மை அலகின்கீழ் வாழவில்லையா? ஏன் தமிழரிடம் இந்த இனவாத சிந்தனை? அதற்கு ஏன் நீங்கள் ஆதரவளிக்கின்றீர்கள்?

கல்முனைத் தமிழரின் அடுத்த தந்திரம்
——————————————————-

கல்முனை வேறு, கல்முனைக்குடி வேறு. கல்முனையை நாங்கள் கேட்கின்றோம்; கல்முனைக்குடியை முஸ்லிம்களுக்கு கொடுங்கள் என்கிறார்கள்.

நான் மேலே கல்முனையில் 1897ம் ஆண்டிலிருந்தான இன்றுவரை மாற்றப்படாத உத்தியோகபூர்வ எல்லையைக் குறிப்பிட்டிருக்கின்றேன். இதில் தென்புறத்தை முஸ்லிம்களின் பிரதானமாக குடியிருப்பு பிரதேசமாகவும் வட புறத்தை வர்த்தக நகரமாக அமைத்துக்கொண்டார்கள். இந்தக் குடியிருப்புப் பகுதி “ குடியிருப்பு” என்று பேச்சு வழக்கில் அழைக்கப்பட்டு வந்தது.

பின்னர் கிராம சேவகர் பிரிவுகள் உருவாக்கப்பட்டபோது குடியிருப்புப் பகுதிக்கான கிராமசேவகர் பிரிவுகளை ‘கல்முனைக்குடி’ என அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. இது நடராஜா என்கின்ற ஒருவர் DRO வாக இருந்தபோது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் சரியான ஆவணத்தரவு கிடைக்கவில்லை.

எது எவ்வாறு இருந்தபோதும் கல்முனையின் குடியிருப்புப் பகுதியை “ கல்முனைக்குடியிருப்பு” என்றும் அது மருவி “கல்முனைக்குடி” என்றும் வந்ததனால் அது கல்முனை இல்லையென்றாகிவிடுமா? அது கல்முனையின் குடியிருப்பே தவிர, சாய்ந்தமருது குடியிருப்புமல்ல, பாண்டிருப்புக் குடியிருப்புமல்ல; என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியாதா?

கோயில் இருப்பதைக்காட்டி நியாயம் பேசுகிறார்கள். உங்களுக்குத் தெரியுமா? கல்முனைக்குடியிலும் கோயில்கள் இருந்திருக்கின்றன; சாய்ந்தமருதிலும் கோயில்கள் இருந்திருக்கின்றன. கோயில்கள் இருந்த பகுதியெல்லாம் ஒரு பிரதேச செயலகத்தின்கீழ் வரவேண்டுமென்றால் தற்போது தனியாக பிரதேச செயலகம் கோவில் இருந்த பகுதிகளில் பாதிக்கு மட்டும் கேட்பது முரண்பாடானதே!

கோயில்கள் ஏன் இருந்தன?
—————————————-

கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் பிரதானமாக தமிழ்த்தாயின் வயிற்றில் உதித்தவர்கள்தான். இன்றும் பல “குடி” முறைகள் தமிழ், முஸ்லிம் கிராமங்களில் பொதுவானதாக இருக்கின்றன. அது எதனைக்காட்டுகின்றது? ஒரே குடியைச் சேர்ந்த இரு தரப்பும் ஏதோ ஒரு இடத்தில் ஒரே தாயில் இருந்து பிரிந்தவர்கள்; என்பதைத்தானே!

எனவே, முஸ்லிம்கள் தமிழ்த்தாயில் இருந்து பிரிந்திருந்தால் அந்த தமிழ்த்தாய் வாழ்ந்த பகுதிகளில் கோவில்கள் இருந்துதானே இருக்கும். அதற்காக இன்றைய யதார்த்தத்தை மறுக்கப்போகின்றோமா? கல்முனையைப் பொறுத்தவரை அவ்வாறு மறுத்தால்கூட அது உங்கள் நிலைப்பாட்டைத்தான் பிழையாக காட்டும்.

அதாவது தற்போதைய கல்முனைப் பிரதேச செயலகப் பிரிவைப் பிரிக்கக்கூடாது; என்பதை அது காட்டும். ஏனெனில் எல்லா இடங்களிலும் கோவில்கள் இருந்திருக்கின்றன.

இறுதியாக, இவ்வுப பிரிவு 30 வருடம் இயங்கிவிட்டது. இப்பொழுது நாங்கள் புதிதாக ஒன்றும் கேட்கவில்லை. இருப்பதை தரமுயர்த்திக் கேட்கின்றோம்; அவ்வளவுதான் என்பது இவர்கள் முன்வைக்கும் ஒருவாதம்.

இவ்வுப பிரதேச செயலகம் அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக உருவாக்கப்பட்டதொன்றல்ல. மாறாக ஆயுதமுனையில் உருவாக்கப்பட்டது. அன்றைய ஆயுத கலாச்சார சூழ்நிலையைக் கருத்திற்கொண்டும் அது உப செயலகம்தான் என்ற அடிப்படையிலும் அப்பொழுதே அதனை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை; என்பது ஒரு புறமிருக்க,

ஒரு உப செயலகத்திற்கு எல்லை வரையறை தேவையில்லை. யதார்த்தத்தில் அங்கு ஒரு செயலகம்தான் இருக்கிறது. உப செயலகம் தரமுயர்த்தப்படும்போது அது இரண்டாக மாறுகின்றது. இரண்டாக மாறும்போது எல்லை அடையாளப்படுத்தப்பட வேண்டுமா? இல்லையா?

அவ்வாறு அடையாளப்படுத்தும்போது கல்முனையைக் கூறுபோடக்கேட்கும் நியாயமற்ற கோரிக்கையை அதற்குள் வைத்துக்கொண்டு “இருப்பதைத் தரமுயர்த்தத்தான் கேட்கிறோம்; என்பது நியாயமான வாதமா? கூறுங்கள்.

எனவே, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களே! நீங்கள் நியாயமானவர்களாக இருந்தால், நியாயத்திற்காக போராடுபவர்களாக இருந்தால் இலங்கையில் எங்குமே ஒரு நகரத்தை இ்ரண்டாக கூறுபோட்டு இரு சமூகங்களுக்கு கொடுத்த வரலாறு இல்லாதபோது கல்முனையில் மாத்திரம் இனவாத ரீதியான இக்கோரிக்கையை கைவிட்டு, அதாவது, கல்முனையை கல்முனையாக இருக்க விட்டு விட்டு ஏனைய தமிழ் ஊர்களுக்கு ஒரு செயலகம் மாத்திரமல்ல; ஒரு உள்ளூராட்சி சபையையும் பெற்றுக்கொள்ளுங்கள்.

இதையும்தாண்டி உங்களிடம் நியாயம் இருக்கிறது; என நீங்கள் கருதினால் உங்களுடன் பாராளுமன்றத்தில் வாதிக்கும் வாய்ப்பு எனக்கு இல்லை. அதற்குப்பதிலாக, ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் உங்களைச் சந்திக்க தயாராக இருக்கிறேன்; என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

எனவே, எங்களது பாராளுமன்ற உறுப்பினர்களின் பலயீனத்தை உங்கள் பலமாக எடுத்து முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்துவிடாதீர்கள்; என வினயமாய வேண்டுகிறேன்.

நன்றி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :