இலங்கையில் 2024இல் நடத்தப்படும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் பஸில் ராஜபக்ஸவே வேட்பாளராக நிறுத்தப்படுவார்.
இதற்கான செயற்பாடுகளை அவர் ஆரம்பித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் நலிந்த ஜெயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இரண்டாவது முறையாக போட்டியிடாததால் அவர் தமது பதவிக் காலம் முழுவதையும் அனுபவிப்பார்.
அவரையடுத்து பஸில் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராகவும், தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் வேட்பாளராகவும் இருக்கக்கூடும் என்று நலிந்த ஜெயதிஸ்ஸ மேலும் குறிப்பிடுகிறார்.
இதேவேளை பஸில் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு இந்தியா பூரண ஆதரவு வழங்கும் என நம்புவதாகவும் அவர் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகரும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எதிர்பார்ப்பை கொண்டிருப்பவருமான பஸில் ராஜபக்ஷவுக்கு எதிராக செயற்படும் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் பிரதான பௌத்த தேரர்களுக்குப் பின்னால் சீனா செயற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்து-லங்கா-சீனா-அமெரிக்கா பூகோள அரசியல் தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் செயற்பட்டுவரும் முக்கியஸ்தர் ஒருவர் ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வரும் 2025 அல்லது 2024இல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடமாட்டார். மாற்றீடாக பஸில் ராஜபக்ஷ போட்டியிடும் கனவில் இருந்து வருகின்றார். இந்த தீர்மானத்தை ராஜபக்ஷ குடும்பமே எடுத்திருப்பதாக குறித்த இராஜதந்திரி தெரிவித்திருக்கின்றார்.
பலருக்குத் தெரியாவிட்டாலும் பஸில் ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு சீனா முற்றிலும் எதிர்ப்பான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்பதே உண்மை. அதற்கு காரணமாக, இந்தியாவுடன் குறிப்பாக பாரதீய ஜனதாக் கட்சியுடன் நெருக்கமான உறவை பஸில் கொண்டிருப்பதை சீனத்தரப்பு சுட்டிக்காட்டுகின்றது. பஸில் ராஜபக்ஷவின் மகளும் இந்தியாவிலுள்ள முக்கியஸ்தரையே மணந்துள்ளார். இலங்கையை வலய நாடுகளில் மிளிரச்செய்வதாயின் அயல்நாட்டின் ஒத்துழைப்பு அவசியம் என்பதில் பஸில் உறுதியாக இருக்கின்ற அதேவேளை, அமெரிக்காவின் உதவியையும் பெறுகின்றார் என்பதை சீனா தெரிந்துவைத்துள்ளது.
இதற்காகவே பஸிலுக்கு எதிராக தற்போது அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் இந்திய எதிர்ப்பு அரசியலை செய்கின்ற இலங்கை கம்மியூனிஸ்ட் கட்சி, இலங்கை சமசமாஜக்கட்சி, தேசவிமுக்தி முன்னணி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளையும் சீனா பின்னால் இருந்து தூண்டி உதவி செய்துவருவதாக அந்த இராஜதந்திரி குறிப்பிட்டுள்ளார்.
பஸில் எதிர்ப்பு அரசியலினை மேற்கொள்கின்ற தரப்பினருக்கு உள்நாட்டில் இயங்வரும் ப்ரீமா நிறுவனம் கோடிக்கணக்கான ரூபாய்களை சீனாவின் உதவியுடன் அள்ளிவீசுவதாகவும் குறித்த இராஜதந்திரியை மேற்கோள்காட்டி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
0 comments :
Post a Comment