கல்முனை பறக்கத்துள்ளாஹ்வின் தேடலில்; கலாபூசணம் மீரா.எஸ்.இஸ்ஸதீன்



தேடலின் சுவடு:11

லண்டன் தீபம், ரொய்ட்டர் ஆகிய வெளிநாட்டு வானொலி சேவைகளுக்கு இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலிருந்து சேவையாற்றியவரும்,
தினகரன், வீரகேசரி, சுடர்ஒளி, தினமின, Daily News ஆகிய தேசிய பத்திரிகைகள், Rubavahini, ITN, SLBC, Sirasa, Shakthi, Suwarnavahini, Derena, Sri TV, Hiru TV, Max Tv என இலங்கையிலுள்ள முன்னணி தொலைக்காட்சித் தளங்களுக்கு இன்றுவரையில் செய்திகளைச் சேகரித்து அனுப்புகின்றவர்.
ஆசிரயராக சுமார் 21 வருடங்கள் கல்விச் சேவை புரிந்து ஓய்வு பெற்றவர். பொலிஸ் உப சேவை (Reserve Police), அரச வங்கிப் பாதுகாப்பு உத்தியோகத்தர் (Security officer) போன்ற தொழில்களில் இருந்தவாறு தன் பேனா முனை கொண்டு தனக்கான அடையாளத்தை பெற்றுக் கொண்டவர்.
இவர் தனது இளமைக் காலத்தில் முறையாக பாடசாலைக் கல்வியை கற்க வாய்ப்பில்லாமல் யாழ்ப்பாணத்தில் நகைக்கடையில் எடுபிடியாகவும், கச்சான் கொட்டை விற்றும், வயல் வெட்டி, வரம்பு கட்டி, குருவி துரத்தி, சூடு அடிச்சு, களவெட்டி கூலியாகவும், சமையல் புரிபவராகவும், நெசவுத் தொழில் உதவியாளராகவும், நாளாந்த பத்திரிகை விற்றுக் கொண்டிருந்த ஒரு சிறுவன். 
இந்தச் சிறுவனின் 66வது பிறந்தநாள் இன்று. 
சுமார் அரை நூற்றைண்டை எட்டவுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளரான இவரைப் பற்றி அறியாதவர்கள் இருக்கமாட்டார்கள்.
அவருக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!


கலாபூசணம் மீரா.எஸ்.இஸ்ஸதீன்: 
ல்முனை பட்டின சபையின் தெற்கே கரவாகுப் பற்று தெற்கு கிராம சபையின் முதலாம் வட்டார உறுப்பிரான சாய்ந்தமருது உமர்கத்தா மீராசாய்வு இஸ்ஸதீன் மற்றும் அக்கரைப்பற்று அலியார் அவ்வாக் குட்டி தம்பதிகளின் இரு பிள்ளைகளுள் மூத்த மகனாக 1955.01.10 ஆம் திகதி மீரா இஸ்ஸதீன் பிறந்தார்.
அக்கரைப்பற்று முஸ்லிம் ஆண்கள் பாடசாலையில் தரம் நான்கு வரையில் கற்று குடும்ப பொருளாதார நெருக்க சூழ்நிலை காரணமாக கல்வியை கைவிட்டார்.
இவரது நான்கு வயந்தில் தந்தையின் பாசமிழந்து, தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். இதனால் இளம் வயதிலேயே குடும்பச் சுமையை ஏற்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
1965 களில் குடும்ப வறுமை காரணமாக தனது பத்தாவது வயதில் மாமா வழி தொடர்பின் மூலம் யாழ்பபாணம் கே.கே.எஸ் வீதியிலுள்ள எம்.எம். மீராலெப்பை சன்ஸ் நகைக்கடையில் 10/- மாதச் சம்பளத்திற்கு வேலைக்குச் சேர்ந்தார்.
கடையை கூட்டி துப்பரவு செய்தல், வை.சீ. ஹோட்டலில் முதலாளிக்கு ரீ, சுருட்டு வாங்கி வருதல், காலை பகல் உணவுகளை முதலாளியின் வீட்டிலிருந்து கொண்டுவருதல் போன்ற எடுபிடி வேலைகளே இவரது நாளாந்த கடமைப்பட்டிலாக இருந்தது.
முதலாளி முஹம்மது ராசாவின் ஓய்வு நேரமான மதியம் 1 - 2.30 வரையில் கடையி்ன் முன்பகுதியில் அமர்ந்து யாசகம் கேட்டு வருபவர்களுக்கு ஒருசதம், இரண்டு சதம் கொடுப்பதும் இவரது வேலையாகும்.
10 ரூபா மாதச் சம்பளத்தில் ரெயிலில் 7.25 சதத்திற்கு அரை டிக்கட் எடுத்து ஊருக்கு போய் வரவே போதாமல் இருந்தது. இதனால் ஒரு வருடம் யாழ்ப்பாண கடையில் வேலை செய்துவிட்டு ஊருக்கு வந்தவர் மறுபடி போகவில்லை.
யாழ்ப்பாணக் காலங்களில் கிடைக்கும் ஓய்வு நேரங்களை பத்திரிகை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். ஊருக்கு வந்த பின்னர் பத்திரிகை வாசிப்பதற்காக சலூனுக்கும், ராஜா லொண்றிக்கும் சென்று அங்குள்ள பத்திரிகைகளை வாசித்து வந்தார்.
வருமானத்திற்காக ஊரில் இருந்தவாறு கச்சான் கொட்டை விற்று கிடைக்கும் வருமானத்தை தாயிடம் கொடுத்து வாழ்க்கை வண்டியை நகர்ததினார்.
தனது பால்ய நண்பன் செல்லத்துரை அவனது தந்தையுடன் வயலுக்கு குருவி விரசச் செல்லும் போது இவரையும் அழைத்துச் சென்றான். அவர் கூழாவாடி, காடியண் கண்டத்தின் வயலை கூலிக்குச் செய்த காலம் அது.
அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட இவர் வயலில் வரம்பு கட்டுதல், புல் பிடுங்கல், குருவி துரத்தல், களவெட்டி தூக்குதல், வயல் வெட்டுதல் உள்ளிட்ட வயல் வேலைகளை செய்ய ஆரம்பித்தார்.
வயல் வேலை முடிந்த காலங்களில் மறுபடியும் தனது கச்சான் கொட்டை விற்பதை தொடர்ந்தார். அக்கரைப்பற்று தியேட்டர், மார்க்கட், பஸ் நிலையம் உள்ளிட்ட இடமெல்லாம் இவரது வியாபாரத் தளங்களாகின.
ஒரு பத்திரிகை வாங்க காசில்லாத நிலையில், மார்க்கட்டில் கச்சான் கொட்டை விற்கும் சாக்கில் அங்குள்ள பத்திரிகை விற்கும் நண்பன் ஸ்டோர் சென்று கடைக்காரருக்கு உதவிகளைப் புரிந்தார். அவ்வாறான நாட்களில் கடையிலுள்ள பத்திரிகைகளை இலவசமாக படித்து வந்தார்.
1967 களில் 13 வயதில் வயல் வெட்டும் தத்தியில் சேர்ந்து கிளிநொச்சியில் முரசுமோட்டை என்னும் இடத்திற்கு சென்று தத்தியிலுள்ள 16 பேருக்கான சமையல் வேலைகளை ஒன்றரை மாதங்கள் பொறுப்பெடுத்துச் செய்தார்.
ஊரிலிருந்து எதையாவது தொழிலை கற்றுக் கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டு உறவினர் ஒருவருடன் சேர்ந்து அக்கரைப்பற்றில் நெசவு நெய்யும் இடத்தில் சம்பளமில்லாமல் நூல் சுத்துதல், உதவிகளைப் புரிதல் உள்ளிட்ட சிறிய வேலைகளை செய்தார். நெய்பவரின் ஓய்வு நேரங்களில் நெசவின் கடைசிப் பாவில் படிப்படியாக நெய்யப் பழகியுள்ளார்.
காலம் சற்றுக் கடந்த நிலையில் நெசவு நெய்வதில் கைதேர்ந்தார். 1970 களில் நளொன்றுக்கு ரூ.4/- கூலியும், வாரத்தில் ஆறு நாட்களுக்கு ரூ. 24/- கூலியாகப் பெற்றார். இதில் 20/- ஐ தாயிடம் கொடுத்து, மீதத்தை தனது செலவுக்கு பயன்படுத்தினார்.
1972 களில் தான் ஆங்கிலம் படிக்க வேண்டும் என்னும் ஆசை இவருக்கு ஏற்பட்டது. தனது சிறிய தாயின் கணவர் சுலைமானிடம் எனது பெயரை ஆங்கிலத்தில் எழுதித் தருமாறு கேட்க; அவர் முதலில் நீ தமிழில் எழுதிக் காட்டு என்றார். 17 வயதில் தனது பெயரை தமிழில் உறுப்பமக எழுத முடியாத நிலையில் இருந்ததைக் கண்ட இவரது சிறிய தந்தை இவருக்கு எழுதப் பழக்கிக் கொடுத்தார்.
1973 களில் தினகரனில் புதுக்கவிதை, சிந்தாமணியில் மணிக் கவிதைப் பகுதிகளில் மணிக் கவிதைகள், துணுக்குகளுடன், இஸ்லாமிய சிறு கட்டுரைகளையும் எழுத ஆரம்பித்தார். இவ்வருட இறுதியில் ஹஜ் தொடர்பான கட்டுரை எழுதும் அளவு தன்னை வளர்த்துக் கொண்டார்.
1974 இன் ஆரம்பத்தில் தினகரன் பத்திரிகையின் பைலைன் இல்லாமல் பிரதேச செய்தியாளராக செயற்படத் தொடங்கினார்.
இந்தக் காலகட்டம் இவரது வாழ்க்கையின் முக்கியமான தருணங்களாகின. அதுவரையில் நாள் கூலியாக இருந்தவரை அது மாற்றியமைக்க முற்பட்டது.
1974 களில் சிறிய தந்தையின் ஊக்குவிப்பு வழிநடாத்துதலுடன் சாதாரண தரப் பாடங்களைக் கற்று அவ்வருடம் பரீட்சைக்கு தனிப்பட்ட பரீட்சாத்தியாக தோற்றினார். பரீட்சை பெறுபேறுகள் வந்தது. தபால் நிலையத்தில் நெரிசலுக்கு மத்தியில் தனது பரீட்சை முடிவுகளைப் பார்க்கிறார். 8F வந்திருந்தது. அங்கேயே பெறுபேற்றைக் கிளித்து எரிந்துவிட்டு, காத்தான்குடியில் வசித்த சிறிய தந்தையின் வீட்டுக்குப் போனார்.
இந்த இரவு நீண்டது. தூக்கத்தை கவலை துரத்தியது. யாருக்கும் தெரியாமல் அழுதுதார். பரீட்சையில் எட்டுப் பாடங்களிலும் சித்தியடையாத கவலை இருந்த போதும் தனது தன்னம்பிக்கை அவர் கைவிடவில்லை. மறுபடியும் 1975, 1976 களில் பரீட்சையில் தோன்றி உயர்தரம் படிக்கத் தேவையான பெறுபேற்றைப் பெற்றார்.
உயர்தர அனுமதி கோரி அக்கரைப்பற்று மத்திய கல்லூரிக்குச் செல்கிறார். அப்போது வயது 22. கூடிய வயதில் பாடசாலையில் சேர்த்துக் கொள்ள முடியாத அரச சட்டதிட்டங்களை பாடசாலை நிருவாகம் விளக்கிக் கூறியது.
படிக்க வேண்டும் எனும் ஆர்வத்திற்காக கற்பிற்கும் பாடக்குறிப்புக்களை தந்துதவுவதாக அவர்கள் கூறினர். ஏமாற்றத்தில் மனம் நொந்து திரும்பி வரும்போது புதிய வெள்ளை ஆடையுடன் கிறவல் வீதியில் தேங்கிக் கிடந்த நீரில் இறங்கி ஆடையை அழுக்காக்கினார்.
ஆனாலும் அவரது முயற்சியை கைவிடாமல் பொருளியல், வர்த்தகம், இஸ்லாம், அளவியல் விஞ்ஞானம் ஆகிய பாடங்களை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். உதுமாலெப்பை, ஹாஸிம் மௌலவி ஆகியோரின் உதவியுடன் கற்றார்.
உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான ரூபா 85/- இல்லாமல், தான் சூடடித்து தங்கச்சிக்கு 100/- க்கு வாங்கிக் கொடுத்து காதில் போட்டிருந்த மின்னியை விற்றார்.
1977 இல் தினகரன் நிரந்த செய்தியாளராக நியமனம் கிடைக்கிறது. ஆர்வத்துடன் உத்தியோக பூர்வமான ஊடகவியலாளராக பரினமிக்கிறார் மீரா. தான் சேகரித்து அனுப்பிய செய்திகளுக்கு ஆயிரக்கணக்காக சம்பளம் கிடைக்குமென்று எதிர்பார்த்து நண்பனின் கடையில் 900/- கடன் பெற்றிருந்தார். ஆனாலும் அவருக்கு முதல்மாதம் சம்பளமாக 13.25 சதம் மாத்திரமே கிடைத்தது.
இவரது இயற் பெயர் முஹம்மது இஸ்மாயில். ஆனாலும் தந்தையின் பெயரை சுருக்கமாகக் கொண்டு மீரா.எஸ்.இஸ்ஸதீன் என எழுத்துலகில் அடையாளமாகின்றார். பிற்காலத்தில் மாதம் ஒன்றுக்கு இரண்டு இலட்சத்திற்கும் மேல் ஊடகத்திலிருந்து சம்பளம் பெற்றார்.
1978 ஆகஸ்டில் தனிப்பட்ட பரீட்சைக்குத் தோற்றி, வர்த்தகம், இஸ்லாம், பொருளியல் ஆகிய பாடங்களில் முறையே C,S,S பெறுபேற்றைப் பெற்றார். இப் பெறுபேற்றில் சட்டப் படிப்பு அல்லது கலைமானி பட்டப்படிப்பை பல்கலைக்கழகம் ஒன்றில் தொடர போதுமானதாகும்.
ஊடகத்தின் மூலம் மாதமொன்றுக்கு கிடைக்கும் வருமானத்தை விடவும் தொடர்புகள் அதிகமாகின. 1978 களில் அட்டாளைச்சேனையில் பொலிஸில் ஆள்சேர்க்கப்படும் செய்தி சேகரிக்கச் சென்ற போது பொலிஸ் உப சேவையில் (Reserve Police) இணைந்து கொண்டார்.
பின்னர் நிரந்தர பொலிஸ் சேவைக்கு (Regular Police) களுத்துறை பயிற்சி நிலையத்திற்கான அழைப்பும், பேராதனை பல்கலைக் கழகத்திற்கான நுழைவும் ஒரே நேரத்தில் கிடைத்தது.
தொழிலுக்குப் போவதா, பல்கலைகழகம் செல்வதா என நீர்மானித்துக் கொள்ள முடியாத நிலையில் 1978.11.23இல் கிழக்கில் வீசிய சூராவெளியினால் சிறுகச் சிறுக சேர்த்து வாங்கிய இரு நெசவுத்தறிகளும், பாவும் அழிந்து போயின.
வறுமை மீண்டும் தலை தூக்கியது. ஈற்றில் இரண்டையும் கைவிட்டு; பேரதனைப் பல்கலைக் கழகத்தில் வெளிவாரி பட்டப்படிப்பை பதிவுசெய்தார். தொடர்ந்தும் Reserve Police, மற்றும் ஊடக செயற்பாடுகளை முன்னெடுத்தார்.
1981 களில் பொலிஸ் வேலையை விட்டுவிட்டு, அவ்வருடம் இலங்கை வங்கியில் பாதுகாப்பு உத்தியோகத்தராக இணைந்து, அக்கரைப்பற்று, ஹிங்குராண, அம்பாறை ஆகிய வங்கிக் கிளைகளில் 1986 வரையில் கடமை புரிந்தார்.
1985இல் வெளிவாரிப் பட்டப்படிப்பில் சித்தியெய்தி் கலைமானிப் பட்டதாரியானார் (Bachelor of Arts). பின்னர் வங்கிப் பாதுகாப்பு உத்தியோகத்தர் வேலையை கைவிட்டு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் முஸ்லிம் பிரிவுக்கான பொதுசனத் தொடர்பாடல் மற்றும் பிரச்சாரச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதனால், சிறிமாவோ பண்டார நாயக்கா உள்ளிட்ட அக்கட்சியின் உயர்மட்டத்தாருடன் நெருக்கமான தொடர்புகள் ஏற்பட்டன.
இக்காலப்பகுதியில் கொழும்பு பல்கலைக் கழகத்தில் இதழியல் கற்கைநெறியை (Diploma in Journalism), மற்றும் பட்ட மேல் கல்வி (PHDE) ஆகியவற்றைப் பூர்த்தி செய்தார்.
1989.05.02ஆம் திகதி இலங்கை ஆசிரியர் சேவையில் இணைந்து இறக்காமம் அல்-அஸ்ரக் மகா வித்தியாலயத்தில் முதலாவது கடமையை ஆரம்பித்தார். பின்னர் சில காலம் அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்திலும் கடமையாற்றினார்.

அக்கரைப்பற்று ஆயிஷா முஸ்லிம் வித்தியாலயத்தில் 1992முதல் தொடர்சசியாக 18 வருடங்கள் கடமையாற்றி 2010 இல் தனது 55ஆவது வயதில் ஊடகப் பணி செய்வதற்காக ஓய்வு கேட்டுப் பெற்றார்.
சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் ஊடக செயலாளராக 1996 - 2000 வரையும், பிரதிக் கல்வி அமைச்சராக ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் பதவிவகித்த காலத்தில் அவரது ஊடக செயலாளராகவும், எம்.ரீ. ஹஸனலி அவர்கள் சுகாதார மற்றும் சுதேச இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த காலத்தில் இராஜாங்க அமைச்சின் ஊடக செயலாரளாகவும், ஹாபிஸ் நசீர் அவர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் சில காலம் ஊடக செயலாளராகவும் அக்கட்சியின் முக்கிய பதவியினருக்கு ஊடகப் பணி செய்துள்ளார்.
அரை தசாப்தகால ஊடக பணிக்காக, கலாபூசண விருது (2009), கலை இலக்கிய வித்தகர் விருது (2015), ரெத்ண தீபம் விருது (2019), அக்கரைப்பற்றில் ஓய்வுக்குப் பின் வேலை செய்வதற்காக உயர்ந்த மண்விருது உள்ளிட்ட பல வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
20018 இல புலனாய்வுச் செய்தித் தேடலுக்கான விருது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டது. இவ்விருதைப் பெற்ற முதலாவது முஸ்லிம் ஊடகவியலாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மீரா எஸ் இஸ்ஸத்தீன் அவர்களுக்கு மீரா அல் ரஜாயி (லண்டன்), மீரா அலி ரஸ்ஸான் (Quantity Servior) ஆகிய இரு மகன்களும், மகள் எம்.ஐ. அஹ்பறோஸ் ரீபி (கல்விக் கல்லூரி) ஆகியோரும் உள்ளனர்.
இதுவரையில் கலாபூசணம் மீரா எஸ் இஸ்ஸத்தீன் அவர்களின் சகல வெற்றிக்கும் உறுதுணையாக அவரது மனைவிகளும், பிள்ளைகளும் இருந்து வருகின்றனர். அத்துடன் இவரது ஊடகத்துறைக்கு உதவிய மூத்த ஊடகவியலாளர் எச்.எம்.பீ. முகைதீன், கல்வித் துறைக்கு உதவிய யூ. சுலைமான் ஆகியோரை நன்றியுடன் நினைவு கூர்கின்றார்.
ஏ.எம். பறக்கத்துள்ளாஹ்
கல்முனை.
2021.01.10
நன்றி_தினகரன்_வாரமஞ்சரி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :