அஸ்லம் எஸ்.மௌலானா-
க.பொ.த.உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடத்தப்படுவதையிட்டு அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது;
"நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அபாய சூழ்நிலை காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட வேண்டிய க.பொ.த.உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டு, ஒக்டோபர் 12ஆம் நாள், திகதி குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், இம்மாதம் முதல் வாரத்தில் கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை ஏற்பட்டிருந்தது.
இந்த அச்ச சூழ்நிலையில் இப்பரீட்சை ஒத்திவைக்கப்படலாம் என பல தரப்பினரும் எதிர்பார்த்த போதிலும், பரீட்சையை நடத்துவதற்கு அரசாங்கம் உறுதியான தீர்மானத்தை மேற்கொண்டு, முறையான சுகாதார நடைமுறைகளுடன் குறித்த பரீட்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகின்றமை வரவேற்புக்குரிய விடயமாகும். இதன்மூலம் தற்போதைய கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், தான் ஒரு கல்விமான் என்பதை நிரூபித்திருக்கிறார்.
ஒரு சில இடங்களில் மாத்திரம் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டமைக்காக முழு நாட்டிலும் பரீட்சையை ஒத்திவைத்து, மாணவர் சமூகத்தின் கால நேரத்தை வீணடித்து, கல்வியை முடக்காமல், கொரோனா தொற்று ஏற்பட்ட பகுதிகள் உட்பட நாடு முழுவதிலும் திட்டமிட்டபடி இப்பரீட்சை நடத்தப்படுவதையிட்டு நாங்கள் கல்விமான்கள் என்ற ரீதியில் கல்வி அமைச்சரைப் பாராட்டுகின்றோம்.
ஜே.வி.பி. புரட்சிக் காலத்தில் தென்னிலங்கையில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டு, கல்வித்துறை முடக்கப்பட்டமையினாலேயே அக்காலப்பகுதியில் பெருவாரியான இளைஞர்கள் விரக்தியடைந்து ஜே.வி.பி. இயக்கத்தில் இணைந்து கொண்டமைக்குக் காரணம் என்று அப்போது வெளியிடப்பட்டிருந்த ஓர் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றும் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி சுட்டிக்காட்டினார்.
0 comments :
Post a Comment