மைக் பொம்பியோவுடன் கோட்டா இதுதான் பேசினாரா? கசிந்த சில விடயங்கள்

J.f.காமிலா பேகம்-

மெரிக்கத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ளதால், தேர்தலில் வெற்றிபெற்று பதவிக்கு வரவுள்ள புதிய அரசாங்கத்தோடு இந்தோ- பசுபிக் பிராந்திய உறவு மற்றும் விவகாரங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் பேச்சு நடத்துமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவிடம் கூறியதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதன்கிழமை கொழும்புக்கு வருகை தந்த மைக் பொம்பியோ கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தார்.

சுமார் ஒன்றரை மணிநேரத்திற்கும் அதிகமாக இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, சீனாவின் உதவித் திட்டங்கள், இந்தோ- பசுபிக் பிராந்தய உறவுகள், பாதுகாப்பு ஒத்துழைப்புகள், நீண்டகால அபிவிருத்திகள் பற்றி இருவரும் பேசியதாகக் கூறப்படுகின்றது.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக ஜனாதிபதி செயலகம் அதிகாரபூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. ஆனால் சந்திப்பில் என்னென்ன விடயங்கள் தொடர்பாகப் பேசப்பட்டதென கூறப்பட்டிருக்கவில்லை.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலும் மைக் பொம்பியோ சந்திப்புத் தொடர்பாகக் கூறினாலும், பேசப்பட்ட உண்மையான விபரங்கள் எதனையும் வெளிப்படுத்தவில்லை.

இந்த நிலையில் மைப் பொம்பியோவுடன் இடம்பெற்ற சந்திப்பில், இலங்கையின் இறைமை, தன்னாதிக்கம் மற்றும் சீன உதவித் திட்டங்கள் குறித்து கோட்டாபய ராஜபக்ச எடுத்துக் கூறினாரென்றும், சீனாவிடம் இருந்து இலங்கை பெறும் உதவிகள் தொடர்பாக வல்லரசு நாடுகள் கேள்விக்குட்படுத்த இயலாதெனவும் சுட்டிக்காட்டியதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

குறிப்பாக அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற இன்னமும் ஒருவாரமே உள்ள நிலையில், இந்தோ- பசுபிக் பிராந்திய பாதுகாப்புகள் தொடர்பாகத் தற்போது பேச முடியாதெனவும், புதிய அரசாங்கத்துடன் பேசவே இலங்கை விரும்புவதாகவும் கோட்டாபய கூறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் இறைமை மற்றும் அரசியலமைப்புச் சட்டங்களுக்கு உட்பட்டதாகவே அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தின் ஒப்பந்தம் அமைய வேண்டுமெனவும், அது தொடர்பாக அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி பதவியேற்கவுள்ள புதிய அரசாங்கத்துடன், விரிவாகப் பேச விரும்புவதாகவும் கோட்டாபய ராஜபக்ச கூறியதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

மிகவும் நுட்பமான இராஜதந்திர மொழியில் கோட்டாபய ராஜபக்ச மைக் பொம்பியோவோடு உரையாடலைக் கையாண்டார், என்றே கொழும்பு உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் சிங்கள ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்தன.

ஆனால் இலங்கையில் இடம்பெற்ற பேச்சுக்கள் வெற்றியளித்துள்ளதாக ,கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலெய்ணா ஊடகம் ஒன்றுக்குக் கூறியுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :