ரவுப் ஹக்கீம் தனது ஆளுமையை வளர்ப்பதற்கு கஜேந்திரகுமாரிடம் நிருவாகத்தை கற்றுக்கொள்வாரா ?

முகம்மத் இக்பால், 
சாய்ந்தமருது-

ரு சிறுபான்மை அரசியல் கட்சி சமூக சீர்திருத்தத்தை மேற்கொண்டு தான்சார்ந்த மக்களுக்கு சிறந்த அரசியல் தலைமையை வழங்குவதென்றால், அதன் தலைவர் நிருவாக சட்டத்தை அமுல்படுத்துவதில் தனது கட்சியின் உயர்மட்டத்தினருடன் இறுக்கமான கொள்கையினை கடைப்பிடித்தல் வேண்டும்.

இதற்காக உறுதியான ஒழுக்ககோவைகளை தயாரித்து அதன் பிரகாரம் முதலில் தலைவர் செயல்படுவதுடன், ஏனைய உயர்மட்டத்தினர்களும் அவ்வாறு செயல்படுவதற்கு பணிக்க வேண்டும்.

தனது சொந்த சகோதரர் சட்டத்தை மீறினாலும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் ஏனையவர்களுக்கும் அது படிப்பினையாக அமையும். அதனால் சட்டம் அமுல்படுத்தப்படுவதுடன், ஒழுக்கம் நிறைந்ததும், ஊழல் அற்ற சமூக நோக்குடைய கொள்கையுள்ள இயக்கமாக முஸ்லிம் காங்கிரசை கட்டியெழுப்ப முடியும்.

ஆரம்பகாலங்களில் விடுதலை புலிகள் இயக்கத்தில் உள்ளவர்கள் எவரும் திருமணம் செய்ய முடியாது என்பது சட்டம். இதனால் இயக்கத்துக்குள் நடைமுறை பிரச்சினைகள் உருவானதுடன், தலைவர் பிரபாகரனும் திருமணம் செய்ய முடியாத நிலை இருந்தது.

அதனால் இயக்கத்தின் மத்திய குழுவினால் சட்டத்தை திருத்தம் செய்தபின்பே தலைவர் திருமணம் செய்தார். பிரபாகரன் நினைத்திருந்தால் இன்றுள்ள அரசியல்வாதிகளை போன்று “ஊருக்குத்தான் உபதேசம் உனக்கல்லடி கண்ணே” என்றவாறு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளாமல் திருமணம் செய்திருக்கலாம். அதனை போராளிகள் அங்கீகரித்திருப்பார்கள்.

ஆனால் சட்டம் மதிக்கப்படல் வேண்டும் என்பதில் பிரபாகரன் உறுதியாக இருந்தார். அதனாலேயே பின்னாட்களில் அந்த இயக்கம் ஒழுக்கமுள்ள கட்டமைப்புடன் பல அரிய சாதனைகளை புரிந்தது.

அதுமட்டுமல்லாது, தற்போது வளர்ந்துவருகின்ற அரசியல் கட்சியான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் கடும் இறுக்கமான கொள்கையினை கடைப்பிடித்து வருகின்றது.

கடந்த பொது தேர்தலில் முதன் முறையாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி இரண்டு ஆசனங்களை பெற்றது. அதன் வெற்றிக்காக உழைத்தவர்களில் மிக முக்கியமானவர் கட்சியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி மணிவண்ணன் அவர்கள்.

ஆனால் தேர்தலின் பின்பு அவர்மேல் ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டதன் பின்பு கட்சியிலிருந்து நீக்கப்பட்டதுடன், யாழ்ப்பான மாநகரசபை உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டது.

வளர்ந்துவருகின்ற கட்சியொன்று அதன் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய மக்கள் செல்வாக்குள்ள ஒருவரை இவ்வாறு நீக்கும்போது அது கட்சியை பாதிக்கும் என்று சிந்திக்கவில்லை. மாறாக சட்டத்தை அமுல்படுத்துவதில் அதன் தலைவர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் அவர்கள் உறுதியாக உள்ளார்.

ஆனால் ஆரம்பகாலங்களில் முஸ்லிம் காங்கிரசில் உள்ள சிலர் பணம் பெற்றுக்கொண்டு தொழில் வழங்கினார்கள் என்றும் இன்னும் எத்தனையோ ஊழல், மற்றும் கட்சியை பாதிக்கின்ற பல ஆபத்தான விடயங்களை தலைவரின் கவனத்திற்கு கொண்டுசென்றோம். அவைகள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்தது.

யாரையெல்லாம் ஊழல்வாதியாக கண்டோமோ அவர்களுக்கு பின்னாட்களில் பதவி உயர்வும், அரசியல் அதிகாரங்களும் வழங்கப்பட்டது. அதாவது ஊழல்வாதிகள் ஊக்குவிக்கப்பட்டார்கள். கிட்டத்தட்ட எழுபது வீதமானவர்கள் பணம் செலுத்தியே தொழிலை பெற்றார்கள்.

அங்கே ஒழுக்கக்கோவைகளும் இல்லை, நீதி நியாயங்களும் இல்லை, சட்ட நடைமுறையும் இல்லை. தடி எடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரனாகவே காணப்படுகின்றார்கள்.

எனவேதான் சிறந்த ஆளுமையுள்ள கட்சியாக முஸ்லிம் காங்கிரசை கட்டியெழுப்புவதென்றால் இறுக்கமான ஒழுக்ககோவைகளுடன், கட்சியின் இலக்கு என்ன என்ற தெளிவான கொள்கைகள் தயாரிக்கப்பட்டு அவைகள் அமுல்படுத்தப்படல் வேண்டும்.

அவ்வாறு இறுக்கமான சட்டக்கோவைகள் நடைமுறையில் இருந்திருந்தால் தலைவரின் கட்டளையை மீறி எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்திருக்கமாட்டார்கள்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :