முஸ்லிம் எம்பிக்களது ஆதரவுடன் 20 ஆவது திருத்தச்சட்டம் வெற்றி கொள்ளப்படும்!

இர்ஷாத் ஜமால் -


1978 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையான அரசியல் அமைப்பானது, ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரத்தை வழங்கியது. இதனால் தண்டனை விலக்கீட்டு சிறப்புரிமையினை ஜனாதிபதி பெற்றுக் கொண்டார்.

ஆனாலும், நல்லாட்சி அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதியின் செயற்பாடுகளை சவாலுக்குற்படுத்தும் சந்தர்ப்பம் காணப்படுவதுடன், பிரதமருக்கு பல அதிகாரங்களை வழங்கியுள்ள அதே சமயம் 18ஆவது திருத்தச்சட்டத்தில் காணப்பட்ட ஜனாதிபதிக்கான பல அதைகாரங்களும் குறைக்கப்பட்டுள்ளது.

19 ஆவது திருத்தச்சட்டமானது தமது கைகளை கட்டியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் கட்டப்பட்டுள்ள கைகளை அவிழ்க்கும் வகையில், அவருக்கு நிறைவேற்று அதிகாரத்தை பெற்றுக் கொடுக்கவே 20 ஆவது திருத்தச்சட்ட மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது, என டிலான் பெரேராவும் தெரிவித்துள்ளார்.

தனது இரண்டாவது பதவியாண்டு ஆரம்பமாகும், எதிர்வரும் நவம்பர் மதத்திற்கு முன்னர் 20 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற தனது எதிர்பார்ப்பினை ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.

20 ஆவது திருத்தச்சட்டத்தை எதிர்த்து இதுவரை 39 வழக்குகள் உயர் நீதிமன்றில் தொடுக்கப்பட்டுள்ளது. அமரபுர, ராமண்ய பௌத்த பீடங்களும், கத்தோலிக்க பேராயர் பேரவை உள்ளிட்ட பல அமைப்புக்கள் 20 ஆவது திருத்தச் சட்டத்திற்க்கு எதிரான தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளன.

ஆளும் கட்சியின், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான விமல் வீரவன்ச, உதயன் கம்பன்வில மற்றும் விஜயதாச ராஜபக்ச உள்ளிட்டவர்களும் 20 ஆவது சட்டத்தை எதிர்த்து வருகின்றனர்.

இவ்வாறு 20 மீது பலத்த எதிர்ப்புகள் குவிந்துள்ள நிலையில் நாளை (22.10.2020)ம் திகதி வாக்கெடுப்பு நடாத்தப்படவுள்ளது.

எனினும் எதிர்க்கட்சியில் இருக்கும் முஸ்லிம் கட்சிகளை பிரதிநிதிப்படுத்தும் எம்பிக்கள் யாரும், 20 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் தமது நிலைப்பாடுகளை தெரிவிக்காமல் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றனர்.

இருந்தும் மு.காவின் எம்பிக்களான பைசல் காசிம் மற்றும் எச்.எம்.எம் ஹரீஸ் ஆகியோர் 20 ஆவது திருத்தச் சட்டத்திற்க்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலா வருகின்றது. அண்மையில் பிரதமர் அவர்களை நேரில் சந்தித்த ஹரீஸ் அவர்கள், கல்முனையில் காணப்படும் பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுத்தருமாறு பிரதமரை கோரியிருந்தார்.

முகாவின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் ஊடகவே குறித்த சந்திப்புக்கள் இடம்பெறுவது வழமையாக இருந்த பொழுதிலும், ஹரீஸ் அவர்கள் தனிமையில் பிரதமரை சந்தித்ததானது, 20 மீதான அவரது ஆதரவை ஊர்ஜிதப் படுத்தக்கூடியதாக உள்ளது.
மேலும் மற்றுமொரு முஸ்லிம் எம் பியான அலி சப்ரி ரஹீம் அவர்களும் 20 ஐ ஆதரிக்க உள்ளார். ஆரம்பத்தில் இருந்து அரசின் கொள்கைகளை புகழ்ந்து வரும் மு.காவின் மட்டக்களப்பு மாவட்ட எம்பியான முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அவர்களும் தனது ஆதரவை வழங்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

ஆளும் அரசின் பங்காளிகள் சிலர் 20 ஐ எதிர்த்து வாக்களித்தாலும், முஸ்லிம் எம்பிக்களது பலத்த ஆதரவுடன் 20 ஆவது திருத்தச்சட்டம் நாளை பாராளுமன்றில் வெற்றி கொள்ளும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :