கல்முனை தொகுதியை வெல்ல வேண்டும் என்பதனாலையே நான் மட்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் எங்களின் தலைமையினால் களமிறக்கப்பட்டேன். இருந்தாலும் என்னை தோற்கடிக்க எங்களின் கட்சியை சேர்ந்த ஏ.எம். ஜெமீல் பகிரங்கமாகவே வேலை செய்தார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
இன்று மாலை மாவடிப்பள்ளியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து பேசிய அவர், சாய்ந்தமருதில் வசிக்கின்ற எங்கள் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளராக இருக்கும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் எங்களின் தலைமையான ரவூப் ஹக்கீம் அவர்களின் ஆலோசனையை புறந்தள்ளி கல்முனை தொகுதி வேட்பாளராக களமிறங்கிய என்னை தோற்கடிக்க பகிரங்கமாக தேர்தலில் வேலைசெய்தார். அது கவலையான விடயமாக இருந்தாலும் அப்பிரதேசத்தில் இருந்து எங்களின் தொலைப்பேசி சின்னத்திற்க்கு அளித்த வாக்குகளில் 90 வீதத்திற்கும் அதிகமான விருப்பு வாக்குகளை அந்த மக்கள் வழங்கியிருந்தனர் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஜெமீலின் சதிகளை முறியடிக்க எனக்கு பக்கபலமாக இருந்த மு.கா தவிசாளர் எம்.ஏ.மஜீத், தேசிய பிரதிப் பொருளாளர் யஹ்யாகான் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மிராசாஹிப் என சகலரையும் இங்கு நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.
சகோதரர் ஜெமீல் எங்களின் கட்சியை விட்டு வெளியேறி சென்று வேறு கட்சியில் இணைந்து அதிலிருந்து வெளியாகி மீண்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைய பிரதான வகிபாகம் வகித்தவன் நான். இருந்தாலும் தலைமைத்துவ கட்டுப்பாட்டையும் கல்முனை தொகுதியையும் புறந்தள்ளி அவர் செய்த இந்த காரியம் மிக வேதனையான ஒன்றாகும் என்றார்.
மேலும் தேசிய பட்டியல் விவகாரம் தொடர்பில் பேசிய அவர் எங்களின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் தேர்தலுக்கு முன்னர் செய்து கொண்ட எழுத்து மூல ஒப்பந்தத்தை ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச மீறியுள்ளார். இனிவரும் காலங்களில் அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் சிந்ததித்து முடிவெடுப்போம்.
சமுதாயத்தை பற்றி சிந்தித்து நாங்கள் முடிவெடுக்க வேண்டும். பொதுஜன பெரமுன எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் நாங்கள் செல்ல வேண்டும். தமிழ் கூட்டமைப்பின் கதையை கேட்டதால் கடந்த காலங்களில் நடைபெற்ற கசப்பான சம்பவங்கள் போல் இனியும் இடம்பெற அனுமதிக்க முடியாது.
தனிநபர்களை திருப்திப்படுத்தும் எவ்வித நடவடிக்கைக்கும் நான் அனுமதி வழங்கப்போவதில்லை என்பதை கிழக்கில் பிறந்த ஒரு மக்கள் பிரதிநிதியாக தெளிவாகவும் ஆணித்தரமாகவும் கூறி வைக்கிறேன் என்றார்.
இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம்.ரக்கீப்,மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ரோசம் அக்தார்,ஏ.சி.ஏ சத்தார்,எம்.எஸ்.எம் நிசார்(ஜேபி),எம்.நவாஸ், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம்.என்.எம்.ரணீஸ்,முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஏ.நிசார்த்தீன் மாளிகைக்காடு கட்சியின் முக்கியஸ்தகர் எம்.எச் நாசர்,கல்முனை முன்னாள் மாநகர சபை வேட்பாளர் தேசமாணிய ஏ.பி.ஜெளபர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment