மாற்று அரசாங்கத்தை மக்களின் பேராதரவுடன்; அமைக்கப் போவதாக, நாடெங்கிலும் பறைசாற்றி வருவதாகவும், அது ஒரு யுகப் புரட்சியாகும் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.


ம்பளையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவை அந்தப் பதவிக்கு போட்டியிடுவதற்கு அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன தீர்மானித்த சந்தர்ப்பத்தில் வடக்கிலும், தெற்கிலும் எரிமலைகள் குமுறிக்கொண்டிருந்தன. ஜனாதிபதி வேட்பாளராக யாரை தெரிவு செய்வது என்பது தொடர்பில் கட்சிக்குள் பல்வேறு உள்வீட்டுப் பிரச்சினைகள் தலைதூக்கியிருந்தன.
இறுதியில் சரியான தீர்மானத்திற்கு வந்து அன்னார் அந்த வேட்பாளர் அந்தஸ்த்தை வழங்கிய பின்னர் நாட்டில் அப்போது நிலவிய சூழ்நிலையில் பதினோர் ஆண்டுகளாக ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் பிரச்சினைகள் ஏற்பட்டு மீண்டும் அக்கட்சியினால் வெற்றி பெற முடியுமா என்ற கேள்வி எழுந்தது.
எங்களது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அப்போழுது கிழக்கில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருந்த பாரதூரமான சேதங்களுக்கு மத்தியில், எங்களது உரிமைகள் மறுக்கப்பட்டு, இந்திய - இலங்கை உடன்படிக்கையினால் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் அந்த தற்காலிக இணைப்பினால் எதிர்நோக்கிய பாரதூரமான நெருக்கடிகளின் விளைவாக நாங்கள் தனியொரு தரப்பாக அரசியலுக்குள் பிரவேசிக்க நேர்ந்தது.
அந்த தருணத்தில் ஆர்.பிரேமதாஸ ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எங்களிடம் வேண்டிக்கொண்டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் செய்திருந்த ஒப்பந்தத்தை இரத்து செய்து, அவசியமான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் அவருக்கு ஆதரவளித்த பின்னணியில் சிறிய வாக்கு வித்தியாசத்தில் அத்தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியாகும் வாய்ப்பு ஆர்.பிரேமதாஸவுக்குக் கிட்டியது.

அவர் அந்த உதவியை ஒருபோதும் மறந்துவிடவில்லை. அவருக்கு எவ்வளவோ பிரச்சினைகள் ஏற்பட்டன. குறிப்பாக, அவருக்கு எதிராக குற்றப் பிரேரணை முன்வைக்கப்பட்டபோதும் எமது தலைவர் அஷ்ரப் பிரேமதாஸவுடன் இருந்ததனால் எங்களது சமூகத்தினர் மத்தியிலே அனேகமானோர் எங்களை விமர்சிக்கத் தலைப்பட்டனர். ஆனால், நாங்கள் அதனை பொருட்படுத்தாது, சரியாக செயற்பட்டு அவரை வெற்றிபெறச் செய்தது மட்டுமல்லாமல், அந்த குற்றப் பிரேரணையும் முறியடிக்கச் செய்தோம்.
முன்னர் ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்ட அணிப்பிரழ்வு மற்றும் உட்பூசல் நெருக்குவாறங்களுக்கு மத்தியில் சிறுதொகையினர் கட்சியிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளனர்.
தற்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரிடம் காணப்பட்ட குறைபாடுகள், பலவீனங்கள் பற்றி அவருடன் பழகியவர்களுக்கு நன்றாக தெரியும். அவற்றை திருத்திக்கொள்ளுமாறு பலமுறை அவரிடம் கூறிப் பார்த்தோம். அவற்றிற்கு அவர் செவிமடுக்கவில்லை. ஜனாதிபதி தேர்தலிலும் இழுத்தடிப்பு செய்துவிட்டு கடைசி நேரத்தில் இணங்கியதால் அத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு இழக்கப்பட்டது.
சஜித் பிரேமதாஸவுக்கு கிடைக்கவிருந்த வெற்றியை இல்லாமல் செய்ததோடு இப்பொழுது மக்கள் மத்தியில் மீண்டும் மேலோங்கியுள்ள அவருக்கு சாதகமாக எழுந்துவரும் ஆதரவு அலையை தடுப்பதற்கும் எத்தனிக்கப்படுகின்றது.
இந்தப் பின்னணியில் தான் மக்களின் ஆதரவு தளத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக வெவ்வேறு கட்சிகளை சேர்ந்த நாங்கள் இப்பொழுது கூட்டணி அமைத்து அதனூடாக சஜித் பிரேமதாஸவின் தலைமையில் அரசாங்கத்தை அமைக்கும் நோக்கத்துடன் இந்;தப் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றோம்.
நாடெங்கும் பிரசாரம் செய்து மக்களின் மகத்தான பங்களிப்புடன் மாற்று அரசாங்கத்தினராக நாங்கள் தான் அமையப் போகின்றோம் என்பதை பறைசாற்றி வருகின்றோம். அது ஓர் யுகப் புரட்சியாகவும் அமையும்.

அத்துடன் இன்றைய ஆட்சியாளர்களின் போலியான தேசப் பற்றை பற்றியும் பேசியாகி வேண்டும். குருநாகலில் புவனேகபாகுவின் மண்டபம் இடித்து தள்ளப்பட்டதை தொடர்ந்து எங்களுடைய நாட்டின் ஆட்சித் தலைமைகளில் முக்கியமான ஒருவரான மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றிய போது தெரிவித்துள்ள கருத்து மிகவும் கீழ்த்தரமானது. அவரது உரையை கேட்டு நான் மிகவும் மனம் வருந்தினேன்.
அது பொறுப்பு வாய்ந்த தலைவரொருவர் பேசக் கூடியதல்ல. புவனேகபாகு மன்னன் முஸ்லிம் பெண்ணொருவரையும் மனைவியாக வைத்திருந்தார் என கேலியாகவும், கிண்டலாகவும் அவர் அக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்களின் ரசனைக்கு ஏற்றவாறு பேசியது நகைப்புக்கிடமானது.
மன்னர் ஆதரவு முஸ்லிம்களான எங்களுக்கு செனரத் அரசனின் காலத்தில் கிடைத்தது. போர்த்துகேயர், ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் எங்கள் சமூகத்தினர் மீது அட்டூழியங்கள் அடர்ந்தேறியபோது எங்களுக்கு அபயமளித்தவர்கள் அக்கால சிங்கள மன்னர்கள் என்பதை மறைக்க முடியாது. எங்களது மூதாதையர்கள் சிங்களப் பெண்மணிகளை திருமணம் செய்து வாழ்ந்துள்ளனர்.
இந்த கிண்டல் பேச்சினால்; கையாட்களின் அடாவடித்தனத்தை நியாயப்படுத்தவே முயற்சித்தாகவே தோன்றுகின்றது. காசியப்ப மன்னரும் முஸ்லிம் பெண்ணொருவரை மணமுடித்திருந்திருந்தால் சீகிரிய மலைக் குன்றையும் உடைத்துத் தகர்த்திருப்பார்கள்.

தங்களது அடியாட்களை தப்பவைப்பதற்காக இவ்வாறு நிந்திக்கும் விதத்தில் இனவாதத்தை கக்குவது மிகவும் மட்டகரமான காரியமாகும். இவ்வாறு துவேஷமாக இனவெறியை தூண்டுவோருக்கு எதிராக கிளர்ந்தெழுவதற்காகவே நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்திருக்கின்றோம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -