ஐக்கிய தேசிய கட்சியிலும், சுதந்திர கட்சியிலும் முஸ்லிம்கள் பங்காற்றிவருவது போன்று தமிழ் அரசு கட்சியிலும் பங்காற்றினார்கள் என்பது வரலாறு. இது இன்றைய தலைமுறையினருக்கு தெரியாது.
முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் அஸ்ரப் அவர்களின் அரசியல் பிரவேசமும் தமிழ் அரசு கட்சி மூலமாகவே அமைந்தது.
“அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழத்தை பெற்றுத் தராவிட்டால் இந்த தம்பி அஸ்ரப் பெற்றுத்தருவார்” என்று தமிழ் அரசு கட்சியின் மேடைகளில் அப்போது அஸ்ரப் அவர்கள் முழங்கியது மிகவும் பிரபலமானது.
அதுமட்டுமல்லாது தமிழ் அரசு கட்சி சார்பாக பல தடவைகள் முஸ்லிம்கள் வேட்பாளர்களாக போட்டியிட்டு வெற்றிபெற்று பாராளுமன்றம் சென்றுள்ளார்கள்.
அந்தவகையில் 1956 இல் எம்.எஸ். காரியப்பர் அவர்கள் தமிழ் அரசு கட்சி சார்பாக கல்முனை தொகுதியிலும், அதே ஆண்டில் பொத்துவில் தொகுதியில் எம்.எம். முஸ்தபா அவர்களும் போட்டியிட்டு வெற்றிபெற்று பாராளுமன்றம் சென்றார்கள் என்பது வரலாறு.
அதுபோல் கல்குடா தொகுதியிலும் முஸ்லிம்கள் தமிழ் அரசு கட்சியில் போட்டியிட்டார்கள். மேலும் செனட்டர் மர்ஹூம் மசூர் மௌலானாவும் தமிழ் அரசு கட்சி ஊடாகவே அரசியலை முன்னெடுத்தார்.
இவ்வாறு தமிழ் அரசு கட்சி மூலமாக தமிழ் முஸ்லிம் உறவுகள் பலமாக இருந்த நிலையில்தான் ஆயுதப்போராட்டம் எழுச்சி பெற்றது. அப்போது அனைத்து தமிழ் போராட்ட இயக்கங்களிலும் முஸ்லிம் இளைஜர்கள் இணைந்து போராடியதுடன் முஸ்லிம் மாவீரர் குடும்பமும் உள்ளது.
1987 இல் இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்கு பின்புதான் முஸ்லிம்கள் தனித்துவ அரசியலை நோக்கி சென்றார்கள்.
1990 ஜூலை வரைக்கும் விடுதலை புலிகள் இயக்கத்தில் முஸ்லிம் போராளிகள் அதிகளவில் பணியாற்றி வந்தார்கள். அதன்பின்பு ஏற்பட்ட கசப்பான சம்பவங்களினால்தான் தமிழ் முஸ்லிம் உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டது.
இவ்வாறு வரலாறுகள் இருக்கும்போது முஸ்லிம் ஒருவருக்கு தமிழ் அரசு கட்சியில் உப தலைவர் பதவி வழங்கப்பட்டதாக புதிதாக குற்றம்சாட்டுவதன் மூலம் கருணா அம்மானுக்கு வரலாறு தெரியாதா அல்லது வரலாற்றை மூடி மறைக்க முற்படுகின்றாரா அல்லது தனது சுயநலனுக்காக தமிழ் முஸ்லிம் உறவை கொதிநிலையில் வைத்திருக்க முற்படுகின்றாரா என்று எண்ணத் தோன்றுகின்றது.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது