ஊருக்குள் திடிரென நுழைந்த யானை ஒன்றினை விரட்டியடிக்கும் நடவடிக்கை ஒன்று தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சாளம்பைக்கேணி சவளக்கடை அன்னமலை பகுதியில் இன்று(21) காலை பெரிய தனியன் யானை ஒன்று உட்புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டிருந்தது.
இதனை அடுத்து பொதுமக்கள் குறித்த யானையை விரட்டுவதற்காக சீனவெடிகளை பயன்படுத்தி அகற்ற முற்பட்டனர்.
குறித்த யானையும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடமாடியதுடன் அறுவடை மேற்கொள்ள தயாராக இருந்த நெற்கதிர்களை உண்டு அருகில் உள்ள நாணல் காட்டில் சென்று மறைந்துள்ளது.
இவ்வாறு ஊருக்குள் பிரவேசித்து மக்களை அச்சுறுத்திய யானை தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ் .ரங்கநாதன் நாவிதன்வெளி பிரதேச உதவி பிரதேச செயலாளர் என் . நவனீதராஜா மற்றும் அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் குழுவினர் வனஜீவராசிகள் திணைக்களத்துடன் இணைந்து நேரில் சென்று ஆராய்ந்துள்ளனர்.
அத்துடன் குறித்த யானை மக்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாத வகையில் மீண்டும் காடுகளிற்குள் விரட்ட நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதேச செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அண்மைக்காலமாக யானைகளின் அட்டகாசம் அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்து வருகின்றமையம் குறிப்பிடத்தக்கது.