அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாக, சில கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரசாரங்களில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக நான் அறிகிறேன். அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாக இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும், அரசாங்கம் ஒருபோதும் இனவாதமாகச் செயற்படவில்லை. இவ்வாறு தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என, கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ் தெரிவித்தார்.
அடிப்படைவாதிகள் மற்றும் ஊழல்வாதிகளை இணைத்துக்கொண்டு ஒருபோதும் அரசாங்கம் அமைக்கப்படமாட்டாது என்ற உத்தரவாதத்தையும் மக்களுக்கு வழங்குகின்றோம். இவ்வாறான நிலை ஏற்படாது என்ற நம்பிக்கையும் எமக்குள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கண்டி, எலமல்தெனிய, பொதுஜன பெரமுன பிரதான காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான கலந்துரையாடலின்போதே, அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
எதிர்வரும் பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றி பெறுவது நூறு வீதம் உறுதியாகியுள்ளது. இதில் எவ்வித சந்தேகங்களும் கிடையாது. இம்முறை மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் வெற்றி பெறச் செய்வதே எமது இலக்கு. இந்த அமோக வெற்றியில் முஸ்லிம்களும் பங்குதாரர்களாக ஆக வேண்டும்.
இந்த நாட்டில் வீடு, மின்சாரம், குடிநீர் பிரச்சினைகள் நிறையவே உண்டு. இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய சக்தி, தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கு மாத்திரமே உள்ளது. இந்நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதில் அவர் திறமைசாலியாக விளங்குகிறார். இந்த தைரியம் அவரிடம் உண்டு. அத்துடன், ஜனாதிபதியும் பிரதமரும் இந்நாட்டின் அபிவிருத்தியில் பங்காளிகளாகச் செயற்படுவார்கள் என்பதிலும் எவ்வித ஐயமுமில்லை.
எனவே, எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிப்பவர்களைக் கொண்ட அரசாங்கம் ஒன்றை அமைப்பதன் மூலமே, அவரின் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லலாம். அதற்காக, எமக்கு நிலையான அரசாங்கம் ஒன்று தேவை. இந்நிலையில், மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்ட அரசாங்கம் ஒன்றை அமைத்துக் கொண்டால்தான், ஜனாதிபதியின் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லலாம். இதற்கு முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைவரினது ஆதரவும் அவசியம் என்றார்.