வேலாயுதம் தினேஷ்குமாரால் புதிய யோசனை முன்வைப்பு
எவ்வித நிபந்தனைகளும் இன்றி ‘மக்களின் நலன்’ என்ற ஒரு விடயத்தை மாத்திரம் கருத்திற்கொண்டு இணைந்து பயணிக்கும் முடிவை கூடியவிரைவில் எடுக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் முன்வைத்துள்ளார்.
பொதுத்தேர்தலை முன்னிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் வேலாயுதம் தினேஷ்குமார், இளைஞர், யுவதிகள் மற்றும் புத்திஜீவிகள் உள்ளிட்டோரையும் சந்தித்து, அடுத்தக்கட்ட திட்டங்கள் சம்பந்தமாக விபரித்துவருகின்றார்.
இவ்வாறு நடைபெற்ற சந்திப்பொன்றின்போதே அவர் மேற்படி விடயத்தை குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ மலையகத்தில் மாற்றம் வேண்டும் என்ற கோஷம் ஆரம்பம் காலம்தொட்டு எழுப்பட்டுவந்தாலும் அந்த இலக்கை நோக்கி இன்னும் பயணிக்கமுடியாதுள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக எமது சமுகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளின் ஒற்றுமையின்மையும் இதில் பிரதான காரணியாகும்.
ஒரு தரப்பு எதையாவது செய்தால் மறுதரப்பு காலை வாருவரும், விமர்சனங்களை முன்வைப்பதுமாகவே எமது அரசியல் கலாச்சாரம் தொடர்ந்துக்கொண்டிருக்கின்றது. இந்நிலைமை மாறவேண்டும். அதனை மாற்றியமைப்பதற்காகவே அரசியலில் இறங்கவேண்டும் என்ற எண்ணம் என்னுள் வந்தது. எல்லாம் இணைந்து மக்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதே எனது தந்தையின் எதிர்ப்பார்ப்பாகவும் இருந்தது.
‘ஒற்றுமை’ என்ற ஆயுதம் பலம்பொருந்தியது. ஓரணியில் இருந்தால் எதனையும் சாதிக்கமுடியும். ஒரு கையில் ஓசை எழுப்புவதைவிடவும் இரு கரங்களும் இணைந்தால் பலமாக சத்தம் வரும். குறிப்பாக சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தலின்போது மலையக தலைவர்கள் அன்று இணைந்து செயற்பட்டனர். இதனால் இரண்டு பிரதிநிதிகளை சபைக்கு அனுப்பக்கூடியதாக இருந்தது.
இவ்வாறு இணைந்து செயற்பட்ட சந்தர்ப்பங்களிளெல்லாம் எமக்கு வெற்றியே கிடைத்துள்ளது.
மலையகத்தில் மாற்றம், சமுக விடுதலை, மக்களின் வாழ்வாதார மேம்பாடு, உரிமைகள் உட்பட மேலும் பல விடயங்களில் கட்சிகளின் நிலைப்பாடுகள் ஒருமித்ததாகவே காணப்படுகின்றன. எனவே, அவற்றை அடைவதற்கு இணைந்து செயற்பட்டால் , மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான பேரம் பேசும் ஆற்றலும் உயரும். இது தொடர்பான கருத்தாடலை மலையக புத்திஜீவிகளும், சமுக செயற்பாட்டாளர்களும் ஆரம்பிக்கவேண்டும். " என்றார்.