" இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஒரு குடும்பம். கொட்டகலை என்பது எமது கோட்டை. எனவே, எந்நேரமும் அங்கே எமது மக்கள் வரலாம். என்னை சந்திக்கலாம். பிரச்சினைகள் இருந்தால் கூறலாம். ஆலோசனைகளை இருந்தால் முன்வைக்கலாம். எனக்கு ஒருமுறை வாய்ப்பு தந்து பாருங்கள், ஐந்து வருடங்களுக்குள் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்திக்காட்டுவேன." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தெரிவித்தார்.
கொட்டகலை மேபீல்ட், சாமஸ் தோட்டத்தில் 09.07.2020 அன்று இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அவர் மேலும் கூறியதாவது,
" எவ்வித நிபந்தனையும் இன்றியே ஆயிரம் ரூபா அவசியம் என அப்பா வலியுறுத்தியிருந்தார். எனவே, நிபந்தனைகளுடன் ஆயிரம் ரூபாவை ஏற்பதற்கு நாம் தயாரில்லை. இன்று சில துரைமார் ஆட்டம் போடுகின்றனர். இரண்டு கிலோ, மூன்று கிலோ கூடுதலாக பறிக்கவேண்டும் என வலியுறுத்துகின்றனர். அவர்கள் ஆடட்டும். எதிர்காலத்தில் தக்க பாடம் புகட்டப்படும். எவ்வித நிபந்தனையும் இல்லாமல் ஆயிரம் ரூபா கிடைக்கும். இது ஆறுமுகன் தொண்டமான் மீது சத்தியம்.
தனிவீட்டுத்திட்டத்தை கடந்த காலத்தில் குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போலவே முன்னெடுத்துள்ளனர். தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு மாத்திரமே வீடுகள் என்றனர். ஆனால், மலையகத்தில் வீடில்லாத அனைவருக்கும் வீடுகள் கிடைக்கவேண்டும் என்பதே எமது திட்டம். அத்துடன், பொருளாதாரமும் மேம்படுத்தப்படவேண்டும். நிதிப்பாய்ச்சல் எம்மை சூழவே இருக்கவேண்டும்.
ஜீவன் தொண்டமான் சின்ன பையன், அனுபவம் இல்லை என விமர்சிக்கின்றனர். மலையகத்தை இந்த சின்ன பையனிடம் தந்து பாருங்கள், ஐந்து வருடங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி காட்டுகின்றேன்.
கண்டியில் போட்டியிடும் எமது இளம் வேட்பாளர் பாரத் அருள்சாமி என்ன செய்யப்போகின்றேன் என கூறி வாக்கு கேட்கின்றார். ஆனால், இவர் பிரதிநிதித்துவத்தை அழிக்க வந்துள்ளார் எனக்கூறியே மற்றவர்கள் வாக்கு கேக்கின்றனர்.
அதேபோல் பதுளையில் செந்தில் தொண்டமான் 10 வருடங்களாக மக்களுக்கு சேவைகளை செய்துள்ளார். அவர் திடீரென வானத்தில் இருந்து குதித்தவர் அல்லர். எனினும், இவர் எதனையும் செய்யவில்லை என விமர்சித்தனர். திட்டங்களை முன்வைத்தால் விலக தயார் எனவும் சவால் விட்டனர். செந்தில் தொண்டமான் ஆதாரங்களை வெளியிட்டார். ஆனால், அவர் தேர்தலில் இருந்து விலகவில்லை.
அதேவேளை, சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையேற்கும் போது அவருக்கு 26 வயது. இப்போது எனக்கும் அதே வயது தான். உங்களின் முன்னோர்கள் அவரை நம்பினர். நீங்கள் என்னை நம்புவீர்களா? எனக்கும் ஒருமுறை வாய்ப்பு தந்து பாருங்கள்." - என்றார்.