கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர் என்னுடைய உணவகத்தினுள் நுழைந்து பிரச்சினை செய்த வாடிக்கையாளர்களின் முரண்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்த போது வாடிக்கையாளர்களின் முரண்பாடுகள் தொடர்பில் சரியான வகிபாகத்தை வழங்க தவறிய என்னுடைய உணவக சமையல்காரரை நான் தண்டித்தேனே ஒழியே அவருடன் வேறந்த கோபங்களுமில்லை என கல்முனை அல்தாப் உணவகத்தின் உரிமையாளர் எம்.எம்.அமீர் தெரிவித்தார்.
சமூகவலைத்தளத்தில் பரவலாக பரவிவரும் முதலாளி தொழிலாளியொருவரை தாக்கும் காணொளி தொடர்பில் இன்று (11) காலை ஊடகங்களுக்கு தன்னிலை விளக்கமளித்த அவர் தொடர்ந்தும் விளக்கமளிக்கும் போது,
கடந்த 08 ஆம் திகதி இரவு என்னுடைய உணவத்திற்க்கு வந்த இரு வாடிக்கையாளர்கள் கொத்து ரொட்டியை வாங்கினர்.வாங்கி சென்ற சில நிமிடங்களில் சுமார் 15 பேரளவில் கடைக்கு வந்து பலர் கடையினுள்ளும் , சிலர் கடைக்கு வெளியேயும் இருந்து கொண்டு வேறுகடைகளில் இருப்பது போன்று கொத்து ரொட்டி இங்கு சுவையாக இல்லை என்று கடையில் பணியிலிருந்த காசாளரையும், உணவை சமைத்த சமையல் காரரையும் கடும் தொனியில் தகாத வார்த்தைகளை கொண்டு ஏசினர். அவர்களை சமரசம் செய்யும் நோக்கில் பணத்தை திருப்பி தருவதாகவும் இல்லாது போனால் புதிதாக கொத்து ரொட்டியை சமைத்து தருவதாகவும் எங்களால் முடிந்த விட்டுக்கொடுப்புக்களை செய்தோம்.
ஆனால் அந்த வாடிக்கையாளர்கள் நடந்து கொண்ட விதமும் அவர்கள் பேசிய பேச்சுக்களும் உணவை குறைகாண்பது போலல்லாது வேறு விதமாகவே இருந்ததை அவதானிக்க முடிகிறது. இது முதன் முறையல்ல அடிக்கடி இவ்வாறு நடைபெற்று வருகிறது. ஒரு சில குழுக்கள் என்னுடைய உணவகத்தின் மீது பிரதேச மக்களுக்கு இருக்கும் நல்ல அபிப்பிராயத்தை சீரழித்து வியாபாரத்தை இல்லாது செய்ய எடுக்கும் முயற்சியாகவே நான் அவ்வாறான செயல்களை நோக்குகிறேன்.
அந்த குழுவினர் என்னுடைய கடைக்கு வந்து பிரச்சினை செய்த போது நான் கடையில் இருந்திருக்க வில்லை. மிக நெருக்கமாக பலவருடங்களாக எனது உணவகத்தில் இனவாதங்களற்று வேலை செய்யும் என்னுடைய தமிழ்,முஸ்லிம் ஊழியர்களிடம் பிரச்சினைகள் தொடர்பில் விசாரணை செய்த போது என்னுடைய கடையின் சமையல்காரர் நடந்து கொண்ட விதம் எனக்கு திருப்தியளிக்காமல் விட்டதாலும், என்னுடைய வாடிக்கையாளர்களுக்கு திருப்தியான சேவையை செய்ய தவறியதாலும் அவரை கண்டித்தேன். ஆனால் சமூக வலைத்தளங்களில் ஒளிப்பதிவின் முழு பகுதியையும் பதிவிடாமல் ஒரு பகுதியை மட்டுமே பதிவிட்டுவிட்டு இனவாத முகங்களை கொண்ட போலியான முகப்புத்தக கணக்குகளிலிருந்து இனவாதமாக செய்திகளை பதிவிட்டு வருகிறார்கள்.
இவர்களின் நிகழ்ச்சி நிரல் எப்போதும் வெற்றியளிக்க போவதில்லை. என்னுடைய கடையில் ஒருநாளைக்கு சுமார் 500- 600 கொத்துக்கள் தயாராகி விற்கப்படுகிறது. ஆனால் இவ்வாறான முறைப்பாடுகள் வருவதில்லை. பிரச்சினை வந்த அன்றைய தினமும் அதே அளவு கொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டது. எங்களுடைய உணவகத்தை கல்முனை மாநகரசபை, கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையின் கீழுள்ள பொதுச்சுகாதார பரிசோதகர்கள் என பலரும் அடிக்கடி பரிசோதனை செய்வது வழக்கம். அன்றைய தினம் அப்படி எங்களின் உணவில் பிழைகள் இருந்திருந்தால் அதை சுகாதார தரப்புக்கு அவர்கள் அறிவித்திருக்க முடியும் அதையும் அவர்கள் செய்ய வில்லை. இது திட்டமிட்ட அஜந்தாவாகவே நான் இதை பார்க்கிறேன் என்றார்.
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம். உங்கள் விளம்பரங்களும் இங்கே இடம்பெற அழையுங்கள் 077 61 444 61 / 075 07 07 760 |