இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க். எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹியுடன் நேர்காணல்.


முஸ்லிம் அமைப்புகளுக்கு எதிராக அண்மைக் காலங்களில் மேற்கொள்ளப்படும் பரப்புரைகள் பற்றி அனைவரும் அறிந்திருக்கின்றனர். இந்தப் பரப்புரைகளின் உண்மைத் தன்மை என்ன என்பதை அறியும் பொருட்டு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க். எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹி அவர்களை சந்தித்தோம். ஜமாஅத்தே இஸ்லாமிக்கு எதிரான பரப்புரைகள் குறித்து அவருடன் நேர்கண்டவற்றின் சுருக்கத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.


கேள்வி: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் இலட்சியங்கள் அடங்கலான ஒரு சிறிய அறிமுகத்தை தாருங்கள்.

பதில்: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஒரு சமூக சன்மார்க்க அமைப்பாகும். 1954-ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இவ்வமைப்பு அதன் 66 வது வருடத்தில் காலடி வைத்திருக்கிறது. அமைப்பின் யாப்பு உறுப்புரை 3 ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி

1. தீனை நிலைநாட்டுங்கள்; அதில் பிரிந்து விடாதீர்கள் என்ற அல்குர்ஆனின் போதனையை அமுல்படுத்த முயற்சித்தல்
2. இஸ்லாத்தின் போதனைப் பிரகாரம் வாழ்க்கையை சீரமைத்தல்
3. அன்பு, சகோதரத்துவம், பரஸ்பர உறவு, மனிதநேயம் போன்ற மானிட விழுமியங்களை மேம்படுத்தல்
4. தேசத்தின் முன்னேற்றம் அபிவிருத்தி என்பவற்றில் பங்களிப்புச் செய்தல்

ஆகிய இலட்சியங்களுடன் இவ்வமைப்பு செயல்படுகின்றது. குறித்த இலட்சியங்களுக்காக செயல்படுகின்ற போது அதன் நடவடிக்கைகளை நெறிப்படுத்தும் வகையிலான வழிகாட்டல் தத்துவங்களையும் அது கொண்டிருக்கிறது.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் யாப்பு உறுப்புரைகளான 5, 6, 7, 8, 9, 10 ஆகியவை குறித்த வழிகாட்டல் தத்துவங்கைள உள்ளடக்கியிருக்கின்றன. இலங்கைச் சூழலைக் கருத்திற் கொண்டதொரு செயற்பாட்டு சட்டகத்தை அவை வரைந்திருக்கின்றன. 1965 ஆம் ஆண்டிலிருந்து குறித்த வழிகாட்டல் தத்துவங்களை ஜமாஅத்தே இஸ்லாமிம பேணி வருகின்றது. (இணையத்தளத்தைப் பார்க்கலாம் slji.org)

அவற்றுள் உறுப்புரை 8 கூறுகின்ற வழிகாட்டல் தத்துவத்தை உதாரணத்துக்கு சுட்டிக்காட்டலாம் எனக் கருதுகின்றேன்.

'ஜமாஅத்தே இஸ்லாமி என்ற பெயரில் அல்லது வேறு பெயர்களில் உள்நாட்டிலோ வெளிநாடுகளிலோ இயங்கும் எந்த இயக்கத்துடனும் ஜமாஅத் எவ்விதக் கட்டுப்பாட்டுடன் கூடிய தொடர்பையும் கொண்டிராது. ஜமாஅத் சுதந்திரமாக இயங்கும்.'

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி இலங்கைக்குரியதோர் அமைப்பாக செயல்படுகிறது என்பதே இந்த வழிகாட்டல் தத்துவத்தின் விளக்கமாகும்.

கேள்வி: அவ்வாறாயின் ஜமாத்அதே இஸ்லாமி என்ற பெயர் பற்றி என்ன கூறுகிறீர்கள்? அது வெளிநாட்டிலிருந்து வந்ததில்லையா?

பதில்: வெளிநாடுகளில் இருந்து தருவிக்கப்பட்ட பெயர்கள் நிறையவே இருக்கின்றன. (உதாரணம்: காங்கிரஸ், டைம்ஸ்) பெயர் என்பது வேறு; உத்தியோகபூர்வ உறவுகள் என்பது வேறு. எந்த உள்நாட்டு வெளிநாட்டு அமைப்புகளுடனும் கட்டுப்பாடுகளுடன் கூடிய உத்தியோகபூர்வ உறவுகளை ஜமாஅத்தின் ஸ்தாபகர்களோ அல்லது பின்வந்தவர்களோ எப்போதும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அத்தகைய உறவுகளைத் தொடருமாறு முன்னையவர்களால் பின்னையவர்கள் அறிவுறுத்தப்படவுமில்லை.

'ஜமாஅத்தே இஸ்லாமி' என்பது 'இஸ்லாமிய அமைப்பு' என்ற சாதாரண பொருளைத் தருகின்றதொரு பிரயோகமாகும் என்பதும் இங்கு நோக்கத்தக்கது.

கேள்வி: இந்திய துணைக் கண்டத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஜமாஅத்தே இஸ்லாமி என்ற அமைப்பால் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஆரம்ப கர்த்தாக்கள் கவரப்படவில்லை என்று கூறுகின்றீர்களா?

பதில்: ஆம், இந்திய துணைக் கண்டத்தில் செயற்பட்டு வந்த ஜமாஅத்தே இஸ்லாமி என்ற அமைப்பின் இலட்சியங்கள், வழிமுறைகள், செயற்பாடுகள் மற்றும் கட்டமைப்பு, சட்டதிட்டங்கள் என எதனையும் அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை என்றுதான் கூறவேண்டும். எனினும் மௌலானா மௌதூதி அவர்களின் நூல்கள் சிலவற்றால் கவரப்பட்டார்கள் என்பது சரியானதாகும். மௌலானா மௌதூதியின் நூல்களில் பெரும்பாலானவற்றை அவர்கள் இலங்கைக்கு அறிமுகம் செய்யவுமில்லை; வெளியிடவுமில்லை. இலங்கைச் சூழலுக்குப் பொருத்தமானதொரு சுயாதீனமான அமைப்பாக ஜமாஅத் செயல்பட வேண்டும் என்பதிலேயே அவர்கள் கவனம் செலுத்தியிருக்கின்றார்கள்.

கேள்வி: ஜமாஅத்தே இஸ்லாமி ஓர் அரசியல் சார் அமைப்பு என்று பலரும் கருதுகின்றார்கள். இது பற்றி உங்களது கருத்து என்ன?
பதில்: ஜமாஅத்தே இஸ்லாமி என்ற பெயருடன் ஏனைய நாடுகளில் செயல்படுகின்ற அமைப்புகளோடு ஒப்பிட்டே அவர்கள் அவ்வாறு கூறுகிறார்கள் போலும். முhற்றமாக இது ஆய்வு செய்து ஆதாரங்களோடு முன்வைக்கின்ற கூற்றல்ல. 'ஜமாஅத் கட்சி அரசியலுக்கு அப்பாலிருந்தே செயற்படும்' என்ற விதி அதன் யாப்பிலிருக்கிறது. கடந்த 66 வருடங்களாக நேரடி அரசியல் ஈடுபாட்டைத் தவிர்த்து வரும் ஓர் அமைப்பாக இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி இருந்த போதிலும் இந்த வினாவை சிலர் தொடுத்துக் கொண்டே இருக்கிறார்;கள். முன்முடிவுகளோடு செயல்படுபவர்களது பார்வையில் ஏற்படும் ஒரு பிரச்சினையே இதுவாகும்.

கேள்வி: இலங்கையில் தீவிரவாதத்தைப் பரப்பும் 40 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் அமைப்புகள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இது பற்றி நீங்கள் கூற விரும்புவது என்ன?

பதில்: முதலில் தீவிரவாதம் என்றால் என்ன என்பது வரைவிலக்கணப்படுத்தப்படல் வேண்டும். அதன் பிறகு தீவிரவாதத்தைப் பரப்புகிறவர்கள் யார், தீவிரவாதத்திற்கு எதிரானவர்கள் யார் என்பது பற்றிப் பேசலாம்.

அல்கைதா, ஐ.எஸ்.ஐ.எஸ், LTTE மற்றும் ஸஹ்ரான் தீவிரவாதக் குழுவினர் என்போரால் முன்னெடுக்கப்பட்ட வெளிப்படையான தீவிரவாதம் ஒன்று இருக்கிறது. அதனை இலங்கை முஸ்லிம் சமூகமும் அதிலுள்ள முஸ்லிம் அமைப்புக்களும் வெளிப்படையாகவே மறுத்திருக்கின்றன் நிராகரித்திருக்கின்றன.

தற்போது 40 அமைப்புக்களின் தீவிரவாதம் ஒன்று பேசப்படுகின்றது. இது மயக்கத்தையும் சந்தேகத்தையும் உருவாக்குகின்றது. இது ஒரு குழப்பமான, நம்பிக்கையற்ற சூழலைத் தோற்றுவிக்கிறது. அபிவிருத்தி அர்த்தத்தில் இது நாட்டுக்கு நல்லதல்ல என்பதையே எங்களால் கூற முடியும்.

கேள்வி: யூசுப் அல்கர்ளாவி என்ற அறிஞர் தீவிரவாதத்துக்கு துணை போகின்றவர் என்று அடையாளப்படுத்தப்படுகின்றார். அவர் போன்ற அறிஞர்களே உங்களை வழிநடத்துவதாகக் கூறப்படுகின்றது. இதன் உண்மைத் தன்மை என்ன?

பதில்: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி எந்த ஓர் அறிஞரையும் தனக்கு வழிகாட்டியாக எடுத்துக் கொள்ளவில்லை. எனினும், முஸ்லிம் உம்மத்தில் தொன்றுதொட்டு தோன்றிய அறிஞர்கள் அனைவரையும் இந்த உம்மத்தின் புலமைச் சொத்தாக ஜமாஅத் கருதுகின்றது. அவர்களை மதிக்கின்றது; அவர்களைப் படிக்கவும் செய்கிறது. தப்லீக் ஜமாஅத் அறிஞர் மௌலானா அபுல் ஹஸன் அலி நத்வி, ஸலபி அறிஞர் இமாம் இப்னு தைமியா, சூபி அறிஞர் இமாம் கஸ்ஸாலி போன்றோரும் மௌலானா மௌதூதி மற்றும் யூசுப் அல் கர்ழாவி போன்றோரும் எமக்கு சமமானவர்களே. நாம் அவர்கள் அனைவரையும் படிக்கின்றோம்.

எனினும், அவர்கள் கூறுவதையெல்லாம் நாங்கள் எடுத்துக் கொள்வதில்லை. அறிஞர்களையோ, அவர்களது கூற்றுக்களையோ பின்பற்றுவதற்கான பிக்ஹ் விதி ஒன்றின் அடிப்படையிலேயே நாம் அவர்களுடைய எழுத்துக்களையும் கருத்துக்களையும் கையாள்கிறோம்.

'காலங்கள், சூழல்கள், வழக்காறுகள், பிரச்சினைகள் மாறும்போது சட்டங்கள் மாறும்' என்பதே அந்த விதி. அந்த விதிக்கமைய யாரைப் படித்தாலும் எமது சூழலுக்கு பொருத்தமானவற்றையே நாம் அவர்களிடமிருந்து எடுத்துக் கொள்கின்றோம். அதனால் ஒரு அறிஞரை முழுமையாகப் பின்பற்றும் நிலைப்பாட்டில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி இல்லை.

கேள்வி: ஜமாஅத்தே இஸ்லாமி ஒரு தொண்டர் இயக்கம் என்ற வகையில் அது தனக்கான உறுப்பினர்களை சமூகத்தில் இருந்து பெற்றுக் கொள்கிறது. அவர்கள் ஜமாஅத்தின் அங்கத்தவர்களாக இருக்கின்றார்கள். இந்த நடைமுறை பற்றிச் சொல்ல முடியுமா? இதற்கு எதிராகவும் விமர்சனம் இருக்கிறது.

பதில்: மானுட தர்மத்துக்குப் பொருந்தாத ஒரு வழியில் செல்வதற்காக தொண்டர்கள் இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள் என்பது வேறு; மார்க்கமும் நன்மக்களும் அங்கீகரிக்கின்ற நற்பணிகளுக்காக விருப்பத்தோடு வருகின்றவர்களை இணைத்துக் கொள்வது வேறு. இந்த இரண்டாவது நடைமுறையையே ஜமாஅத் பின்பற்றுகிறது.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியில் இணைந்த தொண்டர்கள் மார்க்கத்தின் பெயராலோ, இயக்கத்தின் பெயராலோ முஸ்லிம் சமூகத்துடனோ, பிற சமூகங்களுடனோ பொருதுவதற்கு சென்றதொரு வழமை இருந்ததில்லை. அவ்வாறு செல்லும் முனைப்பு ஒரு தொண்டரிடம் தென்பட்டால் உடனடியான அது குறித்து ஜமாஅத் கவனம் செலுத்தும். அந்த தொண்டரைத் திருத்துவதற்கு தன்னாலானவரை அது முயற்சி செய்யும். முடியாதவிடத்து அவரை ஜமாஅத்தின் அங்கத்துவத்திலிருந்து நீக்கிவிடும்.

கேள்வி: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி பன்மைத்துவத்தை அங்கீகரிக்கின்றதா?
பதில்: பன்மைத்துவம் ஒரு யதார்த்தமாகும். யதார்த்தங்களை நிராகரிக்க முடியாது. குர்ஆனும் யதார்த்தங்களை பல இடங்களில் சுட்டிக்காட்டியிருக்கின்றது. அவற்றை அழகிய முறையில் கையாளுமாறும் கட்டளையிடுகிறது.

உதாரணமாக, 'அல்லாஹ் நாடியிருந்தால் உங்கள் அனைவரையும் (மலக்குகள் போன்று ஒரே இயல்பு கொண்ட) ஒரே சமூகமாக ஆக்கி இருப்பான். உங்களை வௌ;வேறு சமூகங்களாக அவன் ஆக்கி இருப்பதன் நோக்கம் உங்களுக்குத் தந்தவவற்றை வைத்து உங்களை சோதிப்பதற்கே. (அந்த சோதனையில் நீங்கள் வெற்றிபெற வேண்டுமாயின்) நன்மைகள் செய்வதில் நீங்கள் போட்டி போடுங்கள் (வேறுபாடுகளை எதிர்கொள்வதற்கு தீமைகளின் வழியில் செல்லாதீர்கள்)' (5:48)

பன்மைத்துவத்தை நன்மைகளின் வழியில் அணுகுமாறு அல்குர்ஆன் போதிக்கின்றது. எனவே, மற்றொரு வழியில் நாம் அணுக முடியாது. அணுகினால் அது இஸ்லாமுமல்ல.

கேள்வி: எனினும், ஜிஹாத் பற்றிய கண்ணோட்டம் இதற்கு நேர் எதிரானதாக இருக்கிறது. பன்மைத்துவத்தை இல்லாமல் செய்வது ஜிஹாதின் நோக்கமாகும் என்ற கருத்தை இன்று அதிகமானோர் கொண்டிருக்கிறார்கள். இதுபற்றி...?

பதில்: பன்மைத்துவத்தை இல்லாமல் செய்வதற்கு ஜிஹாத் கடமையாக்கப்பட்டதாக ஒருவர் கருதினால் அவர் இஸ்லாம் பற்றிய விளக்கம் இல்லாதவர் என்பதே பொருள். ஜிஹாத் கடமையாக்கப்பட்ட சூழல் பற்றி அறியாத நிலையில்தான் அவர் அத்தகையதொரு முடிவுக்கு வர முடியும்.

பொறுப்பு வாய்ந்ததோர் அரசாங்கம் நாட்டையும் மக்களையும் வெளி அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதற்காக மேற்கொள்கின்ற இராணுவ செயல்பாட்டே இஸ்லாமிய பரிபாஷையில் 'ஜிஹாத்' எனப்படுகிறது. அதுதவிர, ஒரு நாட்டின் உள்ளூர்வாசிகள் தங்களுக்கிடையே இருக்கின்ற வேறுபாடுகளை முரண்பாடுகளாக மாற்றி ஒருவரோடுருவர் மோதுவதற்கோ அல்லது ஒரு சாராருக்கெதிராக மற்றொரு சாரார் யுத்தம் செய்வதற்கோ சூட்டப்பட்ட பெயரல்ல 'ஜிஹாத்'. இந்தப் பாடத்தை நபி (ஸல்) அவர்களது வாழ்க்கை நமக்கு கற்றுத் தருகிறது.

நபி (ஸல்) அவர்கள் மக்காவில் பதின்மூன்று வருடங்களும் மதீனாவில் பத்து வருடங்களும் பணி செய்திருக்கிறார்கள். மக்காவில் ஆட்சி அதிகாரம் நபிகளாரை எதிர்த்து நின்றவர்கள் வசம் இருந்தது; மதீனாவில் ஆட்சி அதிகாரம் நபி (ஸல்) அவர்கள் கைவசம் இருந்தது.

யுத்தம் கடமையாக்கப்பட்டது மதீனாவில் ஆகும். அதாவது, நபி (ஸல்) அவர்கள் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றிருந்த நிலையிலேயே அது கடமையாக்கப்பட்டது. அதற்கான காரணம், ஆட்சிக்குட்பட்ட பிரதேசத்தையும் மக்களையும் வெளி அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பதே.

ஆட்சியதிகாரம் இல்லாதிருந்த மக்கா சூழலில் நபிகளாரும் அன்னாரது தோழர்களும் சொல்லொணாத் துயரங்களுக்கு முகம்கொடுத்து வந்தபோதிலும் அங்கு யுத்தம் செய்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.

துயரங்கள் தாங்க முடியாமல் யுத்தம் செய்வதற்கான அனுமதியை ஒருமுறை நபித்தோழர்கள் நபிகளாரிடம் வந்து கேட்டார்கள். நபிகளார் (ஸல்) அதற்கு இணங்கவில்லை. துயரங்களை சகிக்க முடியாவிட்டால் ஆபிரிக்க நாடான ஹபஷாவுக்கு செல்லுமாறும் அமைதியான சூழல் ஏற்பட்டதன் பின்னர் திரும்பி வருமாறும் கூறினார்கள்.

பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் ஒன்றின் கடமையே ஜிஹாத் என்பது இதிலிருந்து விளங்குகின்றது. பன்மைத்துவத்தை இல்லாமல் செய்வதற்கான ஆயுதமாக ஜிஹாத் ஒருபோதும் இருந்ததில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -