தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய நிவாரணப்பொருட்கள் விடயத்தில் அரசாங்கமும் ஆளுந்தரப்பில் அங்கம் வகித்துள்ளவர்களும் துரோகமிழைத்து விட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.
நோட்டன் , ஒஸ்போன் பகுதியில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய முன்னணியின் நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர் எம்.ராமச்சந்திரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதிச் செயலாளர் சோ.ஸ்ரீதரன் மஸ்கெலிய பிரதேசசபை உறுப்பினர் சுரேஷ், தொ.தே.ச அமைப்பாளர்களான நந்தகோபால், சுப்பரமணியம் ,தொழிலாளர் தேசிய முன்னணியின் ஒஸ்போன், சமர்வில், அமைப்பாளர்களான சுரேஷ், மூர்த்தி சங்கத்தின் டிக்கோயா பணிமனை உத்தியோகஸ்தர்கள் உட்பட சமர்வில் வட்டாரத்திற்குட்பட்ட விளையாட்டு கழகங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
கொரோனா தொற்று அபாயத்தினால்; கடந்த இரண்டரை மாத காலமாக நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டிருந்தது. இந் நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கமும் தோட்ட நிர்வாகமும் இணைந்து 3000 ரூபாய் பெறுமதியான நிவாரண பொருட்கள் வழங்குவாகவும் இதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸே பெற்றுக்கொடுப்பதாகவும் அறிவித்தனர்.
இதற்கமைவாக, தோட்ட நிர்வாகம் 1500 ரூபாவையும் அரசாங்கம் 1500 ரூபாவையும்; வழங்குவதாகவும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 1500 ரூபா மீள் செலுத்த வேண்டியதில்லை எனவும் தோட்ட கம்பனிகளினால் வழங்கப்படும் 1500 ரூபாய் மட்டுமே தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து மீளப் பெறப்படும் என்று அறிவித்தனர்.
ஆனால், இன்று நடந்தது என்ன? கடந்த இரண்டு மாத சம்பளத்தில் தலா 750 ரூபா படி 1500 ரூபாய் இம்மாத சம்பளத்தில் 1500 ரூபாய் என மொத்தமாக 3000 ரூபா தொழிலாளர்கள் சம்பளத்தில் அறவிடப்பட்டுள்ளது.
இது தொழிலாளர்களுக்கு செய்த மாபெரும் துரோகம். அதே போல நாட்டிலுள்ள அனைத்து சமூகத்தினருக்கும் 5000 ரூபாய் நிவாரணத் தொகை அரசாங்கம் வழங்கியது. இதையும் கூட நாங்கள் தான் ஜனாதிபதியுடன்; பேசி பெற்றுக்கொடுத்தோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்தது.
ஆனால், அதிலும் கூட ஒன்றறை இலட்சம் தோட்டத் தொழிலாளர்கள் குடும்பங்கள் மட்டும் புறக்கணிக்கப்பட்டிருந்தன. நிவாரணம் வழங்க தெரிவு செய்யப்பட்ட வேண்டிய பயனாளர்கள் தொடர்பான அரசாங்கத்தின் சுற்றறிக்கையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.
எனவே இவ்வாறு எமது சமூகத்தை வைத்து அரசியல் வியாபாரம் செய்பவர்களை மக்கள் ஓரம் கட்ட வேண்டும். கடந்த ஐந்தாண்டில் தமிழ் முற்போக்கு கூட்டணி செய்த சேவைகளை புத்தகமாக அச்சிட்டு இன்று உங்கள் கரங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம். செய்த சேவைகளை முன்வைத்தே நானும் தலைவர் திகாம்பரமும் ,இராதாகிருஸ்ணனும் வாக்கு கேட்கின்றோம். அதை பார்த்து நீங்கள் தெரிவு செய்யுங்கள்.
வாக்கு கேட்டு வருபவர்களிடம் செய்த வேலைத்திட்டங்களை பட்டியலிடச் சொல்லுங்கள். பின்னர் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்று தீர்மானியுங்கள் என்றார்.