ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட பொதுத் தேர்தல் வேட்பாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான பாலித்த தெவரப்பெரும மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றிருக்கிறது என்று மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.
மத்துகம – வேகந்தல பிரதேசத்தில் குடிநீர் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதை கண்காணிப்பு செய்வதற்காக குறித்த இடத்திற்கு சென்ற அவர், அத்திட்டத்துடன் சம்பந்தப்பட்ட நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டிருக்கின்றார்.
இதனிடையே அவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவசர சத்திரசிகிச்சைக்கும் அவர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் கூறுகின்றன.
மத்துகம பொலிஸார் இதுகுறித்த மேலதிக விசாரணைகளை நடத்திவருகின்றனர்.