வாழைச்சேனை வட்டார வன திணைக்களத்திற்கு சொந்தமான பொண்டுகள்சேனை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களும், ஒரு உழவு இயந்திரமும் ஞாயிற்றுக்கிழமை மாலை கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் தெரிவித்தார்.
பொண்டுகள்சேனை பகுதியில் வாழைச்சேனை விசேட அதிரடிப் படையினர் மற்றும் வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் போது மணல் அகழ்வில் ஈடுபட்ட நிலையில் மூன்று சந்தேக நபர்கள் மற்றும் ஒரு உழவு இயந்திரம்; சுற்றிவலைப்பில் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரையும் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் ஒருவருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பினையில் மூன்று சந்தேக நபர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் தெரிவித்தார்.
வாழைச்சேனை வட்டார வன பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் சட்டவிரோத மரம் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், அதனை தடுப்பதற்கு தனது தலைமையில் வட்டார வன உத்தியோகத்தர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் மேலும் தெரிவித்தார்.