ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இதயமாக இருக்கின்ற அம்பாறை மாவட்டத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடந்த பொதுத் தேர்தலின்போது, முதற் தடவையாக அம்பாறை மாவட்ட மூன்று தொகுதிகளிலும் சுமார் 33 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்று ஒரு உச்சத்தை எட்டியது.
இந்த உச்சமான நிலையைக் கண்ட, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகிக்கின்றவர்களை மாத்திரமல்லாமல் அதன் தலைமையையும், ஏனைய கட்சிகளையும் ஆட்டம் காணச் செய்ததுடன் சிந்திக்கவும் செய்தது.
அம்பாறை மாவட்டத்தைப் பொருத்தமட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தனது ஆதிக்கத்தை மட்டுமல்ல எங்களை வெற்றிகொள்ள யாருமில்லை என்று மார்புதட்டிக் கொண்டிருந்தவர்களை கதி கலங்கச் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த மிக முக்கிய 3 நபர்கள் உள்ளனர். அவர்களின் அயராத உழைப்பும், முழு நேர அர்ப்பணிப்புடனான விசுவாசமான செயற்பாடுகளுமே அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வெற்றிக்கான காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.
அந்த வகையில், அம்பாறை மாவட்டத்தில் ஒரு ஆசனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சிந்தனையில் செயற்பட்டவரும் சாய்ந்தமருதுக்கு தனியான சபை ஒன்று தேவை என்ற விடயத்தை முதன் முதலில் அம்மக்களுக்கு உணர்வு ரீதியாக எடுத்துச் சொல்லி செயற்பட்ட சாய்ந்தமருதைச் சேர்ந்த கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிறாஸ் மீரா சாஹிப், சம்மாந்துறையைச் சேர்ந்த தென்கிழக்கு பல்கலைக் கழக முன்னாள் உபவேந்தர் கலாநிதி எம்.ஐ.எம்.இஸ்மாயில் மற்றும் பொத்துவிலைச் சேர்ந்த எஸ்.எஸ்.பி. மஜீட் ஆகியோர்களின் பாத்திரமே அம்பாறை மாவட்ட வெற்றிக்கு மிக முக்கிய அடித்தளமாக அமைந்தது.
இந்த வெற்றிக்காக உழைத்தவர்களில் ஒருவர் சம்மாந்துறையைச் சேர்ந்த தென்கிழக்கு பல்கலைக் கழக முன்னாள் உபவேந்தர் கலாநிதி எம்.ஐ.எம்.இஸ்மாயில் தேசிய காங்கிரஸ் கட்சியின் பக்கம் தாவிவிட்டார். மற்றய இருவரும் வாய் மூடி மெளனிகளாக இருக்கின்றார்கள். அதற்கான காரணம் ஒரு புரியாத புதிராக இருக்கின்றது.
இவ்வாறு அவர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இருக்குமாக இருந்தால், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் இம்முறை தேர்தல் வெற்றிப் பயணம் என்பது ஒரு கேள்விக் குறியானதாக அமையும் என்பதில் ஒரு மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.
கடந்த தேர்தலின்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மிகச் சரியான 10 வேட்பாளர்களை களமிறக்கியதுடன் கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிறாஸ் மீரா சாஹிப் போன்ற முக்கிய பாத்திரம் வகித்தவர்கள் சிலர் கட்சிக்கும், அதன் தலைமைக்கும் ஆதரவாக செயற்பட்டனர். அதன் காரணத்தால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒரு உச்சத்தை அடைய ஏதுவாக அமைந்தது. ஆனால் இம்முறை நடைபெறப்போகின்ற பொதுத் தேர்தலில் களமிறங்கியுள்ளவர்களில் சிலர் மக்கள் மத்தியில் செல்வாக்கு அற்றவர்களாகவும், கட்சியின் நடவடிக்கைகளில் அதீத அக்கறையின்றி வாக்கு வங்கி இல்லாதவர்களாகவே காணப்படுகின்றனர்.
எது எவ்வாறாயினும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் தெரிவு செய்யும் கூட்டம் நிந்தவூர் பிரதேச சபையின் கூட்ட மன்டபத்தில் முன்னாள் அமைச்சரும் தலைவருமான றிஷாட் பதீயுத்தின் தலைமையில் இடம்பெற்றபோது, அதில் அம்பாறை மாவட்ட உயர்பீட உறுப்பினர்கள், அமைப்பாளர்கள், மத்திய குழுத் தலைவர்கள் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள முன்னாள் முதல்வர் கலாநிதி சிறாஸ் மீரா சாஹிப் போன்ற வேட்பாளர்களை தெரிவு செய்தனர். ஆனால் வேட்பு மனுத் தாக்கலின்போது இவ்வாறானவர் அதிலிருந்து ஒதுங்கியதாகவும், ஒதுக்கப்பட்டதாகவும் மக்கள் மத்தியில் ஒரு பேசு பொருளாக பேசப்பட்டது.
சாய்ந்தமருதைப் பொருத்தமட்டில் கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிறாஸ் மீரா சாஹிப் என்பவருக்கு மிக அதிகமான செல்வாக்கு அங்கிருக்கின்றது. கடந்த பொதுத் தேர்தலில் சாந்தமருதில் மட்டும் சுமார் 6000 வாக்குகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு தனி நபராக நின்று பெற்றுக்கொடுத்தார். அதையும் தான்டி அம்பாறை மாவட்ட 3 தொகுதிகளிலும் வாக்குகளை பெற்றுக்கொடுத்தவர். அவருக்கு மக்கள் செல்வாக்கு அம்பாறை மாவட்டம் முழுவதும் இருப்பதை நிருபித்துக்காட்டியும் இருக்கின்றார்.
ஏனென்றால், அவரிடம் யார் எந்த உதவியைக் கேட்டுச் சென்றாலும் அதை தட்டிக் கழிக்காமல் பிரதேச பாகுபாடின்றி அவரின் சொந்தப் பணத்தின் மூலம் உதவிகளை செய்து கொடுக்கும் ஒருவராகவும் செயற்பட்டு வருகின்ற அதேவேளை, ஒவ்வொரு வருடமும் வறிய குடும்பங்களுக்கு தேவையானளவு வாழ்வாதார உதவிகள், மின்சாரம் மற்றும் நீர் இணைப்பு வசதிகள், சுய தொழிலை மேற்கொள்வதற்கான வசதி வாய்ப்புக்கள் போன்ற பல விடயங்களைச் செய்து கொடுக்கும் ஒரு மனித நேயமுள்ளவராக இருந்து வருகின்றார் என்பதே, அவர் மீது மக்கள் வைத்துள்ள அன்பின் செல்வாக்காகும்.
இம்முறை நடைபெறப் போகின்ற பொதுத் தேர்தல் நடவடிக்கைகளில் எவ்வித ஈடுபாடுகளின்றி ஏன் வாய் மூடி மெளனமாக இருக்கின்றார் என்று இவரை நேசிக்கின்ற விஷேடமாக சாய்ந்தமருது மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றன. சிறாஸ் மீரா சாஹிபின் மெளனத்தால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு சாய்ந்தமருதில் மட்டும் கிடைக்கப் போகின்ற சுமார் 6000 வாக்குகளை இழப்பது மட்டுமின்றி அம்பாறை மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களிலும் கிடைக்கின்ற வாக்குகளும் இல்லாமல் போவதற்கான சாத்தியமே மிக அதிகமாகக் காணப்டுகின்றது.
இந்நிலைமை தொடர்ந்தும் செல்லுமாக இருந்தால் இம்முறை பொதுத் தேர்தலில் மட்டுமல்ல மாகாண சபைத் தேர்தலிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி பாரிய பின்னடைவையே எதிர் நோக்கும் என்பது அதன் வெளிப்பாடாக இருக்கின்றது.