அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில், அடுத்த மாத தொடக்கத்தில் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொடும் என தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில், ஒருபுறம் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், அதனால் ஏற்படும் உயிரிழப்பும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டில் பல மாகாணங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பில் மூன்றில் ஒருபங்கு பாதிப்பைச் சந்தித்துள்ள நியூயார்க்கிலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அரசுக்கு அளித்துள்ள அறிக்கை ஊடகங்களில் கசிந்துள்ளது. அந்த அறிக்கையில் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
தற்போது அமெரிக்காவில் 12 லட்சத்து 13 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 70 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் தினந்தோறும் சுமார் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதுடன், சராசரியாக 2000 பேர் உயிரிழந்து வருகின்றனர்.
