புகையிலைப் பாவனை - கட்டுப்படுத்தல் பொறிமுறையும் சவால்களும்.- ஒரு சட்டவியல் நோக்கு


சட்டத்தரணி Z.A. அஷ்ரப் எம்.ஏ. (கொழும்புப் பல்கலைக்கழகம்)

31.05.2020 “புகையிலையற்ற உலகு” தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையை ஒட்டி இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகின்றது.

31.05.2020 புகையிலையற்ற உலகு தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகையதொரு தினத்தைப் பிரகடனம் செய்வதற்கான நோக்கம் மற்றும் அதன் தொனிப்பொருள் என்பவற்றை நாம் அவதானிக்கும்போது அத்தினத்தின் முக்கியத்துவம் உணரப்படுகின்றது.

புகையிலைக் கம்பனியின் சதியிலிருந்து இளைஞர்களைப் பாதுகாத்து புகையிலை மற்றும் நிக்கோட்டின் பாவனைக்கெதிராக அவர்களை வலுவூட்டுவதற்கான ஒரு செய்தியை வழங்குவதே இத்தினத்தின் பிரதான நோக்கமாகும்.

சவால்கள் 

சிறுவர்களும் இளைஞர்களுமே புகையிலைக் கம்பனியின் பிரதான இலக்காகும். எனவே, சிகரட் பாவனை குறித்த கவர்ச்சிகரமான விளம்பரங்களுக்காகப் புகையிலைக் கம்பனியானது வருடாந்தம் 1480 பில்லியன் ரூபாய்களைச் செலவு செய்கின்றது. புகையிலைக் கம்பனியானது இளைஞர்களை ஈர்ப்பதற்காக மட்டும் வருடாந்தம் 8 பில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவு செய்கின்றது. சமூக வலைதளங்களிலும் ஏனைய ஊடகங்களிலும் சிகரட் பாவனை விளம்பரத்திற்காகப் பலரை அது கொடுப்பனவு ஒப்பந்த அடிப்படையில் பணிக்கமர்த்தியுள்ளது. புகையிலைக் கம்பனியின் வியாபாரம் சார் உத்திகளையும், காய் நகர்த்தல்களையும் உணராத இளம் தலைமுறையினர் பலர் இன்று சிகரட் கம்பனியின் அடிமைகளாகவும் அபிமானிகளாகவும் மாறியிருப்பது கண்கூடு. எந்த சமூகத்தின் இளைஞர்கள் ஆரோக்கியம் மிக்கவர்களாகத் திகழ்கின்றார்களோ அந்த சமூகமும் ஆரோக்கியம் மிக்கதாக இருக்கும். எந்த சமூகத்தின் இளைஞர்கள் ஆரோக்கியம் குன்றி வீரியமிழந்து போவார்களோ அந்த சமூகமும் நலிவடைந்த, உயிர்த்துடிப்பற்ற சமூகமாக மாறி விடும். புகையிலைக் கம்பனிக்குத் தனது வணிக நலன் சார்ந்த அடைவுகளைத் தவிர வேறெந்தக் கவலையும் கிடையாது. இது மிக ஆபத்தான நிலையாகும். இந்த நிலையிலிருந்து எமது இளம் சமுதாயத்தினரை நாம் பாதுகாத்து அவர்களை வலுவூட்டுவது எமது தார்மீகக் கடமையும் பொறுப்புமாகும்.

சமூக, பொருளாதார, சுகாதார மற்றும் சூழலியல் விளைவுகள்

புகையிலைப் பாவனையின் சமூக, பொருளாதார, சுகாதார மற்றும் சூழலியற் தாக்கங்கள் உணர்த்தப்படுவதும் உணரப்படுவதும் காலத்தின் தேவையாக உள்ளது. இலங்கையில் சிகரட் பாவனையினால் நாளொன்றுக்கு 55 அகால மரணங்கள் பதிவாவதோடு வருடமொன்றுக்கு 20,000 பேரின் உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி உலகளாவிய ரீதியில் புகையிலைப் பாவனையினால் வருடாந்தம் 8 மில்லியன் மக்கள் அகால மரணமடைகின்றனர். இத்தொகையில் 9 இலட்சம் பேர் புகை பிடிப்பவர்களின் அருகிலிருந்து அவர்கள் வெளிவிடும் புகையை சுவாசித்ததன் விளைவாகவே மரணமடைகின்றனர் என்பது கவலைக்குரிய விடயம் என்பதோடு பாரிய அதிர்ச்சியளிக்கும் தகவலாகும். அற்ககோல் மற்றும் ஏனைய போதைப்பொருள் தொடர்பிலான தகவல் நிலையத்தின் அண்மைய ஆய்வின் படி எமது யுவதிகள் சிகரட் பாவனையாளர்களை மணந்து கொள்வதற்கு மறுப்புத் தெரிவிக்கின்றனர். சிகரட் பாவனையாளர்கள் எத்தனை தடவை குளித்தாலும் எத்தகைய வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொண்டாலும் அவர்களது மேனியில் கமளும் சிகரட் துர்வாடை ஒரு போதும் நீங்குவதில்லை. இது இல்லற வாழ்க்கைக்கு இடையூறாக அமைவதோடல்லாமல் கருவிலிருக்கும் சிசுவையும் பாதிக்கும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். அவ்வாறே அன்றாடம் கூலி வேலை செய்யும் ஒரு கூலித் தொழிலாளி புகை பிடிப்பதனால் அவரது உடலாரோக்கியத்திற்குக் குந்தகம் ஏற்படுவதோடு அவரது குடும்பமும் சுகாதார ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கடுமையான பாதிப்புக்களுக்கு முகம் கொடுக்கின்றன. அது மாத்திரமின்றி பாடசாலை செல்லும் மாணவர்கள் புகைப்பழக்கத்திற்கு ஆளாவதால் அவர்களது கல்வி வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு பாடசாலையின் தூய சூழலும் மாசுபடுத்தப்படுகின்றது. அத்தோடு புகை பிடிப்பவர்களோடு சகவாசம் வைத்திருக்கும் ஏனைய மாணவர்களும் இத்தீய பழக்கத்தின் பால் தூண்டப்படுகின்றனர். சமூகத்திலே விவாகரத்து அதிகரிப்பதற்கான மற்றொரு காரணியாகவும் புகைத்தல் மாறியுள்ளது.

தேசிய மற்றும் சர்வதேச பொறிமுறை முன்னெடுப்புகள்

அண்மைக்காலமாகப் பல்தேசிய புகையிலைக் கம்பனிகள் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி எமது இளைஞர்களை அதன் பால் ஈர்க்க முயன்று வருகின்றன. சமூக வலை தளங்களூடாகவும், ஏனைய ஊடகங்கள் மூலமாகவும் சிகரட் புகைப்பதை நாகரீகமானவொரு பழக்கமாகச் சித்தரித்தல், சிகரெட்டின் விலையினை அதிகரிக்காதிருத்தல், சாதாரண கூலித் தொழிலாளியும் அதனை நுகரும் வண்ணம் தரம் குறைந்த தனி சிகரட்களை விற்பனை செய்தல் என்பன அத்தகைய உத்திகளுள் சிலவாகும். இத்தகைய சவால்களை வென்று இளம் சமுதாயத்தினரைப் பாதுகாப்பதற்காக தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் பல முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2003 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் புகையிலைப் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்காக சர்வதேச சமவாயம் (Framework Convention on Tobacco Control) ஒன்றைக் கைச்சாத்திட்டது. இது வரை இலங்கை உட்பட 168 நாடுகள் இச்சமவாயத்திலே கைச்சாத்திட்டுள்ளன. மேற்படி குறிக்கோளினை எய்துவதற்காக இலங்கையில் 2006 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபைச் சட்டம் (National Authority on Tobacco and Alcohol Act No. 27 of 2006) கொண்டு வரப்பட்டது.

கட்டுப்பாட்டுக்கான முன்மொழிவுகள்

புகையிலைப் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கான மற்றும் சில முன்மொழிவுகள் கீழ்வருமாறு,

01) சமூக வலை தளங்களில் புகையிலைப் பாவனைக்காக விளம்பரம் செய்பவர்களுக்கெதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 2006 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபைச் சட்டத்தின் பிரிவு 35 (1) இது பற்றி ஏற்பாடு செய்துள்ளது.

02) 2006 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபைச் சட்டத்திலே (திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.

03) புகையிலைக் கம்பனியின் விளம்பரப்படுத்தலைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் சட்ட ஏற்பாடுகள் அதிகரிக்க வேண்டும்.

04) சிகரட்டின் விலையினை அதிகரிக்க வேண்டும் (உண்மையில் தற்போது சிகரட் ஒன்றின் விலை 90 ரூபாவாக இருத்தல் வேண்டும். ஆனால், அதனை 60 ரூபாவிற்கே விற்கின்றனர்.

05) சிகரட் பக்கற்றுக்களிலே எச்சரிக்கை விளம்பரத்தைத் தவிர வேறெந்த விளம்பரங்களும் இருக்கக் கூடாது.

06) தனி சிகரட்களை விற்க முடியாது எனச் சட்டமாக்கப் படல் வேண்டும்.
சுருங்கக் கூறின் புகையிலைப் பாவனைக்கெதிரான கடுமையான சட்ட ஏற்பாடுகளைக் கொண்டு வருவது மட்டுமன்றி அவற்றைச் சரிவர நடைமுறைப்படுத்துவதோடு ஏனைய வலுவூட்டல் முன்னெடுப்புக்களையும் மேற்கொள்வதன் மூலம் புகையிலைப் பாவனையைக் கணிசமான அளவு கட்டுப்படுத்த முடியும் எனலாம்.

(மேற்படி கட்டுரை உள்ளடக்கியுள்ள தரவுகளுள் சில அற்ககோல் மற்றும் ஏனைய போதைப்பொருள் தொடர்பான தகவல் நிலையத்தின் முகனூல் மற்றும் இணைய தளத்திலிருந்து பெறப்பட்டவை).
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -