அளுத்கமை தர்கா நகர் பகுதியில் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த மூளை வளர்ச்சி குன்றிய 14 வயது சிறுவனை பொலிஸார் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் கடந்த 25ம் திகதி பதிவாகியுள்ளது.இது தொடர்பான ஆதாரபூர்வமான சீசீ டீவீ காணொலிகளும் வைரலாகியுள்ளது.குறித்த சிறுவனுக்கு வயது 14 எனினும் 6 வயது குழந்தையின் மூளை வளர்ச்சியே இருப்பதாக வைத்தியர் தனக்கு தெரிவித்ததாக அச் சிறுவனின் தந்தை கூறினார்.
கடந்த 25ம் திகதி மாலை 4 ற்கும் 5மணிக்கும் இடையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.அளுத்கமை தர்கா நகர் அம்பஹாகந்தி சந்தியில் உள்ள பொலிஸ் காவலரணில் அந்த பாதையில் வரக்கூடிய வாகனங்களை மும்முரமாக பரிசோதிக்கின்றனர்.இந் நிலையில் குறித்த சிறுவன் சைக்கிளில் வந்து அங்கிருந்த மீன் கடையொன்றின் சுவரில் மோதியுள்ளான்.இந் நிலையில் உடனே விரைந்த சிவில் உடையில் இருந்த பொலிஸாரும் ,பாதையின் மறுபக்கத்தில் இருந்த பொலிஸாரும் குறித்த சிறுவனை பிடிக்கச் செல்கின்றனர் அதன் போது குறித்த சிறுவன் தன்னை தானே விடுவித்துக்கொள்ள எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் பாதையின் மறுபக்கத்திற்கும் சிறுவன் அழைத்து வரப்பட்டு சிறுவன் தன்னை தானே விடுவிக்க போராட பொலிஸாரும் அவனை பிடித்துக் கொண்டே இருந்திருக்கின்றனர்.இந் நிலையில் குறித்த பாதையில் முச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் ஒரு கயிற்றை எடுத்து சிறுவனின் கைகளை கட்டியுள்ளார்.பொலிஸாரிற்கு விசாரிக்க அனுமதி இருந்தாலும் அந்த இடத்திற்கு வருகை தந்த ஒரு சிலரும் குறித்த சிறுவனை தாக்கியுள்ளார்கள்.14 வயது சிறுவனை பொலிஸார் இவ்வாறு துன்புறுத்தும் போது ஒரு கூட்டம் நின்று வேடிக்கை பார்த்துள்ளது.ஒருபக்கம் சமநிலையற்ற சம்பவத்தை பார்த்த வீதியில் இருந்த நாய்கள் செய்வதறியாது குறைக்கின்றது.இந் நிலையில் குறித்த சிறுவனின் தந்தையை பிரதேச வாசி ஒருவர் மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்துள்ளார்.பொலிஸாரிடமிருந்து தன் பிள்ளையை மீட்டு எந்த சைக்கிளில் சிறுவன் வந்ததோ அதிலே அச் சிறுவன் அழைத்து சென்றுள்ளார் தந்தை.
தன் மகனுக்கு நடந்த அநீதியை பற்றி மொஹமட் நஜீர் தெரிவிக்கையில்,
என்னுடைய மகன் தாரிக் அகமட் பெருநாளைக்கு மறு தினம் சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றார் .அவரிற்கு 14 வயது எனினும் அவரிற்கு கொஞ்சம் சுகமில்லை.
எனது மகனின் கைகள் கட்டப்பட்ட நிலையில் பொலிஸ் அரணில் வைத்து அடிப்பதாக பிரதேசவாசி ஒருவர் வந்து எனக்கு சொன்னார் .நான் உடனே சென்றேன்.நான் சென்று பார்த்த பொழுது கையை கட்டி அடிக்கின்றனர்.அங்கு மூன்று பொலிஸார் உட்பட போக்குவரத்து பொலிஸாரும் இருந்தனர்.ஏன் அடிக்கின்றீர்கள் என நான் வினவினேன் அதற்கு இவர் நன்றாக குடித்துள்ளார் அதனால்தான் அடிக்கின்றோம் என்று சொன்னார்கள்.சம்பவ இடத்தில் இருந்தவர்களும் என் மகனை அடித்துள்ளனர்.நான் பின்னர் நேரடியாக பொலிஸ் நிலையத்துக்கு சென்றனே்.இது தொடர்பில் எங்களுக்கு முறைப்பாடு கிடைக்கவில்லை என பொலிஸார் சொன்னார்கள் .ஊரடங்கு காரணமாக 14 நாட்கள் இவரை சிறைக்கு அனுப்ப நேரிடும் என்று சொன்னார்கள்.அதனால் சிறு வாக்கு மூலம் ஒன்றை வழங்கிவிட்டு அவசரமாக மகனை அழைத்து வந்து விட்டேன்.
நகரில் உள்ள ஒரு சில்லறை கடையில் வேலை செய்கின்றேன்.நான் மிகவும் கஷ்டப்பட்டு எனது மகனை வளர்க்கிறேன்.எனது மகனுக்கு ஆறு ,ஏழு வயது பிள்ளையின் செயற்பாடு இருப்பதாக வைத்தியர்கள் சென்னார்கள்.இவருக்கு புத்தி சுயாதீனம் குறைவு என்பதால் கவனமாக பார்த்துக் கொள்ளும்படியும் சொன்னார்கள்.அத்தோடு இவருக்கு கொஞ்சம் பேசவும் முடியாது.என்கிறார்.தன் மகனுக்கு நடந்ததற்கு நீதி வேண்டும் என்கிறார் கவலையுடன் அச் சிறுவனின் தந்தை.
குற்றங்களை செய்தாலும் எவ்வித விசாரணைகளும் இன்றி மனிதனை தாக்குவது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பதை இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பொலிஸ் துறையில் பணியாற்றும் இந்த பொலிஸார் அறிந்திருக்கவில்லையா என்பது புதிரானது.சாதாரண மனிதர்களே தவறுகள் செய்யும் நிலையில் மனநிலை குன்றிய இந்த சிறுவன் தாக்கப்பட்டதற்கும் அதனை வேடிக்கை பார்த்ததற்கும் இவர்கள் என்ன விளக்கத்தை சொல்வார்கள் என்பது எல்லோருடைய கேள்வியாக இருக்கின்றது.கட்டப்பட்டது அச் சிறுவனின் கைகள் அல்ல சட்டத்தின் கைகளே ஆகும்.
